அலுவலகப் பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்கும் சென்னை ’ஆஹா ஸ்டோர்ஸ்’

1

34 வயதான அசோகன் சட்டநாதன் டெலிகாம், ஆட்டோமோடிவ் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் விநியோக சங்கிலி மற்றும் மார்கெட்டிங் பிரிவில் தலைமைப் பதவி வகித்துள்ளார். ஏர்டெல், டாடா க்ரூப் நிறுவனங்கள், Eicher க்ரூப் ஆகிய நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். 2013-ம் ஆண்டு தொழில்முனைவில் ஆர்வம் ஏற்பட்டு BETA சொல்யூஷன்ஸ் என்கிற உத்திகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நிறுவினார். எனினும் மற்றொரு வாய்ப்பும் அவருக்குக் காத்திருந்தது.

கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் பாரம்பரியமான முறையைப் பின்பற்றி நெறிப்படுத்தப்பட்ட கொள்முதல் வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப செயலாக்கங்கள் ஆகியவற்றுடன் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வார்கள். ஆனால் மூலப்பொருட்கள் அல்லாத இதர பொருட்களை கொள்முதல் செய்யும்போது இப்படிப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

அலுவலகப் பொருட்கள் ரீட்டெயில் துறையைப் போலவே ஒழுங்குப்படத்தப்படாத துறையாகும். நிறுவனத்தின் 20 சதவீத கொள்முதலுக்காக சோர்சிங் முயற்சிகள், அனுமதி, நிறுவனத்தின் வளங்கள் ஆகியவை மிகப்பெரிய அளவில் தேவைப்படுகிறது.

100 வெவ்வேறு விற்பனையாளரிடமிருந்து ஆயிரக்கணக்கான யூனிட்களை 1000 பரிவர்த்தைனைகள் மூலமாக வாங்குவதற்குப் பதிலாக அலுவலக பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கவேண்டும் என்பதே அசோகனின் திட்டம்.

”தொழில்நுட்பம் பல கார்ப்பரேட் செயல்முறைகளை மாற்றியிருந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. கூட்டு கருவிகள், பிக் டேட்டா அனாலிடிக்ஸ், க்ளௌட் ஹோஸ்டட் டேட்டாபேஸ், இ-காமர்ஸ் தீர்வுகள் ஆகியவை பல காலங்களாக ஒதுக்கப்பட்டுவிட்டது,” என்று நினைவுகூர்ந்தார் அசோகன்.

பொருட்களை வாங்கும் செயல்முறைகள் சீரமைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை கண்டறிந்தார். அதாவது தேவைகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த செயல்முறை வாயிலாக பூர்த்திசெய்யலாம் என்பதைக் கண்டறிந்தார்.

ஸ்டார்ட் அப்பின் சேவைகளைப் பெறும்போது அவர்களது எதிர்வினையை மிகச்சரியாக பிரதிபலிக்கும் விதமாக அதன் பெயர் இருக்கவேண்டும் என்று விரும்பினார் அசோகன். அதேபோல் அவர்களது சேவையை பெற்றுக்கொண்டவர்களின் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே ஆஹா ஸ்டோர்ஸ் என பெயரிடப்பட்டது.

அலுவலக மேலாண்மை தொடர்பான அனைத்து வணிக தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வளிப்பதற்காக 2013-ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆஹா ஸ்டோர்ஸ். இது மூலப்பொருள் அல்லாத இதர பொருட்களுக்காக செலவிடப்படும் பிரிவைச் சேர்ந்ததாகும். வணிகங்கள் மூலப்பொருட்கள் அல்லாத இதர பொருட்களை கொள்முதல் செய்வதற்காக செலவிடப்படும் தொகையில் 20-30 சதவீதத் தொகையை சேமிக்க உதவுகிறது ஆன்லைனில் செயல்படும் B2B தளமான ஆஹா ஸ்டோர்ஸ். இதை அவர்களது விநியோக சங்கிலி, கூட்டு பேரத்தின் பலன்கள், வென்டார் நெட்வொர்க்கை சீரமைப்பது ஆகியவற்றின் மூலம் செயல்படுத்துகிறது.

