பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் பிரச்சனையை போக்க விவசாயம் மூலம் தீர்வு கண்டுள்ள இளைஞர்!

0

பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. ஜலந்தரில் வளர்ந்த அனுராக் அரோரா தனது மாநிலத்தில் இருக்கும் குழந்தைகளும் இளைஞர்களும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவவேண்டும் என விரும்பினார். தொடர்பற்ற இரு வேறு பிரிவுகளான விவசாயத்தையும் கல்வியையும் பயன்படுத்தி நாட்டை மேம்படுத்துவதில் பங்களிக்கவேண்டும் என்பதே இவரது நோக்கம். 2017-ம் ஆண்டு நிறுவப்பட்ட மின்க் இந்தியா (MINK India) சுத்தமான உணவு மற்றும் நல்ல ஆரோக்கியத்திலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதிலும் கவனம் செலுத்துகிறது.

28 வயதான அனுராக் ’டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ முன்னாள் மாணவர். இவர் ட்ரைடெண்ட் இந்தியாவில் மனிதவளத் துறைத் தலைவராக பணியாற்றியபோது தனது பணியைத் துறந்து ஸ்டார்ட் அப் துவங்க திட்டமிட்டார். போதை மருத்தின் அபாயத்தைக் கண்டு இதை சமாளிக்க கல்வியையும் விவசாயத்தையும் ஒன்றிணைக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்.

”மின்க் இந்தியா 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் இரு பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். விவசாயம் மற்றும் கல்வித் துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் இதிலுள்ள சில பிரச்சனைகளுக்கு தற்போது தீர்வுகாணவில்லை எனில் அது எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சமூகத்தில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்த படித்த இளைஞர்கள் முன்வரவேண்டும் என நினைக்கிறேன்,” என்றார்.

சிறிது காலத்திற்குப் பிறகு அவரும், இணை நிறுவனரும் அவரது மனைவியுமான ஜெயதி அரோராவும் இணைந்து மின்க் இந்தியாவின்கீழ் மின்க் ஆர்கானிக்ஸ், மின்க் அகாடமிக்ஸ் எனும் இரண்டு முயற்சிகளைத் தொடங்கினார்கள். இவை ஆரோக்கியமான உணவு மற்றும் கல்வியை வழங்கி இந்தியாவை மேம்படுத்துவதற்காக துவங்கப்பட்ட முயற்சியாகும். இந்த ஸ்டார்ட் அப்பில் தனது சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்தார். இந்த ஸ்டார்ட் அப் தற்போது 6 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது.

ஆர்கானிக் விவசாயம்

அனுராக் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் வெஜிடபிள்ஸ் இண்டோ-இஸ்ரேல் ப்ராஜெக்ட், கர்தார்புரில் இருந்து பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடியில் சான்றிதழ் பெற்றுள்ளார். அத்துடன் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் வெஜிடபிள்ஸ், கர்தார்புரில் ஆர்கானிக் விவசாயத்தில் பயிற்சி பெற்றார்.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நான் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். எனவே விலைமலிவான ஆர்கானிக் மாற்றுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளேன். குழந்தைகள் விவசாயம் குறித்து தெரிந்துகொண்டு அதில் ஆர்வம் காட்டவேண்டும் என விரும்பினேன். இதனால் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும்,” என்றார் அனுராக்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட மின்க் ஆர்கானிக்ஸ் மொட்டைமாடியில் மேற்கொள்ளப்படும் ஆர்கானிக் காய்கறி விவசாயத்தில் கவனம் செலுத்துகிறது. இதற்கான ஆலோசனையும் வழங்குகிறது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு இண்டெர்ன்ஷிப்பும் வழங்குகிறது. மைக்ரோக்ரீன், சிப்பி காளான், முளைகட்டிய ஆர்கானிக் பயிர் வகைகள், ஆர்கானிக் காய்கறிகள், முழு கோதுமை மாவு உள்ளிட்ட மண்புழு உரம் மற்றும் மண்ணில்லா வளர்ப்பு முறையில் உற்பத்தியாகும் ஆர்கானிக் பொருட்களை சாகுபடி செய்து விற்பனை செய்கிறது. உணவு பதப்படுத்தும் பணியிலும் கோதுமைதளிர் சாறு, வெயிலில் காயவைக்கப்பட்ட காளான், தக்காளி போன்ற பொருட்களை வழங்கும் பணியிலும் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஃப்ரெஷ்ஷான, சத்தான, விலை மலிவான, விரைவாக வளரக்கூடிய உணவு வகைகளில் செயல்பட விரும்பியதால் முளைகட்டிய தானியங்கள் மற்றும் மைக்ரோக்ரீனில் கவனம் செலுத்தத் துவங்கினேன். சிறியளவிலான ஒரு உற்பத்தியுடன் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தையில் இடம்பெறவேண்டும் என்பதே திட்டமாகும்,” என்றார்.

