'உதய்' திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழ்நாடு இணைந்தது!

0

புது தில்லியில் இன்று மத்திய எரிசக்தி, நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கனிமவளத் துறையின் இணை அமைச்சர் (தனிபொறுப்பு) திரு. பியூஷ் கோயல், உஜ்வால் டிஸ்காம் உறுதி திட்டம் (உதய்) திட்டத்தின் கீழ், மின் விநியோக நிறவனங்களின் (டிஸ்காம்) செயலாக்கம் மற்றும் நிதியை மாற்றியமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோவின் மின் விநியோக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் (எம்.ஓ.யூ.) கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வட்டித் தொகையில் சேமிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியான இழப்பு (ஏ.டி.&சி) மற்றும் மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பை குறைத்தல், பயனுள்ள வகையிலான எரிசக்தி, நிலக்கரி சீர்திருத்தம் ஆகியவற்றில் குறுக்கீடுகள் போன்றவைகளினால் உதய் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த நிகர பயன்களை பெறும்.

உதய் திட்டத்தின் கீழான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம், மாநில அரசு, டான்ஜெட்கோவின் 75% கடன் தொகையான ரூ.30,420/- கோடியை ஏற்றுக் கொள்ளும். மீதமுள்ள கடனை, சராசரி தற்போதைய வட்டி விகிதத்திலிருந்து 3-4% குறைவாக சலுகை விலையில், மறுவிலை நிர்ணயிக்கவோ அல்லது மாநில அரசு உறுதி டிஸ்காம் பத்திரங்களை வெளியிடவோ இத்திட்டம் வழி செய்கிறது. கடன் குறைப்பு மற்றும் மீதமுள்ள கடன் மீதான குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மூலம் மாநிலம், வருடாந்திர வட்டித் தொகையில் சுமார் ரூ.950 கோடி அளவிற்கு சேமிக்க இயலும்.

உதய் திட்டம் டிஸ்காம்களின் இயக்கத் திறன்களை மேம்படுத்த வலியுறுத்துகிறது. மின்னூட்டிகள் மற்றும் மின் விநியோக டிரான்ஸ்பார்மர்களில் கட்டாய மீட்டர் பொருத்துதல், கணக்கிடல், வாடிக்கையாளர்களை அட்டவைணைப்படுத்துதல் மற்றும் இழப்புகளை கண்டறிய புவிக்கோள தகவல் அமைப்பு முறையிலான வரைபடமிடுதல் (GIS Mapping), மின்மாற்றிகள், மீட்டர்கள் போன்றவற்றை உயர்த்துதல்/மாற்றுதல், அதிகளவு பயன்பாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துதல், மின் செலுத்தலில் ஏற்படும் இழப்புகள் குறைப்பு மற்றும் குறைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் வணிகரீதியான (AT&C) இழப்புகளுடன் மின்சக்தி வழங்குதலை அதிகரித்தல் போன்ற திறமையான செயலாக்கத்திற்கு உறுதி பூண்டுள்ளன. ஏ.டி.&சி. இழப்பு மற்றும் மின்சாரத்தை கொண்டு செல்லுதலில் ஏற்படும் இழப்பை முறையே 13.5% மற்றும் 3.7% ஆக குறைப்பதன் மூலம் டான்ஜெட்கோவிற்கு கூடுதலாக ரூ.1,601 கோடி வருவாய் பெற்றுத் தரும்.

உதய் திட்டத்தின் தேவை பக்க குறுக்கீடுகளான, எரிசக்தி திறனுள்ள எல்.ஈ.டி. பல்புகள், விவசாய பம்புகள், பேன்கள் மற்றும் குளிர்சாதனங்கள் பயன்பாடு மற்றும் பி.ஏ.டி. (செயல்படு, அடை, மற்றும் வணிகம்) மூலம் திறமையான தொழிற்சாலை சாதனங்கள் போன்றவற்றின் பயன்பாடு மூலம், உச்சபட்ட உயர் அழுத்த எரிசக்தியை குறைத்தல், உயர் அழுத்த மின் தேவையை குறைத்தல் ஆகியவை தமிழ்நாட்டின் எரிசக்தியை பயன்பாட்டை குறைக்கும். இதன் மூலம் ரூ.2,304 கோடி லாபம் கிடைக்கும்.

மாநிலத்தில் மின் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மின்சாரத்தின் விலையை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாநில அரசு மற்றும் டிஸ்காம் ஆகியவற்றிற்கு ஊக்கத் தொகைகளை மத்திய அரசு வழங்கும். மாநில அரசும், திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்பாடுகளுக்கான இலக்கை நிறைவு செய்தால் தீன்தயாள் உபத்யாயா கிராம ஜோதி திட்டம் (டீ.டீ.யூ.ஜி.ஜெ.ஒய்.), ஒருங்கிணைந்த எரிசக்தி வளர்ச்சித் திட்டம் (ஐ.பி.டீ.எஸ்), எரிசக்தி துறை வளர்ச்சி நிதி (பி.எஸ்.டீ.எப்.) மற்றும் எரிசக்தி மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற இதர திட்டங்களில் கூடுதல்/முன்னுரிமை நிதியை பெறும்.

அறிவிக்கப்பட்ட விலைகளில் கூடுதல் நிலக்கரி மாநிலத்திற்கு கிடைக்க ஆதரவு அளிக்கப்படும். அதிக திறன் பயன்பாட்டை எட்டியிருந்தால், என்.டி.பி.சி. மற்றும் இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் மின்சக்தி கிடைக்கப் பெறும். நிலக்கரி பரிமாற்றம், நிலக்கரி சீரமைப்பு, நிலக்கரி தரக் குறைப்பாட்டை சரிசெய்தல், 100% கழுவுப்பட்ட நிலக்கரி கிடைத்தல் போன்றவை காரணமாக மாநில அரசு, எரிசக்தியின் விலையை மேலும் குறைக்க உதவும்.

இத்தகைய நிலக்கரி சீர்திருத்தங்கள் மூலம் மாநிலத்திற்கு ரூ.4,320 கோடி வரவு கிடைக்கும். இது போன்ற திறமையான நிதி மற்றும் செயலாக்க மாற்றத்தின் மூலம், டான்ஜெட்கோவின் தர மதிப்பீடு உயர்வதோடு, அதன் எதிர்கால மூலதன முதலீடு தேவையை குறைந்த வட்டியில் நிதி வசதி பெற இயலும். இதன் மூலம் மூன்றாண்டுகளில் டான்ஜெட்கோவிற்கு வட்டித் தொகை சேமிப்பாக ரூ.60 கோடி ஏற்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அதிகபட்ச பயன் தமிழ்நாட்டு மக்களை சென்றடையும். டிஸ்காம்களிடமிருந்து அதிக எரிசக்தி தேவை என்பது உற்பத்தி செய்யும் பிரிவுகளின் உயர் ஆலை பளு காரணி (பி.எல்.எப்.) என்பதாகும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு குறைந்த விலையில் மின்சாரம் என்ற பயன் கிடைக்கும். இதன மூலம் மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுவதுடன் வேலை வாய்ப்புகள் பெருகும்.

கடன் சுமையில் உள்ள விநியோக அமைப்புகளுக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வு அளித்து, நிலையான நிதி மற்றும் வளர்ச்சி அடைவதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசால் 20, நவம்பர் 2015 அன்று துவக்கப்பட்டதுதான் உதய் திட்டம். இந்த திட்டத்தில் தமிழ்நாடு இணைந்ததைத் தொடர்ந்து தற்போது 21 மாநிலங்களை அதன் கீழ் கொண்டுள்ளது.