வலுவான அடித்தளம்

ஆஹா ஸ்டோர்ஸ் அனுபவமிக்க ப்ரொபஷனல்களின் வலுவான பின்னணியுடன் துவங்கப்பட்டது. கோ-ப்ரொமோடர்ஸ்களில் ஒருவரான ஆஹா ஸ்டோர்ஸின் தற்போதைய சிஇஓவான ராஜாராமன் சுந்தரேசன், அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் தொழில்நுட்பத்தால் இயங்கும் ஸ்டார்ட் அப்களை நிறுவி இயக்கிய அனுபவமிக்கவர். மற்றொரு ப்ரொமோட்டரான ஸ்ரீ ஹரீஷ் டிசைனிங் மற்றும் இ-காமர்ஸ் வாயிலான செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் கட்டிங் எட்ஜ் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

”நாங்கள் அனைவரும் தொழில்முனைவோரைப் போலவே சிந்திக்கிறோம். அதிர்ஷ்ட்டவசமாக நடவடிக்கை சார்ந்த சுதந்திரத்தை அளிக்கும் பணி எங்களுக்குக் கிடைத்துள்ளது. லாப நஷ்டங்களுக்கு அனைவரும் பொறுப்பேற்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனமாக செயல்படுவதைக் காட்டிலும் வர்த்தகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படவே விரும்புகிறோம். எனவே துறையின் பல்வேறு தேவைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு வலுவான தளத்தை உருவாக்குவதில் எங்களது நேரத்தையும் வளங்களையும் செலவிட்டோம்.”

குழுவின் சுய சேமிப்பில் துவங்கப்பட்டது. 30 மாதங்களில் 4 கோடி ரூபாய் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின் SAAS தலைநகரான சென்னையில் ஆஹா ஸ்டோர்ஸ் அமைக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் நன்மை அளித்தது.

”நவீன க்ளௌட் சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் உத்தியை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதனால் மென்பொருள் டெவலப்மெண்ட் மற்றும் சிஸ்டம் இன்டெக்ரேஷன் பணிகளை நீண்ட நாட்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் விலைவாசி குறைவாக உள்ளதாலும் தேவையான வளங்கள் கிடைப்பதாலும் எங்களது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உதவுகிறது,” என்றார் அசோகன்.

வெற்றியடைவதற்காக வேறுபடுத்திக் காட்டுதல்

Nuoaura, Kobster, eSupply ஆகிய ஸ்டார்ட் அப்கள் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கியிருப்பினும் அலுவலக பொருட்களுக்கான இ-காமர்ஸ் செயல்பாடுகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. பயன்படுத்தப்படும் பாங்கு, செலவுகளுக்கான மதிப்பு மற்றும் திறன் சார்ந்த பிரச்சனைகள் ஆகியவை குறித்த நுண்ணறிவை நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஆஹா ஸ்டோர்ஸ் தனித்து விளங்குகிறது. இது நிறுவனங்களின் செலவைக் குறைத்து வளங்களை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

வளங்களின் பற்றாக்குறை மற்றும் பல்வேறு துறைசார் நிபுணத்துவத்தின் தேவை ஆகியவற்றைத் தவிர ஸ்டார்ட் அப்பில் வேறு எந்தவித சவால்களையும் சந்தித்ததில்லை என்று குறிப்பிடுகிறார் அசோகன்.

”தேவையற்ற குறுக்கீடுகளுக்காகவோ வேறு எந்தவித காரணங்களுக்காகவோ தாமதப்படுத்தாமல் விரைவாக தேவைக்கேற்ற தீர்வுகளுக்கான திட்டத்தை உருவாக்கி, வடிவமைத்து செயல்படுத்துவதன் காரணமாக நம்பமுடியாத அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.

வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்ய உதவுவதுடன் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் தானாகவே மறுஆர்டர் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது ஆஹா ஸ்டோர்ஸ். அதிக நேரம் செலவிட நேரும் பேப்பர்வொர்க் மற்றும் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு தேவைப்படுக்கிற மனித வளங்களின் தலையீடு ஆகியவற்றைக் குறைக்கிறது. ஆர்டர் நிலவரத்தை எந்த நேரமும் கண்காணிக்கலாம். சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களை எளிதாக கண்டறியவும் உதவுகிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட ஆஹா ஸ்டோர்ஸ் குழு ஆறு நகரங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றுகிறது. அனைத்து பிரபலமான தொழிற்சாலைப் பகுதிகள் மற்றும் வணிக மையங்கள் உள்ளிட்டவை அடங்கிய 20 நகரங்களில் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அலுவலகம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பெரிய விநியோகஸ்தர்கள், மூலப்பொருட்கள் அல்லாத இதரபொருட்கள், ஐடி ப்ராடக்டுகள், பரிசுப்பொருட்கள் ஆகிய பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு ஆஹா ஸ்டோர்ஸ் செயல்படுகிறது. மேலும் போக்குவரத்து மற்றும் பொருட்கிடங்கு சேவை வழங்குவோருடனும் இணைந்து செயல்படுகிறது.

