'டிவி சீரியலில் இருந்து திருமண ஏற்பாட்டாளர் வரை'- நடிகை பூஜா காயின் தொழில்முனைவர் பயணம்!

க்யூங்கி சாஸ் பியில் இருந்து ட்ராங்க்வில் வெட்டிங்ஸ் வரை - தொலைக்காட்சி மற்றும் விளம்பர நடிகையுமான தொழில்முனைவர் பூஜா காயின் பயணம்

0

'க்யூன்கி ஸாஸ் பி கபி பாஹு தி' மற்றும் 'விரசத்' போன்ற நாடகங்களில், நல்ல மகளாக, திமிருள்ள மனைவியாக, இளவரசியாக என எண்ணற்ற வேடங்களில் நடித்துள்ள 39 வயதான பூஜா காய், ஒரு நடிகையாக, இப்போது தொழில்முனைவோராக பல பொறுப்புகளை எளிதாகச் சமாளிக்கிறார்.

திரைவாழ்வைப் போலவே நிஜத்திலும் பல வேடங்களை பல பொறுப்புகளை சுமக்கும் பூஜா காய், ஒரு 14 வயது மகனுக்குத் தாய் மற்றும் 'ட்ராங்வில் வெட்டிங்ஸ்' Tranquil Weddings நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனரும் ஆவார்.

நான் நடித்துக்கொண்டிருந்த போதும் தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தது. தொடக்கத்தில் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் வந்தன. மேலும் நான் செய்யும் வேலை பிடித்திருந்ததால் தனி தொழில் பற்றி யோசிக்கவில்லை. நல்ல நிகழ்ச்சிகள் குறையவும் நான் என் மனதில் இருப்பதை செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தை தொடங்கினாலும், அலுவலக நிகழ்வுகள், திருமணங்கள் அளவுக்கு அவரை அது ஈர்க்க வில்லை. உபசரிப்பு என்னும் பகுதி அவரைக் கவர்ந்ததால் திருமண உபசரிப்புக்குள் நுழையத் திட்டமிடுகிறார்.

ஏன் திருமண அமைப்புத் துறை

திருமணங்களில் புத்துருவாக்கம் மற்றும் கலைக்கு நிறைய இடம் உண்டு. உணவு, உபசரிப்பு, அழைப்பிதழ் வடிவமைப்பு, மணப்பெண் அலங்காரம், திருமணத்தின் தீம் என அனேக விஷயங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்துகிறார். சிறப்பான அனுபவத்துக்காக மணமக்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகி, அவர்களின் பந்தங்களைப் பற்றி அறிகிறார்.

"கூர்ந்து கவனிக்கும் திறனால் சிறு விஷயங்களை கவனித்து அந்த சிறப்பான நாளை வடிவமைத்தல் ஒரு திருப்தியான அனுபவம்" என்கிறார் பூஜா.

ட்ராங்வில் வெட்டிங்ஸ் (Tranquil Weddings)

எந்த இரு திருமணங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆனால் அதை உறுதிப்படுத்த பல நுணுக்கமான விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் பெண் வீட்டார் இடத்தில் நிகழும் திருமணங்கள் ஆகையால், பூஜா பயணப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பியானி, தூத் குடும்பங்கள், நேபாளக் கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி என பல பெரும்புள்ளிகள் வீட்டுத் திருமணங்களை பூஜா ஒருங்கிணைத்துள்ளார். 

30-40 பேர் கொண்ட எங்கள் குழு எல்லாவற்றையும் ஒத்திகை பார்க்கும். மணமக்கள் நடந்து வருதல், பிற பொருட்கள் வந்து சேருதல், ஒலி-ஒளி அமைப்பு உட்பட. சுமார் ஆறு வருடங்கள் என்னோடு இருந்ததனால் அவர்களுக்கு என் வேலையின் விதமும் எதிர்பார்ப்பும் தெரியும். மணமக்களின் குடும்பத்தாருக்கு ஆகச் சிறந்த அனுபவங்களைத் தந்து அவர்கள் கேட்பது அனைத்தையும் அமைத்துத் தர வேண்டும். அது அடுத்த நான்கு மணி நேரத்தில் மணமகனுக்கு ஹெலிகாப்டர் சவாரியாக இருந்தாலும் சரி.

