'களத்தில் இறங்கி சந்தையின் இதயத்துடிப்பை அறிந்து கொள்வதே முக்கியம்': முதலீட்டாளர் சுமர் ஜுனேஜா

1

சுமர் ஜுனேஜா நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர். இந்திய தொடக்க நிறுவன முயற்சிகளில் தொடர்ச்சியாக முதலீடுகள் நடைப்பெற்று வரும் வேளையில், “துணிகர முதலீட்டாளர்களாக இருப்பவர்கள் முதலீடு செய்வதோடு ஒரு சிறந்த அனுபவத்தை பகிரக்கூடிய நபராக இருக்க வேண்டுமென தொழில்முனைவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். "நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தான் நினைப்பதே சரி என்று எண்ணுவதை விட சந்தையில் இறங்கி விரல் வைத்து இதயத்துடிப்பை அறிந்து கொள்வதே முக்கியம்” என்கிறார் சுமர். இவர் இந்திய நிறுவனங்களுக்கு பங்குச்சந்தை முதலீடு பற்றிய ஆலோசனை வழங்குபவர். முதலீட்டுத்துறையில் பத்து ஆண்டு அனுபவம் மிக்கவர். இதற்கு முன்பு கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தில் வங்கித்துறை முதலீட்டு ஆய்வாளராக பணியாற்றியவர்.

இவர் மற்றவர்களைப்போல அல்ல

சுமர் மற்ற துணிகர முதலீட்டாளர்களைப் போல அல்ல. தொழில்முனைவோரோடு இணைந்து ஓடுவதே சிறந்தது என்று நம்பக்கூடியவர். உதாரணமாக இவர் சமீபத்தில் மிகப்பெரிய போட்டிக்கிடையில் ஒரு ஸ்விக்கி ஒப்பந்தத்தை முடித்த விதத்தை சொல்லலாம். இந்த ஒப்பந்தத்தை முடிப்பதற்காகவே ஒருவாரகாலம் பெங்களூரில் தங்கியிருந்தார்.

“கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தத் துறையை பற்றி படிக்க துவங்கினோம். இதற்காக நாடுமுழுக்க உணவுச் சுற்றுலா சென்றோம். அப்போது பல்வேறு உணவுக்கூடங்களையும், உணவு நிறுவனங்கள் எப்படி உணவு தயாரிக்கிறார்கள் என்பதையும் மதிப்பீடு செய்தோம்” என்கிறார்.

“நல்லா வயிறு நிறைய சாப்பிட்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார். “நாங்கள் ஸ்விக்கி குழுவை டிசம்பரில் சந்தித்தோம். அதன்பிறகு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தொடர்ச்சியாக இரண்டு உரையாடல்கள் நடைபெற்றது. நாங்கள் அவர்களை தொடர்ச்சியாக கவனித்தோம், பிறகு அந்த குழுவோடு இணைந்து பணியாற்ற விரும்பினோம்” என்கிறார்.

உணவுத்துறை

உணவுத்தொழில்நுட்பத்துறை பல்வேறு முதலீட்டாளர்களையும் தொடர்ச்சியாக ஈர்த்து வருகிறது. கடந்த பத்து மாதங்களில் பல ஒப்பந்தங்கள் முடிந்ததை நாங்கள் பார்த்தோம். சுமர், இணையத்தில் இல்லாத உணவுத்துறையை தொடர்ச்சியாக கவனித்து வருகிறார். இவரது இணையம் சார்ந்த முதலீட்டு அனுபவம், தனித்துவமான பார்வையை வழங்கியிருக்கிறது.

“பாங்காக் மற்றும் சிங்கப்பூர் போன்ற சந்தைகளில் மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை வெளியில் சாப்பிடுகிறார்கள். அமெரிக்கா மற்றும் சீன சந்தைகள் ஏற்கனவே சூடுபிடித்திருக்கின்றன. அவை தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இப்போது அதிகமாக வெளியில் சாப்பிடத் துவங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் இந்த போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக வாடிக்கையாளரின் வருவாயிலிருந்து கணிசமான பணம் இந்த சந்தைக்கு சென்றுகொண்டிருக்கிறது” என்கிறார்.

உணவு தொழில்நுட்ப சந்தையை மூன்று வகையாக பிரிக்கலாம்:

1) திரட்டுதல்

2) திரட்டி விநியோகித்தல்

3) மேக உணவகம்

வாடிக்கையாளர்களை பொருத்தவரை உணவுகளின் வகைகளும் அது எவ்வளவு வேகமாக விநியோகிக்கப்படுகிறது என்பதுமே முக்கியம். சுமரை பொருத்தவரை ஸ்விக்கி மிகக்குறுகிய நேரத்திலேயே சேகரித்து விநியோகித்து விடுவதை கவனித்திருக்கிறார். அவர்களோடு இணைப்பு பெற்றிருக்கும் உணவகங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றன. குறிப்பாக உணவின் சுவையில் மிகுந்த அக்கறை செலுத்துகிறார்கள். அப்படி இருப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறார். “அடுத்த 1-2 ஆண்டுகளில் பில்லியன் டாலர் உணவு விநியோக சந்தை பல்வேறு பிரிவுகளில் தாக்குதலுக்கு தயாராக இருக்கிறது” என்கிறார். “ஸ்விக்கியில் முதலீடு செய்வதற்கு முன்பு இதுவரை 30 நிறுவனங்களுக்கு மேல் பார்த்திருப்போம். அடுத்தமுறை இதேத் துறையில் முதலீடு செய்யும்பொழுது இந்தத் துறையில் பல வலிமையான நிறுவனங்கள் இருப்பார்கள்” என்கிறார்.

