விளையாட்டு செயலி தயாரித்து கலக்கும் 'தமிழ்மகன்'

1

நவயுகத்தில் எல்லாம் விரல் நுனியில்… வீட்டில் மொபைலில் கேம் விளையாடும் குழந்தைகளைப் பார்த்து பெரியவர்கள் பொறாமைப்படும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மறுபக்கம், இது போன்ற வீடியோ கேம்கள் குழந்தைகளை அடிமைகளாக்கியுள்ளது என்ற பரவலான குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. ஆனால் வீடியோ மற்றும் கணினி வழி கேம்கள் மீதுள்ள மோகம் இந்த மதுரை இளைஞரை கேம் டெவலர்ப்பராக தரம் உயர்த்தியுள்ளது. தொழில்நுட்ப புரட்சியின் மீதிருந்த தனியாத தாகமும், பலவகை கேம்களை விளையாடிய ஆர்வமும் தன்னை விளையாட்டுக்கான ஒரு செயலியை தொடங்க தூண்டியதாகக் கூறுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் எளிமையான துவக்கம்

மண்மணம் மாறாத மதுரை நகரத்தின் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த செந்தில் குமார் அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. ஆனால், வேலையில்லா பட்டதாரியில்லை. கணினி குறித்த எந்த ஐடியாவும் இல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்த செந்தில் தற்போது கணினித்துறையில் சாதனை நாயகனாக மிளிர்கிறார்.

பள்ளிப்படிப்பு காலத்தில் நடந்த மறக்கமுடியாத ஒரு நிகழ்வுதான் தனது வாழ்க்கைக்கு நம்பிக்கையளித்ததாக நினைவு கூர்கிறார் செந்தில். “ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது விடுமுறை சமயத்தில் என் நண்பனின் தந்தை ஆய்வுகூடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே கணினியை சுயமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது, அப்துல்கலாம் வழியில் ஒரு ராக்கெட்டை வடிவமைத்து அதை கணினித் திரையில் செலுத்தியது எப்போதும் மறக்கமுடியாத ஒன்று”. இந்த மகிழ்ச்சியான தருணம் அவர் பயணிக்கவேண்டிய பாதை குறித்து, அந்த வயதிலேயே அவருக்குப் புரிய வைத்தது. இந்த உள்ளுணர்வை அவர் மறக்கவே இல்லை. ஏனென்றால் காமிக் புத்தகம் படிக்க வேண்டிய வயதிலேயே ஜாவா, எம்.எஸ் டாஸ் போன்ற கணினி புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டார். இளங்கலைப் பட்டத்தை கணினி அறிவியலில் முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை கணினி செயல்பாட்டியல் (எம்சிஏ) படித்தார், பின்னர் தான் தீர்மானித்த பாதையில் பயணிக்கத்தொடங்கினார்.

வியாபார யுக்தி

கல்லூரிப் படிப்பிற்கு பிறகு காக்னிசன்ட் டெக்னாலஜியில் மென்பொருள் உருவாக்கத்தில் பணியாற்றினர். ஆனால் குடும்ப சூழல் காரணமாக மதுரையில் தன்னுடைய குடும்பத்தொழிலை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 2014ம் ஆண்டு மதுரைக்குத்திரும்பிய செந்தில், தந்தையின் தொழிலான பாத்திரம் மற்றும் ஃபர்னிச்சர் விற்பனையை கவனிக்கத் தொடங்கினார். ஆனால் தொழில்நுட்பத்தின் மீதான அவரது காதல், விதியை விட வலியது. “குடும்பநிலை என்னை மதுரைக்கு வரவழைத்தாலும், நான் தொடர்ந்து என் பாதையில் பயணிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பயணித்துவருகிறேன்” என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் செந்தில்.

தந்தையின் தொழிலை முன்எடுத்துச் செல்வதிலும் புதுமையான சிந்தைனையையே கொண்டுள்ளார் செந்தில். நம்மிடம் பணியாற்றுபவர்களையும் நல்ல மனிதநேயத்தோடு நடத்த வேண்டும். திறமை என்பது பட்டப்படிப்பை வைத்து முடிவு செய்வது அல்ல என்று கருதும் அவர், ஒருவர் எந்த அளவு உண்மையாகவும், சிறந்த நோக்கத்தோடு இருக்கிறார் என்பதே முக்கியம் என்கிறார். ‘வியாபாரத்தை பாதிக்காத வகையில் பணியாளர்களோடு ஒன்றுபட்டு மகிழ்ச்சியான நன்மையான வாழ்வை நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்’ என்பதே செந்திலின் நோக்கம்.

தோல்வியில் கண்ட வெற்றிக்கான பாடம்

தந்தையின் தொழிலை கவனித்து வந்தாலும் தொழில்நுட்பத் தொடர்பை துண்டித்துக் கொள்ளாமல் 2014ம் ஆண்டு ஈ-காமர்ஸ் வர்த்தகம் செய்யத் தொடங்கினார். "குயின்ஸ்ஃபேன்ஸி.காம்"(queenzfancy.com) என்ற இணையதளம் தொடங்கி அதன் மூலம் ஈ-காமர்ஸ் சேவையை செய்து வந்தார். 50 ஆயிரத்துக்கும் குறைவான முதலீட்டிலேயே அந்த இணையதளத்தைத் தொடங்கினார் செந்தில் தொழில்நுட்ப ரீதியில் அது வெற்றி பெற்றாலும், விற்பனையில் அவரால் வெற்றி அடைய முடியவில்லை.

