ராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்!

19

புதுமையான யோசனை நேர்த்தியான தொழில்முனைப்பு இருந்தால் நிச்சியம் வெற்றிபெறலாம் என்பதற்கு சான்றாக இரு சகோதரர்கள் இங்கு புதிய தொழிலில் வெற்றிகண்டுள்ளனர். பல வருடங்களாக பின் பற்றி வரும் ஃபுட் டிரக் கருத்தை மாற்றி இரு சக்கரவண்டியில் உணவு தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தி, மாதம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர் இவர்கள்.

நிறுவனர்கள் அருண் மற்றும் கிருஷ்ணா வர்மா
நிறுவனர்கள் அருண் மற்றும் கிருஷ்ணா வர்மா

BBQ Ride என்னும் துரித உணவகத்தின் நிறுவனர்கள் அருண் மற்றும் கிருஷ்ணா வர்மா. பெயருக்கு ஏற்றார் போல் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில் அடுப்புடன் கூடிய கிரில்லை இணைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சுலபமாக அவர்கள் இடத்திலே BBQ சமைத்து தருகின்றனர். நிறுவனர் அருண் வர்மாவிடம் அவர்களது தொழில்முனைப்பு பயணத்தை பற்றி பேசினோம்.

“கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்பொழுது கையில் நிறைய நேரம் இருப்பது போல் இருந்தது; பொழுது போக்கிற்காக சிறியதாய் துவங்கியது இன்று நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது,”

என பேச துவங்குகிறார் அருண் வர்மா. கல்லூரி மதியத்துடன் முடிந்த பிறகு மீதம் இருக்கும் அரை நாளை வீணாக செலவு செய்ய வேண்டாம் என்று எண்ணி குடும்பம் மற்றும் நண்பர்களிடம் பண உதவி பெற்று ஃபுட் டிரக் ஒன்றை நிறுவினார் இந்த சகோதரர்கள். தங்களது கல்லூரி முதலாம் ஆண்டிலே உணவு வண்டியை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வந்தாலும் எல்லா தொழிலும் போலவே இவர்களும் சில சாவால்களை சந்தித்தனர்.

உணவகம் நடத்த உரிமம் இருந்தாலும் கூட டிரக்கை பார்க் செய்வது ஒரு பெரும் சவாலாக இருந்தது. மேலும் அனுபவம் இல்லை என்பதால் வேலை ஆட்களை நிறுவி நிர்வகிப்பதும் கடினமாக இருந்தது என தெரிவித்தார்.

“விடுதியில் தங்கி படித்ததால் உணவின் அருமை தெரிந்தே இந்த தொழிலை தேர்ந்தெடுத்தோம். ஆனால் ஃபுட் டிரக்கை நிர்வாகம் செய்ய அனுபவம் இல்லாததால் இரு சக்கர வாகனம் யோசனை புலப்பட்டது...”

இந்தியாவில் bbq அதாவது பார்பெக்யூ என்றால் விலை உயர்ந்த பெரிய உணவகங்களே அதிகம் இருக்கிறது. தெருவில் துரித உணவகத்தில் கிடைக்கும் கபாப், தந்தூரி போல் bbq இல்லாததால் அதை எங்கள் விற்பனை புள்ளியாக எடுத்துக்கொண்டோம் என்கிறார் அருண். மேலும் ஃபுட் டிரக்கை போல் பார்கிங் பிரச்னையும் இதில் இருக்காது என்று புல்லட்டில் உணவு தயாரிப்பு என்ற BBQ ரைடை முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படித்துனோம்.

Bbq ரைடின் தொடக்கம்

அக்டோபர் 2016ல் 7 லட்ச முதலீட்டுடன் 500சிசி ராயல் என்ஃபில்ட் புல்லட் மற்றும் 350சிசி ராயல் என்ஃபில்ட் புல்லடை வாங்கி தங்களது முதல் சவாரியை துவங்கினர். பைக் என்பதால் துரித உணவகம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று தங்களது பைக்கை பார்க் செய்து உணவகத்தை துவங்கினர்.

“இந்த யோசனை புதியது என்பதால் மக்களின் பார்வை எங்கள் மீது பட்டது, உணவு விரும்பிகள் மட்டும் இன்றி பைக் பிடித்தவர்களும் ஆர்வத்துடன் எங்களை அணுகினர். அங்கிருந்து எங்கள் தொழில் பயணம் துவங்கியது.”

உணவகம் துவங்கி 3 மாதத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த இவர்கள் தங்கள் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

சகோதரர்களின் தொழில் வளர்ச்சி

“எங்களுக்கு ஃபிரான்சைஸ் கொடுக்கும் எண்ணமோ அல்லது தொழிலை வளர்க்கும் எண்ணமோ இல்லை. ஆனால் எங்களை அணுகிய பலர் ஃபிரான்சைஸ் பற்றிக் விசாரித்தனர் அதன் பின்னரே அதை பற்றி நாங்கள் யோசித்தோம்,” என்கிறார் அருண்.

தொழில் துவங்கி 4 ஆம் மாதத்தில் தங்களது முதல் ஃபிரான்சைஸ் பெற்றார் பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர். தற்பொழுது 56 bbq வண்டிகள் பிரான்சை மூலம் இயங்கிக்கொண்டு வருகிறது; இதில் 30 வண்டிகள் தமிழகத்தில் உள்ளனது. பல பிரான்சைஸ் நிறுவனர்கள் இளைஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள்.

ஆரம்பத்தில் சாதரணமான மசாலாக்களை பயன்படுத்தினாலும் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி பல முயற்சிகளுக்கு பிறகு தங்களுக்கென தனித்துவமான மசாலாக்களை கண்டுபிடித்துள்ளனர். பிரான்சைஸ் எடுத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் இவர்களே மசாலாக்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் வாகனத்தை ஓட்டி செல்பவர்களுக்கு  எப்படி கிரில் செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டும் என மூன்று  நாட்கள் பயிற்சியையும் அளிக்கின்றனர்.

சென்னை ஃபிரான்சைஸ்
சென்னை ஃபிரான்சைஸ்

தற்பொழுது சந்தையின் நிலவரத்தை புரிந்த இவர்கள் சொந்தமாக பல bbq ரைடை பல நகரத்தில் துவங்க உள்ளனர். மேலும் சர்வதேச அளவு தங்களது பிராண்டை எடுத்து செல்லவும் பேச்சுகள் நடப்பதாக தெரிவிக்கிறார் அருண்.

இன்னும் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது இவர்களது நோக்கம் என்றாலும் தற்பொழுது உணவின் தரம் மற்றும் நிர்வாக சீரமைப்பின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய தொழில் சிந்தனையுடன், இளம் தொழில் முனைவரான இரு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்புக்கு: BBQ Bike

Related Stories

Stories by Mahmoodha Nowshin