இந்திய பாரம்பரிய பொருட்களை இணைய வழியில் வழங்கும் 'பைண்ட்பைண்ட்'

2

இந்தியக் கலாச்சாரம் மற்றும் அதன் வளமான பாரம்பரிய ஆர்வலர்களுக்கான இணைய வழிச் சேவையை வழங்கிவருகிறது "பைண்ட்பைண்ட்.காம்"(BindBind.com). தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை முதல் மணப்பாறை முறுக்கு வரை இந்தியாவின் பிரத்தியேக பாரம்பரிய பொருட்கள் வாங்க ஏதுவான ஆன்லைன் தளமாக திகழ்கிறது பைண்ட் பைண்ட்.

பொறியியல் பட்டதாரிகளான பரத் சண்முகசுந்தரம் மற்றும் ரவிசங்கர் சிங்காரம், ஆகிய இருவரால் அக்டோபர் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டது பைண்ட் பைண்ட். மளிகை, இயற்கை பொருட்கள், அழகுப் பொருட்கள், இனிப்பு மற்றும் தின்பண்டங்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இணைய வழியில் விற்பனை செய்கிறது பைண்ட் பைண்ட். இந்திய நாட்டை முன்னிறுத்தி, இந்தியா மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களிடையே இந்திய கலாச்சாரத்தை நிலை நாட்டும் சிந்தனையோடு துவக்கப்பட்டது இது.

இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர் மேலாண்மை இயக்குனரான பரத் தனது பயணத்தைப் பற்றி தமிழ் யுவர் ஸ்டோரி யுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் இதோ...

தொடக்கம்

கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட பரத், கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பயின்றார், அவர் 'பைண்ட் பைண்ட் இல் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர் மேலாண்மை பணி பொறுப்புகளை கவனித்து வருகிறார். இணை நிறுவனரான ரவி, சென்னையில் பொறியியல் பயின்றவர், தற்போது பைண்ட் பைண்ட் இல் தயாரிப்பு மேலாண்மை மற்றும் வணிக உத்திகளை நிர்வகிக்கிறார்.

இருவரும் பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார். மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இருவரும் 6 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பிற நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, பின் பைண்ட் பைண்ட் துவங்க மீண்டும் பெங்களூர் திரும்பினர்.

"அமெரிக்காவில் இருந்த போது, நாங்கள் இந்தியாவின் பிரத்தியேக பாரம்பரிய பொருட்கள் வாங்க இயலாத நிலை இருந்தது மற்றும் உலகச் சந்தையில் இந்திய பொருட்களின் விற்பனையில் பற்றாக்குறை இருப்பதை உணர்ந்தோம். தலைமுறைகளாக இருந்து வரும் நம் மொழி, பண்பாடு, மரபு மற்றும் பல விஷயங்களை காக்கவும் அதிலுள்ள இடைவெளியை ஈடுகட்டும் முயற்சியாகவும் 'பைண்ட் பைண்ட்' தொடங்கப்பட்டது" என்கிறார் பரத்

சூழல்

"சிறு தொழில்களிலுள்ள தடைகளை புரிந்து கொள்ள சில சமூக நல ஆர்வலர்களின் உதவியை நாடினோம். சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்கத் தேவை இருக்கிறது என்று உணர்ந்தோம். எனவே பிரத்தியேக பாரம்பரிய பொருட்களை தேர்வு செய்தோம்".

பரத் மற்றும் ரவி உகந்த தீர்வை எட்டுவதற்காக விற்பனையாளர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள அவர்களை நேரில் சந்தித்தனர். விற்பனையாளர்கள் சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து, அவர்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் ஒரு கூட்டமைப்பாக ஆக்க சாத்தியம் உள்ளது என்று கண்டறிந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பங்களிப்பு

“குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து நிதி திரட்டி மூன்றே உறுப்பினர்களை கொண்ட குழுவாகத் தொடங்கி, இப்போது 15 உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது பைண்ட் பைண்ட். இப்போது இந்தியா முழுவதும் நமது பாரம்பரிய பொருட்கள் வினியோகத்தை தொடங்கியுள்ளோம். மற்ற நாடுகளுக்கு வினியோகிப்பதர்க்கான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. துவங்கிய நாள் முதல் சுமார் 500 ஆர்டர்களை எட்டியுள்ளோம்” என்கின்றனர்.

சிறு தொழில்களுக்கு உலகின் கதவுகள் திறக்கும் போது கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு சிறு தொழிலும் பயனடைகிறது. பொருட்களின் இயல்பையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க, அவற்றை உற்பத்தி செய்யப்படுகிற இடங்களில் இருக்கும் நண்பர்களும் உறவினர்களும் அப்பொருட்களை கொள்முதல் செய்ய உதவியுள்ளனர்.

விரிவாக்கத் திட்டங்கள்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பொருட்கள் மற்றும் விற்பனையாளர்களை சேகரித்து ஆன்லைன் தளம் மூலம் உலகச் சந்தையில் இந்திய பாரம்பரிய பொருட்களை கிடைக்கச் செய்கிறது பைண்ட் பைண்ட்.

“தேநீர் விற்பனையாளர் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை ஒவ்வொரு நாளும் அனைவரிடமும் இருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். அவர்களே எங்கள் வழிகாட்டி. நாம் இலக்கியங்களில் கற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைத் தத்துவங்களை அவர்கள் உண்மையான அனுபவங்களின் மூலம் நமக்கு வழிகாட்டியாய் இருந்து கற்றுத்தருகின்றனர்” என்று நம்புகிறார் பரத்.

இணையதள முகவரி: BindBind