எந்த ஒரு வியாபாரத்தையும் தெளிவான திட்டம் இல்லாமல் தொடங்கினால் அதில் தோல்வியே நேரும் என்பதை இந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று கூறுகிறார் செந்தில். மேலும் தனி நபராக வெற்றியை கண்டுவிட முடியாது என்பதையும் உணர்ந்ததாகக் கூறுகிறார் அவர்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் சிந்தனை

தோல்வியைக்கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியோடு தற்போது செயலியில் கேம்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் செந்தில்குமார். பள்ளி, கல்லூரியில் படித்த காலம் முதலே தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அவர். கல்லூரியில் படித்த போது சிறிய அளவிலான கேம்களை உருவாக்கி அதை தானே விளையாடி மகிழ்ந்து கொண்ட தருணங்களும் இருந்ததாக நினைவுகூறுகிறார்.

உலகப் பொருளாதாரமயமாதல், நகரமையமாதல் என்ற பெரும் மாற்றங்களை நாம் எதிர்கொண்டுவரும் நிலையில், நாம் இன்னும் அடிமைத்தனமான வாழ்க்கையையே பின்பற்றுவதாக வருத்தப்படுகிறார். சிரமங்களை எதிர்கொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் வேலைவாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்கும் மனப்பான்மையை இளைஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் செந்தில். புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் செந்தில்குமார் செயலியில் கேம்களை உண்டாக்கும் பணிக்கு இரண்டு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

செயலியில் புதிய கேம் உருவாக்கம்

கடந்த ஜனவரி மாதம், "ஃபர்ஸ்ட்சீட்.இன்" (Firstseed.in) என்ற இணையதளத்தை தொடங்கினார், கூகுள் ப்ளேஸ்டோரில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இவரது புதிய விளையாட்டு செயலியை நீங்கள் டவுன்லோடு செய்யப் போகிறீர்கள். அது மதுரையில் இருக்கும் செந்தில் மற்றும் அவரது குழுவால் உண்டாக்கப்பட்டதாக இருக்கும். “அடுத்த ஒரு மாதத்திற்குள் சீட்டுகட்டுகளை புதிய பரிமாணத்தில் விளையாடும் விளையாட்டை அறிமுகம் செய்யப்போகிறோம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் செந்தில். 3 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இவரது இணையதளம் இவரைப்போன்ற ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்கு இயங்குதளமாக மாறிவருகிறது. படித்துமுடித்துவிட்டு சாதிக்கத்துடிப்பவர்களை அணியில் சேர்த்து புதுரத்தம் பாய்ச்சிவரும் செந்தில் அவர்களைக்கொண்டு கேம்களை உருவாக்கி வருகிறோம் என்கிறார். அனுபவசாளிகளுக்கு வாய்ப்பு தருவதை விட புதியவர்களை உருவாக்கி வாய்ப்பு அளிக்கவே விரும்புவதாக செந்தில் கருதுகிறார்.

தன்னுடைய முயற்சி பற்றி உணர்ந்து கொள்ளும் அளவு படிப்புறிவு இல்லை என்றாலும் தன்னுடைய பெற்றோர் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகக் கூறுகிறார் செந்தில்குமார். தன் மனைவியும் இதே துறை என்பதால் தனக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்துவருவதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு நன்றாகவே உள்ளது. “மாத சம்பளம் தரும் வேலையில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று வற்புறுத்தாமல், தன் லட்சியப்பாதை நோக்கி பயணிக்க உதவும் தன் மனைவியின் பக்கபலமும் முக்கியக் காரணம்” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் செந்தில்குமார்.

எதிர்கால இலக்கு

இவர் தனது பாதைமாறாமல் பயணிப்பதே வெற்றியைச் சென்றடைய எளிய வழியாக அமையும். சர்வதேச அளவில் கேம்களுக்கான செயலி, தொழில்நுட்ப ரீதியில் நல்ல லாபம் ஈட்டித் தரும் என்பதால் இவரது புதிய சிந்தனை எடுபடும் என்றே தோன்றுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த சந்தையை பயன்படுத்திக்கொள்வோர் மிகவும் குறைவே, அதிலும் தமிழகத்தை பொருத்தவரையில் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை என்பதை அவரும் உணர்ந்து வைத்திருக்கிறார். இந்த சமூகச் சவால், வளர்ச்சி இடைவெளியை மாற்றவேண்டும் என்றும் கனவு காண்கிறார். “தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சென்னையோடு நின்றுவிடாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதுரையில் இந்த செயலியை அறிமுகம் செய்யப்போகிறோம்” என்கிறார் செந்தில்குமார். அதோடு வெளிநாடுகளில் உள்ளது போல சர்வதேச தரத்தில் ஒரு கேம் ஸ்டுடியோவை மதுரையில் நிறுவி சர்வதேச கவனத்தை மதுரையின் பக்கம் ஈர்ப்பதே செந்திலின் எதிர்கால இலக்கு. இரண்டாம் நிலை நகரங்களில் வாழும் இளைஞர்களுக்கு இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக காட்சியளிக்கிறார்.

தொலைநோக்கு பார்வை

புதிய செயலிகளை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையும் கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் செந்தில், தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய விரும்புகிறார். தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்காமல், ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் கைகோர்த்து மதுரையில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் தொழில்முனைவரை www.meetup.com/maduraistartups என்ற இணையதளம் மூலம் இணைத்துள்ளார். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை ஒன்றுகூடி தொழில்நுட்பம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புதிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கணினி யுகத்தில் ஏதோ வேலைக்குப்போனோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல், நாமாக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார் செந்தில். மதுரை மண்ணில் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து, சர்வதேச அரங்கில் நீங்கா இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தமிழ் மகனின் கனவு.

இணையதள முகவரி: Firstseed

Stories by Gajalakshmi Mahalingam