'ஸ்டார்ட் அப் என்ற வார்த்தையை நான் விரும்பவில்லை’- கிஷோர் பியானி! 

ஸ்டார்-அப் என்ற சொல் தொழில் முனைவின் மெய்யான அர்த்தத்தை வெளிப்படுத்தவில்லை, என்கிறார் பியானி.

0

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் க்ரூப் இருபதாண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருந்து வருகிறது. இதன் உரிமையாளர் கிஷோர் பியானி தற்போது தொழில்நுட்பப் பிரிவில் செயல்பட விரும்புகிறார். ஆனால் ஆன்லைனில் மட்டுமே செயல்படுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவரது டிஜிட்டல் லட்சியங்கள் மிகுந்த கவனத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளது.

”இன்றும் ஆன்லைன் வணிகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நிறுவனத்திற்கு டிஜிட்டல் நெர்வஸ் சிஸ்டத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். நாங்கள் நேரடியான ஸ்டோரின் மீது ஒரு டிஜிட்டல் அடுக்கை உருவாக்கி வருகிறோம். நாங்கள் O2O செயல்பாடுகளை (ஆன்லைன் டு ஆஃப்லைனை) ஆதரிக்கிறோம்,” என்றார்.

விரைவிலேயே வாடிக்கையாளர்கள் நேரடியாக வருகை தந்து பொருட்களைக் கண்டு தொட்டு உணர்ந்து ஆர்டர் கொடுத்து 24 மணி நேரத்தில் வீட்டிலேயே டெலிவரியைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் சில்லறை வர்த்தக ஸ்டோர்களை ஃப்யூச்சர் க்ரூப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்தகைய ஸ்டோர்களை கிஷோர் நியூயார்க்கில் பார்த்துள்ளார். “அத்தகைய O2O அனுபவத்தை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்புகிறோம்,” என்றார் கிஷோர்.

”ஸ்டார்ட் அப் என்கிற வார்த்தையை நான் விரும்பவில்லை”

”ஸ்டார்ட் அப் என்கிற சொல்லானது முடிவு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது போன்று உள்ளது. நன்றாக வருவாய் ஈட்டி, அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்வதைக் குறிக்கிறது. நான் அந்த வார்த்தையை விரும்பவில்லை. அது தொழில்முனைவின் மெய்யான அர்த்தத்தை வெளிப்படுத்தவில்லை,” என டெக்ஸ்பார்க்ஸ் 2018-ல் குறிப்பிட்டார்.

அவர் உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கிறார். குறிப்பாக அதிக உற்சாகம் நிறைந்தோரை ஆதரிக்கிறார். யுவர் ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான உரையாடலில் ’அதிக உற்சாகம்’ என்கிற வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தினார்.

"இந்தியா அதன் தொழில்முனைவோர்கள் இன்றி வளர்ச்சியடைய முடியாது. அவர்களே வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்,” என்றார்.

ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த மின்வணிக நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு கிஷோர் நேரடியாக பதிலளிக்காமல் அதற்கு மாறாக, “வேறொருவருக்காக பணிபுரிவதைக் காட்டிலும் சொந்தமாக உருவாக்குவதே மகிழ்ச்சியைக் கொடுக்கும்,” என்றார். அவரது இந்த பதில் பார்வையாளர்களிடையே பலத்த கரகோஷத்தை வரவழைத்தது. அவர் மேலும், “மில்லியன் கணக்கானோர் ரசிக்கும் விஷயத்தை உருவாக்குவதே எங்களது பணியாகும். அதன் பிறகு அதையே தொடர்ந்து வருடக்கணக்கில் பின்பற்றுவோம்,” என்றார்.

மின்வணிகத்தில் சிறப்பம்சம் ஏதும் இல்லையா?

வால்மார்ட் நிறுவனம் 20 பில்லியன் டாலருக்கு ஃப்ளிப்கார்டை வாங்கியது தொடர்ந்து உள்நாட்டு ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கிஷோர் இந்த விஷயம் குறித்த தனது கருத்தை பகிர்ந்துகொண்டார். 

ஷ்ரத்தா; “இந்த டீல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பியானியிடம் கேட்டார். அதற்கு அவர், “அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது! இது திருமண ஏற்பாட்டிற்காக போட்டோ அனுப்புவது போன்றது. பல்வேறு குறைகளை மேக்அப் மறைத்துவிடும்,” என்றார்.

இதைக்கேட்டு எழுந்த கைத்தட்டல்கள் அடங்கியதும் கிஷோர் விவரிக்கையில்,

வருங்காலத்திற்காக முதலீடு செய்துகொண்டே இருக்கமுடியாது. நாளை ஒரு புதிய எதிர்காலம் இருக்கலாம். அதற்கான ஆதாரம் ஏதேனும் தற்போது இருந்தாகவேண்டும். மின் வணிகத்தில் வருவாய் ஈட்டப்படுவதில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும்கூட வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது,” என்றார்.