தொழில்முனைவர் அல்லாத முதலீட்டாளர்

சுமர் இதற்கு முன்பு தொழில்முனைவராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிதித்துறையில் இருந்து அவர் பெற்ற அனுபவமே தனக்கு சிறந்த சொத்தாக இருப்பதாக நம்புகிறார்.

“என்னுடைய பின்னணியை பொருத்து, மிக வேகமாக வளரும் நிறுவனங்களின் பெயர்களை பல்வேறு கோணத்தில் என்னுடைய மேஜையில் அடுக்குவேன். அவர்கள் மிக வேகமாக வளரக்கூடியவர்கள், அதுமட்டுமல்லாமல் அடுத்து என்ன என்று எப்போதும் தேடக்கூடியவர்கள். நீங்கள் எப்பொழுதுமே அடிப்படை, அலகு பொருளாதாரம், நிறுவனத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு எண்கள் பிடிக்குமென்றால் (வளர்ச்சி விகிதம், வருமானம், முக்கிய செலவுகள், பண விரயம் மற்றும் சில) அவை தான் கடைசியில் முக்கியமானவை” என்கிறார்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, தலைமை செயல் அதிகாரியின் செயல்பாடு மிக முக்கியமானதாக கருதுகிறார். அவர் குறைவான வேலையை செய்து, நிறுவனத்தின் அடுத்த கட்டத்தை பற்றி அதிகம் சிந்திப்பவராக இருக்க வேண்டும். அதை சில தகவல்களை கொண்டு கணிக்க முடியும் என்கிறார்.

ஸ்விக்கியின் இணை நிறுவனரான ஸ்ரீஷா மெஜடி, சுமர் பற்றி கேட்டபோது தெரிவித்ததாவது

“எங்களின் செயல்பாடுகளை அமைதியாக கவனிப்பது மட்டுமல்லாமல் எங்களின் நிறுவனத்திற்கு பல்வேறு மகத்தான உதவிகளை செய்திருக்கிறார். உணவகங்கள், முதலீட்டாளர்கள் போன்றவர்களோடு தொடர்பை ஏற்படுத்துவது, திறமையானவர்களை வேலைக்கு எடுப்பது, எதை செய்யக்கூடாது என சொல்வதிலிருந்து பலவற்றுக்கு உதவியிருக்கிறார். அவர் உணவு தொழில்நுட்ப சந்தையை மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறார். வெகு சிலரே அது போல கவனித்திருப்பார்கள். அவரது ஆலோசனைகளெல்லாம் எங்களின் உத்தியை வடிவமைக்கவும், எதிர்காலத்தை திட்டமிடவும் சிறப்பாக உதவியிருக்கிறது” என்றார்.

சுமர் கற்றது

சுமர் கடந்த ஆறு ஆண்டுகளில் நார்வெஸ்ட் மூலமாக நிறைய கற்றிருக்கிறார். அவர் இந்தியாவின் புதுநிறுவனங்களை கழுகுக்கண் கொண்டு பார்த்ததில், அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக தெரிவிக்கிறார்.

“மொத்தமாக பார்க்கும்போது இந்தியா எல்லாவற்றிலும் முன்னேறும். நம் மொபைல் பயன்பாட்டாளர்கள், தனிநபர் வருமானம், நடுத்தர குடும்பங்கள், எல்லாமே வளர்ந்து வருவதால் இந்தியா முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி வருகிறது (தொடக்க நிறுவனங்கள்). ஆனால் உண்மையான சவால் மிகச்சிறிய இடத்தில் இருக்கிறது. உதாரணமாக மும்பையிலுள்ள ஒரு உணவகத்திற்கு 20க்கும் அதிகமான லைசன்சுகளை வெளியிட வேண்டிய தேவை இருக்கிறது. விநியோகிக்கும் பையன் மோசமான இணைய வேகம் காரணமாக வழிதெரியாமல் தடுமாறுகிறான்” என்கிறார்.

அந்த சிறிய இடத்தை சரிசெய்வதற்கு மிகக்கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் அதை சரி செய்துவிட்டால் இயல்பாகவே எல்லாமே வளர்ந்துவிடும் என்கிறார். ஆனால் அந்த வளர்ச்சியானது தொடர்ச்சியாக இருந்தால் தான் தொழில் சந்தைக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார்.

சுமர் அமைதியான மனிதராக இருக்கிறார். அவர் தன் ஒவ்வொரு முதலீட்டின் மூலமாகவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

“தொழில்முனைவோர் தவறாக திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதுமே வெற்றி பெறுவார்கள் என கருதாதீர்கள். அவர்களும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்பொழுது எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது தான் எல்லாம் முதிர்ச்சியடையத் துவங்கியிருக்கிறது. எனவே இப்போதே நீங்கள் தன்னிறைவு அடைந்துவிட்டதாக கருதமுடியாது” என்கிறார்.

சுமரின் சிறப்பம்சம்

சுமரிடம் பேசியதை வைத்து பார்க்கும்போது அவரின் வெற்றிக்கான காரணம், அவர் நல்ல மனிதராக இருப்பது. பழகுவதற்கு இயல்பானவராக இருக்கிறார். எனவே மக்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள்.

ஆங்கிலத்தில் : SHRADHA SHARMA | தமிழில் : Swara Vaithee