இக்குழுவினர் பி2பி விற்பனையில் ஈடுபட்டு அமேசான் இந்தியாவிலும் பொருட்களை விற்பனை செய்கின்றனர். மின்க் ஆர்கானிக்ஸ் ஜலந்தர் முழுவதும் சுமார் 25 கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்கானிக் வாழ்க்கை

மின்க் ஆர்கானிக்ஸ் 50 கிலோ காளான் வளர்க்கத் துவங்கி அடுத்த இரண்டு மாதங்களில் 200 கிலோ காளான் வளர்த்தது. தற்போது 4,000 கிலோ காளான் வளர்ப்பை இலக்காகக் கொண்டுள்ளது. மின்க் எட்டு மாதங்களில் முள்ளங்கி, சைனீஸ் கேபேஜ் (pak choi), வெங்காயம், பீட்ரூட், அல்ஃபல்பா, ப்ரொக்கோலி, கோல்ராபி, முட்டைகோஸ், காலிஃபளர்வர் மைக்ரோக்ரீன்ஸ் உள்ளிட்ட12 பொருட்களை வழங்கத் துவங்கியது.

இந்த ஸ்டார்ட் அப் மண்ணில்லா முறையில் பல்வேறு இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு மைக்ரோக்ரீன் மற்றும் கோதுமைதளிர் வளர்க்கிறது. USDA அங்கீகரித்த ஆர்கானிக் தானியங்களைக் கொண்டு வடிகட்டிய தண்ணீரில் சுத்தமான சூழலில் முளைகட்டும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 100 சதவீத ஆர்கானிக் கோதுமையில் இருந்து கோதுமை மாவு தயாரிக்கப்படுகிறது.

”மக்கள் தங்களது வீட்டிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்க்க ஊக்குவிக்கிறோம். இதனால் அவர்கள் சாப்பிடும் உணவு குறித்த புரிதல் அவர்களுக்கு இருக்கும். அவ்வாறு செய்ய இயலாதவர்களுக்காகவே நாங்கள் ஆர்கானிக் காய்கறிகளை வழங்குகிறோம்,” என்றார் அனுராக்.

மாடித்தோட்டம் மற்றும் பிற தோட்டங்கள் அமைக்கவும் தக்காளி, செர்ரி தக்காளி, மிளகு, கேரட், கத்திரிக்காய், ப்ரொக்கோலி, மிளகாய், மைக்ரோக்ரீன் போன்றவற்றை வளர்க்கவும் இவர் ஆலோசனை வழங்குகிறார்.

புதிய முயற்சிகள்

குழந்தைகளை எதிர்காலத்திற்கு சிறப்பாக தயார்படுத்த உதவும் வகையில் அனுராக் மின்க் அகாடமிக்ஸ் முயற்சியிலும் ஈடுபட்டார். இதில் உளச்சார்பு, கல்வியியல் உளச்சார்பு, மொழி அறிந்துகொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு தேசிய அளவிலான திறன் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜலந்தரில் உள்ள கேம்பிரிட்ஜ் பெண்கள் சர்வதேச பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுடன் இணைந்துள்ளது. தேசிய நிதி எழுத்தறிவு மதிப்பீடு தேர்விற்கான (National Financial Literacy Assessment Test) பயிற்சியும் கையெழுத்து மேம்படுத்துவதற்கான வகுப்பும் எடுக்கப்படுகிறது.

தற்சமயம் மின்க் அகாடமிக்ஸ் 8 பாடங்களை வழங்குகிறது. பயிற்சி மையத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.

”மின்க் இந்தியா வயது வித்தியாசமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விவசாயம் குறித்து கற்பிக்க விரும்புகிறது. விவசாயத்தின் பின்னணி, முக்கியத்துவம், நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது விவசாயத்தை தொழிலாக மேற்கொள்ள ஊக்குவிக்கும். ஜப்பானில் மாணவர்கள் தங்களது பள்ளிகளை தாங்களாகவே சுத்தம் செய்ய ஊக்குவித்து ஒழுக்கத்தை கற்பிக்கின்றனர். மாணவர்கள் செய்வதன் மூலமே கற்றுக்கொள்கின்றனர். இவ்வாறுதான் விவசாயத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

அனுராக் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறார். பயிற்சிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு விவசாய நடைமுறைகள் குறித்து பயிற்சியளித்து ஆர்கானிக் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

விவசாய ஸ்டார்ட் அப்பைப் பொருத்தவரை நிச்சயமற்ற பருவநிலை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஈரப்பதம் நிறைந்த அல்லது குளிர்ந்த வானிலையால் உலர் தக்காளிகள் மற்றும் காளான் வளர்ப்பு சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஏனெனில் இவை எளிதாக பூஞ்சை பிடித்துவிடும். சூரிய உலர்த்திகள் இந்த பிரச்சனைக்கான தீர்வாக கருதப்பட்டாலும் அதற்கான நிதி சிக்கலாக இருப்பதால் நிதி உயர்த்த விரும்புகிறார்.

பூச்சிக்கொல்லிகள் இல்லாத உணவை உட்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதன் சத்துகளையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்கானிக் விளைச்சல் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் அனுராக் வருங்காலத்தில் நிதி உயர்த்த விரும்புகிறார். பள்ளிகளுடன் இணைவதன் மூலமும் தோட்டங்களுக்கான ஆலோசனை வழங்குவதன் மூலமும் வருவாயை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

”பஞ்சாபின் முக்கிய நகரங்கள் முழுவதும் என்னுடைய வணிகத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு முயற்சியையும் நிதானமாகவும் கவனத்துடனும் செயல்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அனுராக்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL