ஆதார் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்களும், கருத்துக்களும்!

0

ஆதார் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு பெற ஆதார் எண் தேவையில் என்றும், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவலை பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் திட்டம் அந்தரங்க மீறல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுகளை விசாரித்து, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு சார்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதி ஏ.கே.சிக்ரி வாசித்தார். 

4 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு வழங்கினர். எனினும் நீதிபதி சந்திரசூட் மற்றும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். ஆதார் சட்டம் நிதி மசோதா வடிவில் அமல் செய்யப்பட்டது, அரசியல் சாசனத்தை ஏமாற்றும் வேலை என அவர் தெரிவித்தார்.

படம்; மிண்ட்
படம்; மிண்ட்

ஆதார் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

• வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு பெற ஆதார் எண் அவசியம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே வருமான வரி தாக்கல் செய்பவர்கள் மற்றும் பான்கார்டு பெறுபவர்கள் ஆதார் எண்ணை புறக்கணிக்க முடியாது.

• பெரும்பாலான வங்கிகள், பேமெண்ட் வங்கிகள் மற்றும் மொபைல் வாலெட் நிறுவனங்கள் ஆதார் எண்ணை சமர்பிக்க கோரி வருகின்றன. ஆனால் வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் மற்றும் பிற அமைப்புகள் இனி ஆதார் எண்ணை கோர முடியாது.

• செல்போன் சேவை நிறுவனங்கள் புதிய சிம் வழங்க ஆதார் எண் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கே.ஒய்.சி நடைமுறையே இதற்கு போதுமானது. நீதிபதி சந்திரசூட் செல்போன் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை அழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

• சிபிஎஸ்.இ, நீட் மற்றும் யுஜிசி தேர்வு எழுதும் மாணவர்கள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை. பள்ளிகள் கூட மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண்ணை வலியுறுத்தக்கூடாது.

• அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியம் பெற ஆதார் எண் அவசியம்.

• எனினும் எந்த ஒரு குழந்தையும் ஆதார் எண் இல்லாத காரணத்தால் மதிய உணவு பெற முடியாத நிலை ஏற்படக்கூடாது.

• ஆதார் சட்டத்தின் 57 வது பிரிவு ரத்து செய்யப்பட்டிள்ளது. இதன் படி தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை கோர முடியாது.

• ஆதார் சட்டத்தின் கீழ், தேசிய பாதுகாப்பு விலக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் அந்தரங்கம் பாதுக்காக்கப்படுவதோடு, அரசு இந்த தகவல்களை அணுகுவதும் கட்டுப்படுத்தப்படும்.

• ஆதார் திட்டம் அந்தரங்க மீறல் இல்லை என்றும், குறைவான தகவல்களே சேகரிக்கப்படுவதாகவும் நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார்.

• ஆதார் திட்டத்தை அலசி பார்த்தபோது, அதில் உள்ள தகவல்களை கொண்டு ஒருவரைப்பற்றிய அடிப்படை சித்திரத்தை உருவாக்குவது கடினம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் வழக்கு தீர்ப்பு குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் சோலி சோராப்ஜி, இந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று கூறியுள்ளார். மொத்தமாக இது நல்ல தீர்ப்பு என்றாலும், தனிப்பட்ட முறையில் நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதார வல்லுனரான ரீத்திகா கேரா, இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும் தோல்வி அடைந்ததாக உணரவில்லை என்று கூறியுள்ளார். 57 வது பிரிவை ரத்து செய்தது தவிர மக்களுக்கு இதன் மூலம் அதிக நிவாரணம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

சட்ட வல்லுனரான உஷா ராமநாதன், பெரும்பான்மை தீர்ப்பு அரசின் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், மாறுபட்ட தீர்ப்பு, மக்களை நலனை கருத்தில் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, சிம் கார்டு வாங்க ஆதார் எண் தேவையில்லை, வங்கி கணக்கு போன்றவற்றுக்கு ஆதார் எண் தேவையில்லை என்பதும் அமைகிறது. இதனையடுத்து, ஏற்கனவே ஆதார் எண்ணை சமர்பித்தவர்கள் அவற்றை நீக்க வாய்ப்பு அளிக்குப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆதார் விதிமுறைகளின் படி யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை விலக்கி கொள்ளலாம். வங்கி அல்லது செல்போன் சேவை நிறுவனத்திற்கு எழுத்து பூர்வமான கோரிக்கை அளித்து ஆதார் தகவல்களை விலக்க கோரலாம்.

ஆதார் எண் தகவல்களை விலக்கி கொள்ளும் நடைமுறை தொடர்பான தெளிவு வரும் நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்ப்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும், நிறுவனங்கள் இது தொடர்பான நடைமுறையை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.