ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதிருப்தி அடைந்த ரசிகர்கள்- ட்விட்டரில் கொதித்து எழும் தமிழர்கள்!

இசைக்கு மொழி, கலாச்சாரம், இடம் என்ற எந்த பேதமும் இல்லை என்பதை மறந்த ரசிகர்கள்...

0

லண்டனில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகமான தமிழ் பாடல்கள் இடம் பெற்றிருந்ததாக கூறி தமிழ் மொழி தெரியாத ரசிகர்கள் பலர் ஆத்திரம் அடைந்து நிகழ்ச்சியைவிட்டு பாதியில் வெளியேறினர். 

’நேற்று இன்று நாளை’ என்னும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி கடந்த வாரம் வெம்ப்லே, லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த 28 பாடல்களை பாடியுள்ளனர், அதில் 12 தமிழ் பாடல்களும், 16 ஹிந்தி பாடல்களும் இடம் பெற்றது. அதிகமான ஹிந்தி பாடல்கள் இடம் பெற்ற நிலையிலும் தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாக கூறி லண்டன் வாழ் இந்தியர்கள் சிலர் ஆஸ்கர் நாயகன் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிக தமிழ் பாடல்கள் பாடப்பட்டதால் நிகழ்ச்சி முடியும் முன்னே பலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது மட்டும் அல்லாமல் ரசிகர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தனர். “நேற்று இன்று நாளை” என தமிழ் பெயர் கொண்ட நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை ரசிகர்கள் அறியாமல் இருப்பது வியப்பே.

ட்விட்டரில், நாளுக்கு நாள் இந்நிகழ்ச்சிக்கான எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல வட இந்தியர்கள் தமிழ் பாடல்கள் தங்களுக்கு புரியவில்லை எனவும் அதனால் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப தர கூறியும் ட்வீட் செய்து வருகின்றனர். இசைக்கு மொழி இல்லை என்னும் கூற்றை மறந்து போயினர் இந்த இசை ரசிகர்கள்.

இன்னும் சில ரசிகர்கள் ஹிந்தி படம் மூலமே ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்றதாகவும், இதன் மூலம் பிரபலம் அடைந்த ரஹ்மான், ஹிந்தி பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் கடிந்துக்கொண்டனர். 

எதிர்ப்பு ஒருபக்கம் இருக்க, மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவுக்குரல்கள் அதிகரித்து வருகிறது. பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரசிகர்களை கண்டித்து ட்வீட் செய்துள்ளனர்.

பல தமிழ் ரசிகர்கள் ஏ.ஆர்.ஆர்-க்கு எதிராய் எழுந்த ட்வீட்டுக்கு நகைச்சுவையாகவும் கடினமாகவும் பதில் அளித்துள்ளனர். 

ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தமிழ் படம் மூலமே தன் இசை பயணத்தை தொடங்கியதாகவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் பெயர் கொண்ட இந்நிகழ்ச்சியில் அதிகமான ஹிந்தி பாடல்கள் இருந்தும் தமிழ் இரசிகர்கள் யாரும் குறை கூறவில்லை, இசைக்கு மொழி இல்லை என்றும், வார்த்தைகளை விட இசையை ரசிப்பதாகவும் தமிழர்கள் பல வகையான கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து பல பிரபலங்களும் இசை நாயகனுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.

”ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்றபோதே சர்வதேச அரங்கில் தமிழில் பேசினார். அவர் தன் தாய்மொழியில் பேசுவதிலும், பாடுவதிலும் என்ன தவறு இருக்கிறது,” என்றார் நடிகர் மோஹன்ராம். 
பின்னணிப்பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், 


“ஆஸ்கர் வென்றபோது ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இந்தியனாக தெரிந்தார், ஆனால் இப்போது தமிழ் பாட்டுப்பாடினால் உங்களால் ஏன் அவரை ஏற்று கொள்ள முடியவில்லை? என்று கேள்வியெழுப்பி உள்ளார்”.
சின்மயி ட்விட்டர் பக்கம்
சின்மயி ட்விட்டர் பக்கம்
“அமெரிக்க கனவை விரட்டுகிறீர்கள், உங்கள் குழந்தைகள் ஸ்பானிஷ் பேசுகிறார்கள், நீங்கள் லண்டனில் வாழ்கிறீர்கள், ஆனால் தமிழ் பாட்டை கேட்க மூக்கால் அழுகிறீர்கள்” என சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் இந்நிகழ்ச்சியை பற்றி கேட்டப்போது, “ரசிகர்கள் செய்தது கண்டிக்கத்தக்கது” என கூறியுள்ளார்.

இந்தியா போன்ற பல கலாச்சாரம், மொழி கொண்டுள்ள நாட்டில் தமிழ், ஹிந்தி என பாகுபாடு பார்ப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது. இசைக்கு மொழி, கலாச்சாரம், இடம் என்ற எந்த பேதமும் இல்லை என்பதை ரசிகர்கள் அறிந்திருக்க வேண்டும். ட்விட்டரில் தமிழ் ஹிந்தி ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் தங்களுக்கு சொந்தம் என போட்டி போட்டாலும், இது போன்ற கருத்துக்கள் யாவும் இசை நாயகனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, அவர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் எப்பொழுதும் போலவே அமைதிகாத்து வருகிறார்.

கட்டுரையாளர் - மஹமூதா நௌஷின்