கூகுள் கிளாஸ் போன்ற மூலச் சேவையை இந்தியாவில் உருவாக்க விரும்பும் இளைஞர்

0

இணையத்தின் வேகம் பொதுவாக நொடிக்கு இத்தனை மெகா பிட்ஸ் என குறிப்பிடப்படுகிறது. அதாவது தகவல்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க, நொடிக்கும் குறைவான நேரமே ஆகிறது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தொழில்நுட்பம் வந்து சேர ஆண்டுக்கணக்கில் ஆகலாம். இருந்தாலும் கற்பதில் உண்மையான ஆர்வம் மற்றும் வேட்கை கொண்டவர்களுக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அக்‌ஷய் தியோ ( Akshay Deo ) இந்த ரகத்தைச்சேர்ந்தவர் தான்.

27 வயதான அக்‌ஷய், மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்தவர். 1989 ல் சாப்ட்வேர் நிறுவனத்தை துவக்கிய தந்தையிடம் இருந்து அவர் கம்ப்யூட்டர் ஆர்வத்தை உண்டாக்கிக் கொண்டார். பஞ்ச் கார்டு முறையில் செயல்படத்துவங்கியவர் அப்போதே பேசிக் மொழியில் நிரல் எழுதினார். இந்த அனுபவம் கம்ப்யூட்டர் ஆர்வத்தை அதிகமாக்கியது. “எதிர்காலத்தைப்பொருத்தவரை அது கம்ப்யூட்டர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்பினேன்” என்கிறார் அக்‌ஷய்.

அக்‌ஷய் தியோ, பீட்டா கிராப்ட் ,சிடிஓ , வலப்பக்கம் இரண்டாவதாக இருப்பவர்
அக்‌ஷய் தியோ, பீட்டா கிராப்ட் ,சிடிஓ , வலப்பக்கம் இரண்டாவதாக இருப்பவர்

சிறு வயதில் இருந்தே அவர் பலவற்றில் திறன் மிக்கவராக இருந்திருக்கிறார். கம்ப்யூட்டரில் சோதனை செய்து கொண்டிருந்த போது புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக்கில் ஆர்வம் ஏற்பட்டு அதில் சோதனைகளை மேற்கொண்டார். அவரது தந்தை சாப்ட்வேர் நிறுவனத்தை விற்றுவிட்டு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றத் துவங்கினார். அந்த நிறுவனம் இருப்பு மற்றும் கொள்முதலை நிர்வகிப்பதற்கான சாப்ட்வேரை அக்‌ஷய் உருவாக்கி கொடுத்தார்.

கம்ப்யூட்டர்களிலேயே தனது எதிர்காலம் இருப்பது பற்றிய உறுதியில் 2006 ல் அவர் புனே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (பிஐசிடி) கம்ப்யூட்டர் சயன்சில் இளங்கலை படிப்பில் சேர்ந்தார்.

அப்போது தான் ஆண்ட்ராய்டு அறிமுகமாகி இருந்தது. அக்‌ஷய் மற்றும் நண்பர்கள் அதில் ஆர்வம் காட்டினர். 2009ல் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து கம்ப்யூட்டரை அணுக உதவும் செயலி எதுவும் இல்லாமல் இருந்தது. மைக்ரோசாப்டின் ரிமோட் டெஸ்க்டாப் நல்ல தேர்வாக இருந்தாலும், கம்ப்யூட்டரில் மட்டுமே செயல்படக்கூடியதாக இருந்தது. ரிமோட் டெஸ்க்டாப் அமைப்பை பயன்படுத்தி அவர் ஆம்னிடெஸ்க் செயலியை உருவாக்கினார். இந்த செயலி மூலம், கம்ப்யூட்டரில் கிளயண்ட் இன்ஸ்டலேஷன் இல்லாமலேயே, போனில் இருந்து இணையம் மூலம் கம்ப்யூட்டரை அணுக முடிந்தது. இந்த செயலியை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்று அறிய அவர்கள் பல நிறுவனங்களை வழிகாட்டுதலுக்காக நாடினர். ஆனால் சில நிறுவனங்கள் அந்த சேவையில் அறிவுசார் உரிமையை கோரின. தங்கள் முதல் சேவை என்பதால் அக்‌ஷய் இதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.

அக்‌ஷய் தனது சேவையின் மதிப்பை உணர வைத்த மற்றொரு சம்பவத்தையும் நினைவு கூற்கிறார். “ஆமினிடெஸ்க் லோகோவிற்காக கூகுள் தேடல் மூலம் ஒரு படத்தை தேர்வு செய்தோம். எங்கள் சேவை வைரலாக பரவியதால் பிலிப்பைன்சை சேர்ந்த அந்த நிறுவனம் குளோபல் டெலிகாம் எங்களை தொடர்பு கொண்டது. நாங்கள் பயன்படுத்தும் லோகோ தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரிவித்தனர். பிலிப்பைன்சை சென்றடையும் வகையில் எங்கள் சேவை பிரபலமானது மகிழ்ச்சி அளித்தது. பின்னர் லோகோவை மாற்றிவிட்டோம்”.