காட்சிக்கு எளியாள்

எது உங்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது எனக் கேட்கையில், எங்கள் மூலம் ஏற்கனவே அவர்கள் வீட்டு திருமணங்களை நடத்தியவர்கள், வாய்மொழியாகப் பிறரிடம் கூறுவதுதான் என்கிறார். மற்றவர்களிடம் இருந்து எது உங்களை வேறுபடுத்துகிறது எனக் கேட்டால்? நான் அந்தக் குடும்பத்தாருடன் ஏற்படுத்தும் தொடர்புகள்தான் என்கிறார்.

அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களோடு அமர்ந்து உண்டு என நான் ஏற்படுத்தும் நட்பு அருமையானதாக ஆகிவிடுகிறது.

தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தாலும் அணுகுவதற்கு எளிமையானவராக இருக்கிறார்.

தொலைக்காட்சி அனுபவங்கள்

பேச்சு அப்படியே தொலைக்காட்சி மற்றும் விளம்பரத்துறை வாழ்க்கை நோக்கிப் போகும் போது தான் அதை மிகவும் ரசித்ததாகக் கூறுகிறார். சில சமயம் ஒரே நாளில் பல படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலை இருந்ததாகக் குறிப்பிடுகிறார்,

இளைப்பாறுதல்

பூஜாவின் வாழ்க்கை, நேரமின்மைக்குப் பெயர் போனது. தற்போதைய வேலையில் அவர் பல இடங்களுக்குச் சென்று வர வேண்டும். "நாமே நம்முடைய முதலாளியாக இருக்கையில் நம் நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிக்கலாம். இந்தத் துறையில் ஜூன் முதல் செம்பம்பர் வரை திருமணங்கள் பெரிதாக நடைபெறாததால் அப்போது நிறைய நேரமிருக்கும். அந்த நேரத்தை நான் குடும்பத்தோடு செலவழித்து, விடுமுறைச் சுற்றுலாவை அப்போது அமைத்துக்கொள்கிறேன்" என்கிறார்.

பூஜாவின் அம்மா அவருக்குத் துணையாய் இருந்திருக்கிறார். பூஜாவின் மகன் பிறந்ததில் இருந்து அவருடனே இருந்து, அவர் வெளியூர் செல்கையில் எல்லாம் மகனை கவனித்துக் கொண்டுள்ளார். "என் கூடவே இருந்து என்னை ஊக்கப்படுத்தி எனக்குப் பக்கபலமாய் இருந்திருக்கிறார்" என்கிறார்.

ஐந்து வருடங்களுக்குப் பின்?

பூஜாவைப் பொறுத்தவரை வாழ்க்கை துருவங்களால் ஆனது கிடையாது. சமநிலையைக் கொண்டுவருதல் தான் வாழ்க்கையின் நோக்கம் என்கிறார். ஒரு திருமணத்திற்குப் பின் மணமக்கள் குடும்பத்தாரின் திருப்தியும் அன்பும் அவரை மேலும் ஊக்கப்படுத்துவதாகக் கூறுகிறார்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு உலகம் முழுக்க விரிந்து பல்வேறு இடங்களில் அலுவலகங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அது லண்டன், துபாய், ஹாங்காங் அல்லது நியூ ஜெர்ஸி என எங்கு வேணாலும் இருக்கட்டும். அங்கெல்லாம் சென்று புது அமைப்புகள் புது இடம் என திருமணங்களை அமைக்க ஆசைப்படுகிறார்.

கட்டுரை ஆங்கிலத்தில்: தன்வி துபே | தமிழில்: சௌம்யா சங்கரன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'வானமே எல்லை': நடிகை தாப்ஸி, சினிமா முதல் தொழில்முனைவு வரை!

நடிகை, முதலீட்டு வங்கியாளர், தொழில்முனைவர் என பல்முகம் கொண்ட சுமா பட்டாச்சார்யா!