இந்திய மின்வணிகத்தின் மீது கிஷோருக்கு சந்தேகம் இருந்தாலும்கூட ஃப்யூச்சர் க்ரூப், குறிப்பாக அதன் உணவுப் பிரிவு எண்ணற்ற உணவு உற்பத்தியாளர்களுடனும் தொழில்முனைவோர்களுடனும் பணிபுரிந்து அதன் ஸ்டோர்களில் அவர்களுக்கான பிரத்யேக பகுதியை வழங்கி வருவதாக கிஷோர் தெரிவித்தார்.

”ஒரு நாள் ஒரு கோயிலுக்கு வெளியில் பால் விற்பனையாளர் ஒருவரை சந்தித்தேன். அவரது தயாரிப்பு பிடித்திருந்தது. தற்போது அவரது ப்ராண்டை எங்களது ஸ்டோர்களில் விற்பனை செய்து வருகிறார். மற்றொரு சமயம் துபாயைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் அவர் தயாரித்த அப்பளத்தை சுவைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். நாங்கள் முதலீடு செய்து அவரது ப்ராண்டை எங்களது ஸ்டோருக்குக் கொண்டு வந்தோம். எனவே அதிக உற்சாகம் நிறைந்த தொழில்முனைவோருடன் ஒன்றிணைந்து செயல்பட எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறோம்,” என்றார்.

மிகப்பெரிய “சிறு ஸ்டோர்கள் நெட்வொர்க்”

தற்சமயம் ஃப்யூச்சர் க்ரூப் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் விரிவடைவதில் கவனம் செலுத்துகிறது. ஏற்கெனவே 1,100 சிறு ஸ்டோர்களை திறந்துள்ள நிலையில் அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் 10,000 ஸ்டோர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

“நாங்கள் பல கிளைகளைக் கொண்ட 8-9 சிறு சில்லறை வர்த்தக நிறுவனங்களை வாங்கியுள்ளோம். சிறு ஸ்டோர்களின் மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்பட விரும்புகிறோம்,” என்று கிஷோர் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில்,

அனைவரும் மக்கள்தொகையில் பத்து சதவீதத்தை மட்டுமே கொண்ட இந்தியா 1-ல் கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் 40-45 சதவீதம் பங்களிக்கும் இந்தியா 2-ல் செயல்பட விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் இந்தியா 3-ம் உள்ளது. இவை என்னுடைய புத்தகத்தில் நானே உருவாக்கிய வார்த்தைகளாகும்.

ஃப்யூச்சர் க்ரூப் டெலிவரிகளை எளிதாக்கவும் வீணாக்கப்படுவதைக் குறைக்கவும் சிறு நகரங்களில் “ஃபுட் க்ரிட் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ஸ்டோரில் இருந்து 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு எந்த பொருளும் எடுத்துசெல்லப்படாது. ஃப்யூச்சர் க்ரூப்பின் ப்ரீமியம் உணவு வணிகமான ஃபுட்ஹால் (Foodhall) இரண்டாண்டுகளில் 500 கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தகமாக மாறிவிடும் என நம்புகிறார்.

இந்தியாவில் ட்ரோன் டெலிவரி பயன்பாட்டில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பார்வையாளர்களில் ஒருவர் கேள்வியெழுப்புகையில். 

“அது மிகப்பெரிய விநியோக முறையாகும். சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதைப் பயன்படுத்தும் முதல் நிறுவனம் நாங்களாகவே இருப்போம். ஆனால் அடுத்த இரண்டாண்டுகளில் இந்த முறை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது,” என்றார்.

இந்தியா சிறப்பான நுகர்வோர் சந்தைப் பகுதியாகும். “வணிகத்திற்கு மக்கள்தொகை அவசியம். இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள்தொகை அதிகளவில் உள்ளது. ஆனால் சீன சந்தையை எளிதாக அணுகமுடியாது. அதனால் இந்திய சந்தை மக்களை அதிகம் கவர்கிறது. ஆகவே கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து அதிக முதலீடு பெறப்படும்.

எவ்வாறு வணிகம் செய்வது

இந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதில் உள்ள ஏற்ற இறக்கங்களை நன்கறிந்த அனுபவமிக்க தொழில்முனைவரான பியானி புதிதாக வணிக முயற்சியில் ஈடுபடுவோருக்கு அறிவுரை வழங்கினார்.

”அதிகம் யோசிக்கவேண்டாம். அதிக அறிவும் தேவைப்படாது. என்னைப் பொருத்தவரை அறியாமையே சிறந்தது. ஒருவேளை நான் எம்பிஏ படித்திருந்தால் என்னால் எப்போதுமே வணிகத்தை உருவாக்க இயலாமல் போயிருக்கும்,” என்றார்.

ஃப்யூச்சர் க்ரூப் குறித்தும் வெளிநாட்டு பயணம் குறித்த வதந்திகள் பரவலாக காணப்படுவதைக் குறித்தும் கேட்கையில் அவர், “அனைவரிடம் இருந்தும் கற்கவேண்டியுள்ளது. இதற்கு முன்பு நாங்கள் தெரிந்துகொள்ளவில்லை. எனவேதான் இப்போது கற்றுக்கொள்கிறோம்,” என்று கிஷோர் குறிப்பிட்டார்.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் | தமிழில் : ஸ்ரீவித்யா