இந்த வரவேற்பு தொடர்ந்தது. 50,000 முறை டவுண்லோடு செய்யப்பட்டதுடன், பின்லாந்து நிறுவனம் ஒன்று 5,000 டாலர் கொடுத்து விலைக்கு வாங்கவும் விருப்பம் தெரிவித்தது. அக்‌ஷய் இதை நிராகரித்துவிட்டார். அப்போது அவர்கள் வருவாய் ரூ. 2 லட்சமாக இருந்தது. பொறியியல் முடித்ததும் அவருக்கு பிளிப்கார்ட்டில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் புனேவை விட்டு வெளியேற விரும்பாததால் மறுத்துவிட்டார். அமெரிக்காவை மையமாக கொண்ட டேட்டா அனல்டிக்ஸ் நிறுவனமான சன்கார்டில் ஆய்வுக்குழுவில் அவர் பணிக்கு சேர்ந்தார்.

எனினும் அவரது மனது ஆண்ட்ராய்ட் பக்கமே இருந்தது. 2011 டிசம்பரில் அவர் சன்கார்ட் பணியை ராஜினாமா செய்து நண்பர்கள் ரத்னதீப் தேஷ்மானே (Ratandeep Deshmane), அமீத் யாதவ் ( Amit Yadav), அனிகேத் அவதி (Aniket Awati ) ஆகியோருடன் இணைந்து 'ஆப்சர்ஃபர்' நிறுவனத்தை துவக்கினார். ஆண்ட்ராய்டு எமுலேட்டரை உருவாக்க விரும்பியவர்கள் ஆக்ஸ்ட் மாதம் இதை துவக்கி டிசம்பர் மாதவாக்கில் இதை முடித்து முன்னோட்ட வடிவத்தை தயார் செய்தனர். ரிமோட் சாதனங்களில் இருந்து கிளவுட்டிற்கு சென்சார் டேட்டாவை அனுப்பும் சிமுலேட்டட் டிரைவரை அவர் உருவாக்கினார்.

பல மீட் அப்களில் இதை அவர்கள் காண்பித்தனர். இத்தகைய ஒரு சந்திப்பில் மொபைலுக்கான சிடிரிக்ஸ் என இதை முன்னிறுத்துமாறு அறிவுரை அளிக்கப்பட்டது. 20,000 டாலர் நிதி கிடைத்தது. எனினும் இந்த சேவை நடைமுறையில் வெற்றிபெறவில்லை.

ஆப்சர்ஃபர் நிறுவனத்திற்கு இந்த குழு பீட்டாகிராப்ட் எனும் சாப்ட்வேர் சேவை நிறுவனத்தை பூனாவில் துவக்கியது. “ ஆரம்ப நிலையில் நிதி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது சேவையை உருவாக்குவதில் இருந்து கவனத்தை விலக்குகிறது. எனவே சேவை மூலம் வருவாய் பெற்று அதை கொண்டு சேவையை உருவாக்கிய பீட்டாகிராப்டை நிறுவினோம். அடுத்த கட்டங்களில் நிதி தேவைப்பட்டால் அதற்காக முயற்சிப்போம்” என்கிறார் அக்‌ஷய்.

இந்த நிறுவனத்தின் சார்பாக அக்‌ஷய் பல சேவைகளை உருவாக்குவதில் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார். கோலாங் மூலம் உருவாக்கப்பட்ட டாக்குமண்டேஷன் ஜெனரேஷன் இஞ்சினான யாக் (YAAG ), ரெஸ்டராண்ட் துறைக்கான சேவை ரெஸி ( Ressy) ஆகியவற்றை உருவாக்கினார். கோலாங்கில் ஆர்வம் கொண்டவர் அதை நண்பர்கள் வட்டத்தில் பிரபலமாக்குவதிலும் ஈடுபட்டிருக்கிறார். 2007 ல் கூகுளால் உருவாக்கப்பட்ட கோலாங் , கிளவுட்பேர், டிராப் பாக்ஸ் மற்றும் சவுண்ட்கிளவுட்டால் பயன்படுத்தப்படுகிறது.

பீட்டாகிட்ராப்டில் ஆரம்பத்தில் இருந்து உண்மையான தொழில்நுட்ப தயாரிப்பை உருவாக்குவதே தமது எதிர்கால நோக்கம் என்கிறார். “ஆன்லைன் -ஆப்லைன் கூட்டு முயற்சி சேவை அல்லது நகல் சேவையை உருவாக்க விரும்பவில்லை. தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட கூகுள் கிளாஸ் அல்லது ஆக்குலஸ் ரிப்ட் போன்ற சேவைகளை உருவாக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

டிவிட்டர் முகவரி: Akshay Deo

ஆக்கம்: Aditya Bhushan | தமிழில்: சைபர் சிம்மன்