ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளைத் திறந்துள்ள ரிக்‌ஷா ஓட்டுநர்!

0

நம் நாட்டில் பலர் வாழ்வாதாரத்திற்கான அடிப்படையே வசதிகளே கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குடும்பத்தை பராமரிக்க இளம் வயதிலேயே வேலைக்கு செல்லத் துவங்குகின்றனர். இதனால் இவர்களுக்கு கல்வி என்பது எட்டாக் கனவாகவே மாறிவிடுகிறது. கல்வி பயிலாத ஒரு நபர் கடந்த 40 ஆண்டுகளாக பலருக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து வருகிறார்.

அசாமின் கரீம்கஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்த அஹ்மத் அலி ரிக்‌ஷா ஓட்டுநர். குடும்பச் சூழல் காரணமாக இவரது படிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டது. அவர் தனது வாழ்க்கையை வறுமையில் கழித்த போதும் அடுத்த தலைமுறைக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.

அஹ்மத் தனது நிலத்தை விற்பனை செய்து பள்ளிகள் கட்டி குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். அவர் தனது பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஒன்பது பள்ளிகள் திறந்துள்ளார்.

அஹ்மத் தனது குடும்பத்தை நிர்வகிக்க மிகவும் இளம் வயதிலேயே ரிக்‌ஷா ஓட்டத் துவங்கியதாக தெரிவித்தார். இது போன்ற காரணங்களுக்காக அடுத்த தலைமுறையினர் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்பதே அவரது நோக்கம். படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடாகும். இதனால் ஆதாரமே வலுவிழந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

பள்ளிகள் திறக்கவேண்டும் என்கிற அவரது கனவை நிறைவேற்ற அவரது நிதி நிலைமை கைகொடுக்கவில்லை. எனவே நிலத்தை விற்பனை செய்து பணம் ஏற்பாடு செய்தார். கிராம மக்களிடம் இருந்தும் பணம் சேகரித்தார். இறுதியில் 1978-ம் ஆண்டு தனது முதல் பள்ளியைத் திறந்தார்.

இதுவரை மூன்று ஆரம்ப துவக்கப் பள்ளிகளையும், ஐந்து ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலைப் பள்ளிகளையும் ஒரு உயர்நிலைப் பள்ளியையும் கட்டியுள்ளார். விரைவில் ஒரு கல்லூரி கட்டவும் விரும்புகிறார். இவருக்கு இரண்டு மனைவிகளும் ஏழு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தனது பள்ளி வாயிலாக வருவாய் ஈட்ட விரும்பவில்லை என்றும் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல பணியில் அமர்வதை பார்ப்பதே தனது திருப்தி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

கட்டுரை : THINK CHANGE INDIA