’ஆரம்பம்’ – தொழில் முனைவர்கள் ஆக விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு புதுயுகப் போட்டி அறிவிப்பு!

0

மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் 'நேட்டிவ் லீட்', இந்திய தொழில் கூட்டமைப்பான 'சிஐஐ' மற்றும் 'யங் இந்தியன்ஸ்' ஆகிய அமைப்புகள் இணைந்து ’ஆரம்பம்’ என்னும் தொழில் முனைவுப் போட்டியை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அத்தகைய போட்டியை நடத்தவுள்ளனர்.

இது குறித்து நேட்டிவ் லீட் அமைப்பின் நிறுவனர் சிவராஜா ராமநாதன், மதுரை யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் விஜய தர்ஷன் ஜீவகன், துணைத் தலைவர் குணசேகர் ஆகியோர் ’ஆரம்பம்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

தொழில் முனைவு என்னும் இந்த வார்த்தை உலகின் பெருநகரங்களையும் தாண்டி பல சிறு ஊர்களிலும் தனது கிளைகளைப் பரப்பி பரந்து விரிந்து இருக்கிறது என்று கூறினால் அது மிகை ஆகாது. இத்தகைய தருணத்தில் தொழில் சார்ந்த நோக்கத்துடன் அதனை முன்னெடுத்துச் செல்ல சிறந்ததொரு வழிகாட்டுதலை எதிர்பார்த்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு இந்த போட்டியானது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மாணவர்களிடையே உள்ள தொழில் முனைவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த போட்டியானது வழிவகை செய்கிறது. மாணவர்கள் ஒரு பிரிவாகவும் இளம் தொழில் முனைவாளர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக ஆரம்பம் போட்டி நடத்தப்படுகிறது.

”இன்றைய நாட்களில் தொழில் முனைவோர் கிடைக்கும் வாய்ப்புக்களை தனதாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் போட்டி நிறைந்த இந்த உலகில் வெற்றியாளராக வலம் வர முடியும்.”

நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்து, உங்கள் வாழ்கையை சிறந்த முறையில் கட்டமைக்க வேண்டி ஒரு தொழில் முனைவு சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருகிறீர்கள் என்றால் நீங்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

உங்களிடம் தொழில் முனைவு திட்டம் இருக்கிறது அதனை நடைமுறையிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறீர்கள் ஆனால் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்பையும் வழிகாட்டுதல்களையும் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

வெற்றி பெறும் தொழில் முனைவாளருக்கு நேட்டிவ்லீட் அமைப்பின் முதலீட்டுக் கரமான நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வர்க் மூலம் நிதியுதவிக்கான ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

ஆரம்பம் தொழில் முனைவு போட்டியானது வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவர்களுக்கும் மாணவர்களுக்கும் தங்களின் திறனை வெளிப்படுத்தும் சிறந்ததொரு தளமாக அமையும். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இளம் சமூகத்தினர் வெற்றி பாதையில் மேலும் ஒரு அடியை எடுத்து வைக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

* விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் விபரங்களையும் அதனுடன் தொழில் முனைவு திட்டத்தின் விளக்கக் காட்சியையும் (Presentation) www.aarambam.in என்ற இணைய தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

* விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05 ஜனவரி, 2018.

* தேர்ந்தெடுக்கப்படுவோருக்கான முதற்கட்ட தகுதிச் சுற்று 12 ஜனவரி, 2018 அன்று நடைபெறும்.

* இறுதி சுற்று 16 பிப்ரவரி, 2018 அன்று நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும்.