20 கோடி ரூபாய் மதிப்பு நிறுவன பங்கை ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கிய நிறுவனர்!

தன் முன்னாள் ஊழியர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு தன்னுடைய நிறுவன பங்கில் ஒரு பகுதியை பண்டிகை பரிசாக வழங்கியுள்ளார் கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனர் வி.வைத்தியநாதன். 

0

பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் இணையதளத்தில் வாழ்த்து அனுப்பி ஆன்லைன் மூலமே பரிசுகளை பகிரும் இந்த டிஜிட்டல் காலத்தில் தீபாவளிக்காக ஊழியர்களுக்கு தன் நிறுவனத்தின் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிறுவுனர் வி வைத்தியநாதன்.

வங்கியில்லா நிதி நிறுவனமான ’கேப்பிடல் ஃபர்ஸ்ட்’  ஐடிஎப்சி நிறுவனத்துடன் இணையவுள்ளது இதனையொட்டி தன் நிறுவனத்தின் 10.1% பங்கை தன் உறவினர்கள், முன்னாள் ஊழியர்கள், ஓட்டுனர்கள் மற்றும் தினசரி உதவியாளர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

வைதியநாதன் அந்நிறுவனத்தில் வகிக்கும் அவரின் மொத்த பங்கான 40.40 லட்சத்தில் இருந்து 4.29 லட்ச பங்குகளை பரிசாக கொடுக்கவுள்ளார். இது தன்னுடன் இத்தனைக்காலம் உழைத்த தன் உயர்வுக்குக் காரணமாய் இருந்தவர்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்த ஒரு சிறிய சன்மானம் என தெரிவித்துள்ளார்.

“2010ல் ஸ்டார்ட்-அப் ஆக துவங்கிய ’கேப்பிடல் ஃபர்ச்ட்’ நிறுவனம் இன்று ஐடிஎப்சி இணைப்பின் மூலம் வங்கித்துறையில் அடி எடுத்து வைக்கிறது. என் பயணத்தில் இது ஒரு மையில்கல், இந்த இடத்தை அடைய உதவியவர்களுக்கு எனது நன்றிகளை பங்கு பரிசுகள் மூலம் தெரிவித்தேன்,” என்கிறார் வைத்தியநாதன்.

ஐடிஎப்சி உடனான இந்த இணைப்பு ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்டது; இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த ஒப்பந்தம் நிறைவுபெறும். ஐடிஎப்சி வங்கி கேப்பிடல் ஃபர்ஸ்டின் ஒவ்வொரு பத்து பங்குகளுக்கும் 139 பங்குகளை கொடுக்கும்.

ராஞ்சி, பிர்லா தொழிநுட்பக் கல்லூரியில் தன் படிப்பை முடித்த வைதியநாதன் 1999களில் இருந்தே வங்கித்துறையில் செயல்பட்டு வருகிறார். சிட்டி வங்கியில் தன் பயணத்தை துவங்கி அதன் பின் ஐசிஐசிஐ வங்கி என 22 காலம் வங்கித்துறையில் பல பதவிகளிலிருந்து அதன் பின் 2012ல் தனது தொழில்முனைவு பயணத்தை துவங்கியுள்ளார்.

NBFC இல் பங்குகளை பெற்று, பின்னர் வார்பர்க் பின்கஸ் ஈக்விட்டி ஆதரவு மூலம் 8.10 பில்லியன் ரூபாய் பெற்று கேப்பிடல் ஃபர்ஸ்ட்-ஐ நிறுவினார். அதில் இருந்து வங்கித்துறையில் இணைய வேண்டும் என முயற்சித்த இவர், இன்று ஐடிஎப்சி உடன் இணைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து வங்கியின் தலைமை நிர்வாகி பொறுப்பை ஏற்கவுள்ளார் வைதியநாதன்.

தகவல்கள் உதவி: எக்கனாமிக் டைம்ஸ் | கட்டுரையாளர்:  மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL