திறன் பயிற்சி, வாழ்வாதார வகுப்புகள் மூலம் பாலியல் தொழிலாளர்கள் கௌரவமாக வாழ உதவும் ஜெயம்மா! 

0

பெண் பாலியல் தொழிலாளர்கள் மரியாதையான பணியை மேற்கொண்டு வருவாய் ஈட்ட அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார் 40 வயதான ஜெயம்மா. சிஎம்எம் (Chaitanya Mahila Mandali) வாயிலாக திறன் பயிற்சி மற்றும் வாழ்வாதார வகுப்புகள் எடுக்கிறார். இதம் மூலம் அந்தப் பெண்கள் தாங்கள் ஈடுபட்ட தொழிலில் இருந்து வெளிவரவும் நிதியுதவி பெறவும் உதவுகிறார்.

உயர் குறிக்கோளுக்காக போராடும் ஜெயம்மா தானே பாலியல் தொழிலில் சிக்கி அவதிப்பட்டவர். மூன்று வயதிலேயே அனாதையான இவர் தனது கணவராலேயே இந்தத் தொழிலுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டார். தனது நிறுவனம் வாயிலாக 5,000-க்கும் அதிகமான பெண்களுக்கும் 3,500-க்கும் அதிகமான குழந்தைகளுக்கும் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளார்.

சிஎம்எம் சிறப்பு கவனம் தேவைப்படும் குடிசைப் பகுதிகளில் பாலியல் உரிமை மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இங்குள்ள பெண்களுக்கு திறன் பயிற்சியும் வாழ்வாதார வகுப்புகளும் எடுக்கிறார். சமீபத்தில் சர்வதேச மகளிர் தினத்தில் இவருக்கு ’நாரி சக்தி விருது’ வழங்கப்பட்டது. அன்புடன் அம்மா என்றழைக்கப்படும் ஜெயம்மா 2017-ம் ஆண்டு சிறந்த ’முன்மாதிரி விருது’ வென்றுள்ளதாக இண்டியன்வுமன்ப்ளாக் தெரிவிக்கிறது.

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வறுமையில் வளர்ந்தார். இவர் பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இவர்கள் ஜெயம்மாவை குடும்பத்திலிருந்து விரட்ட திருமணம் செய்து வைத்தனர். ஜெயம்மாவின் கணவர் பணத்திற்காக அவரை உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தினார். அவரது விருப்பத்தை ஜெயம்மாவின் குடும்பம் மறுத்துவிட்டதால் ஜெயம்மாவை அவரது கணவர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளினார். அந்த காலகட்டத்தில் பலமுறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக ஜெயம்மா நினைவுகூர்ந்தார். ஆனால் அவரது மகள் அவர் வாழ்வதற்கான வலிமையையும் தைரியத்தையும் அளித்துள்ளார்.

ஜெயம்மா ஒரு முறை யதேச்சையாக ஜெய் சிங் தாமஸை சந்தித்தார். அப்போது ஜெய் சிங் தாமஸ் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒரு நிகழ்வில் ஜெயம்மாவின் தலைமைப்பண்பை கவனித்தார். அதன் பிறகு பாலியல் தொழிலாளர்கள் கௌரவமான தொழிலில் ஈடுபட்டு தங்களின் நிலைமை மேம்பாட்டுத்திக்கொள்ள தொழில் திறன் வழங்கும் நிறுவனத்தை அமைக்குமாறு ஜெயம்மாவிற்கு உந்துதலளித்தார். அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கினார். ஆந்திரப்பிரதேசத்தில் சிஎம்எம் அமைப்பதற்காக 2001-ம் ஆண்டு தனது பணியைத் துறந்தார் ஜெயம்மா. ஐஏஎன்எஸ் உடனான நேர்காணலில் பெண்கள் தங்களது கடந்த காலத்தை தூக்கியெறிந்து தங்களை மாற்றியமைத்துக்கொள்ள அவர்களை சம்மதிக்கவைப்பது கடினமாக இருந்ததாக பகிர்ந்துகொண்டார்.

இந்தப் பெண்களில் சிலர் ஏற்கெனவே மது, போதைப்பொருள், புகைப்பிடித்தல், பாலியல் உறவு போன்றவற்றிற்கு அடிமையாகி அந்தச் சூழலிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் அவர்கள் இதிலிருந்து வெளியேற சம்மதிக்க வைப்பது கடினமான பணியாகவே இருந்தது. 

அவர்களிடம் பல்வேறு கேள்விகள் இருந்தது. அவர்கள் தங்களையும் தங்களது குழந்தைகளையும் பராமரித்துக்கொள்ளத் தேவையான பணத்தை சம்பாதிக்கமுடியுமா? கடந்த கால வாழ்க்கை காரணமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால் அவர்களது நிலை மேலும் மோசமாகாதா? உதவியும் ஆதரவும் அளித்து அவர்களது நம்பிக்கையைப் பெறுவதும் இணங்கவைப்பதும் சவாலாக இருந்தது. 

கட்டாயப்படுத்தி மறுவாழ்வு அமைத்துத்தருவது முறையாக இருக்காது. தீய பழக்கங்களுக்கு அடிமையான நிலையை மாற்றி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நிதானமான நீண்ட நாள் சிகிச்சையளிப்பதே அவர்களது வாழ்வை மீட்டெடுக்க உதவும். 

கட்டுரை : THINK CHANGE INDIA