வளர்ச்சி

ஆஹா ஸ்டோர்ஸ் ஸ்டேஷனரி, ஐடி தொடர்பான பொருட்கள், அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தை பராமரிக்க உதவும் பொருட்கள், காஃபெடேரியாவிற்குத் தேவையான பொருட்கள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தும் நுகர்வோரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு 10 கோடி ரூபாய் வரை மூலப்பொருட்கள் அல்லாத இதர பொருட்களை கொள்முதல் செய்வதற்கு செலவிடுகிறது.

ஆஹா ஸ்டோர்ஸ் விற்பனை செய்யும் 85 சதவீதத்திற்கும் மேலான தயாரிப்புகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

”நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பொருட்களை வழங்கும் திறன் கொண்டுள்ளோம்.” என்கிறார் அசோகன்.

இன்டஸ்இன்ட் வங்கி, பாஷ், விப்ரோ, ஐடிசி, சாம்சங், யெஸ் வங்கி, அசோக் லேலண்ட், சோலா உள்ளிட்ட பல வாடிக்கையார்களுக்கு சேவையளித்து கடந்த ஓராண்டில் வருவாய் மும்மடங்காக பெருகியுள்ளதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் நிறுவனம் தனது வருவாயை மூன்று மடங்காக (18.5 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயாக) உயர்த்தி அடுத்த மூன்றாண்டுகளில் 200 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளது.

100 கோடி இலக்கை எட்டுவதற்கு தயார்நிலையில் இருப்பதாகவும் லாபமோ அல்லது நஷ்டமோ இல்லாத நிலையை எட்ட தேவையான அளவு விற்பனை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறார் அசோகன்.

”வர்த்தக பொருட்களின் மீது லாபமும் மற்றொரு மாதிரியில் சேவை கட்டணம் வாயிலாகவும் நாங்கள் வருவாய் ஈட்டுகிறோம். தொழில்நுட்ப சேவைகளையும் வழங்கி தளத்தை பயன்படுத்துவதற்கான கட்டணமும் வசூலிக்கிறோம்,” என்று விவரித்தார் அசோகன்.

ஆஹா ஸ்டோர்ஸ் கடந்த மாதம் யுவர்நெஸ்ட் ஏஞ்சல் ஃபண்ட் தலைமையில் இயங்கும் முதலீட்டாளர் குழுவிடமிருந்து ஒரு மில்லியன் டாலர் pre-series A நிதியை இரண்டாம் சுற்றில் உயர்த்தியுள்ளது. 2016-ம் ஆண்டும் இதே தொகையை முதல் சுற்றில் இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

”கூடுதல் பிரிவுகளை இணைந்துக்கொண்டும் வாடிக்கையாளர் தொகுப்பை அதிகரித்தும் எங்களது சேவையை அதிக இடங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அசோகன்.

எதிர்கால திட்டம்

ஆஹா ஸ்டோர்ஸ் தற்சமயம் 140-க்கும் அதிகமான கார்ப்பரேட் பெருநிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து புதிய வாடிக்கையாளர்கள் இணைகின்றனர்.

”கடந்த இரண்டாண்டுகளாக மும்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளோம். புதிய இடங்களில் செயல்பட்டு இந்த வளர்ச்சியைத் தொடர்வோம். செயல்பாட்டு இழப்புகளோ அல்லது பண நஷ்டமோ ஏற்படவில்லை,” என்றார் அசோகன்.

ஆஹா ஸ்டோர்ஸ் தற்போது புதிய சந்தைகளில் செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஒன்று அல்லது இரண்டாண்டுகளில் லாபகரமாக செயல்படும் என்று நம்பிக்கைகொண்டுள்ளது. “BFSI மற்றும் IT துறைகள் எங்களது இலக்காகும். தற்போது செயல்படும் பகுதிகளில் சிறப்பான சந்தை அளவை கைப்பற்றிய பிறகு மற்ற பிரிவுகளில் கவனம் செலுத்துவோம்,” என்றார் அசோகன்.

20 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஸ்டேஷனரி சந்தையில் அலுவலக பொருட்கள் வாயிலாக பல நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம். எந்த வணிகத்திற்கும் சிக்கல்களில்லாத வடிவமைப்பு மற்றும் முறையான டெலிவரி ஆகியவையே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான முக்கிய அம்சங்களாகும். B2B பிரிவில் தொழில்நுட்பம், செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறு அமைந்து அவர்களது வளர்ச்சியடைய உதவவேண்டும். ஆஹா ஸ்டோர்ஸை இதை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்