முன்னணித் தலைவர்களுடன் வணிக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் 7 வழிமுறைகள்! 

0

தொழிலைப் பொருத்தவரை ஒருங்கிணைந்திருப்பது தவிர்க்கமுடியாததும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். நீங்கள் தனித்திருக்க விரும்பும் புத்தகப்பிரியராக இருப்பினும் உங்களது வட்டத்தில் இருந்து வெளியேறி மக்களுடன் இணைந்திருப்பது அவசியம். ஏனெனில் சக நண்பர்கள் அல்லது துறையில் முன்னணியில் இருக்கும் தலைவர்களிடமிருந்து அறிவைப் பெறுவதற்கு இதுவே சிறந்த வழி. இந்த இணைப்பானது நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல உதவும்.

இப்படிப்பட்ட இணைப்புகளை நீங்கள் உருவாக்கிக்கொண்டால் உங்களுக்கு உதவி தேவைப்படும்போது இவர்களை அணுகலாம். முன்னணித் தலைவர்களுடன் பேசினால் அவர்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானதாகும். பெரும்பாலான தலைவர்கள் பிறருடன் பேசி தங்களது எண்ணங்களையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு உதவ மகிழ்ச்சியாகவே முன்வருவார்கள்.

முன்னணி தலைவர்களுடன் தொழில் ரீதியான இணைப்புகளை உருவாக்குவதற்கான 7 வழிகள் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மக்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் ஆதரவுடன் கூடிய உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள இவை உதவும்.

1. ட்விட்டரில் தீவிரமாக செயல்படுங்கள்

துறையைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடன் தொழில் ரீதியான இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சமூக ஊடகம் சிறந்த வழியாகும். ட்விட்டர் என்பது பிரபலமானவர்கள், இளம் வயதினர் போன்றோருக்கான பகுதி என நினைப்பவராக நீங்கள் இருந்தால் ஒரு செய்தியை நினைவில் கொள்ளுங்கள். 

பெரும்பாலான தலைவர்கள் மக்களுடன் இணையவும் அவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும் என்கிற காரணத்தினாலேயே ட்விட்டரில் தீவிரமாக உள்ளனர்.

எனவே இந்தத் தலைவர்களை ட்விட்டரில் பின் தொடர்ந்து அவர்களது பதிவுகளை தொடர்ந்து கவனிக்கவும். அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அவர்களது பதிவிற்கு பதிலளியுங்கள். கேள்வி கேட்பதற்கோ ஒன்றிணைவதற்காக நேரடியான தகவல் அனுப்புவதற்கோ தயங்கவேண்டாம். உங்களது எல்லையை கடந்துவிடாமல் பார்த்துக்கொண்டால் போதும். அமைதியாகவும் ப்ரொஃபஷனலாகவும் நடந்துகொள்ளுங்கள்.

2. லிங்க்ட் இன் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களது லிங்க்ட் இன் சுயவிவரங்களை கடைசியாக எப்போது அப்டேட் செய்தீர்கள்? தொழில் ரீதியான இணைப்புகளை உருவாக்கிக்கொள்ள இந்த தளத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக இருந்தீர்களானால் உங்களது சுயவிவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு பொருத்தமான குழுக்களில் இணைந்துகொள்ளுங்கள். விவாதங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும். பயனுள்ள வளங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். மற்ற பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்யலாம். உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை காட்டுவதற்கு இது சிறந்த வழியாகும்.

3. கருத்தரங்குகள் வாயிலாக அதிக பயனடையுங்கள்

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தொடர்பான வர்த்தக நிகழ்ச்சிகள் அல்லது கருத்தரங்குகள் கட்டாயம் இருக்கும். யார் பங்கேற்கிறார்கள், யார் உரையாற்றுகிறார்கள் போன்ற தொடர்புடைய பட்டியலை உருவாக்கிக்கொள்ளுங்கள். எதில் பங்கேற்கலாம் என தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

அதிகளவு பட்டறைகளிலும் அமர்வுகளிலும் பங்கேற்கலாம். சிந்தனையைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்கத் தயங்கவேண்டாம். முன்னணித் தலைவர்களை சந்திக்கவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் கருத்தரங்குகள் சிறப்பான இடமாகும்.

திட்டம் குறித்த ஒரு குறுகிய விளக்கத்தைத் தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். செல்வாக்குள்ளவர்களைச் சந்திக்க நேரும்போது பயன்படும். அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட்டு அடுத்தகட்ட சந்திப்பையும் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

உங்களது பிசினஸ் கார்டை கொடுக்க மறக்கவேண்டாம். பேப்பரால் தயாரிக்கப்பட்ட கார்டை காட்டிலும் உலோகத்தால் தயாரிக்கப்பட்ட கார்ட் ப்ரொஃபஷனலாக இருக்கும். நீங்கள் சந்திக்கும் நபரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களை நினைவில் வைத்துக்கொள்ள இது ஒரு சிறப்பான வழி. மை மெட்டல் பிசினல் கார்டில் பல வகையான கார்டுகள் உள்ளது. இது நிச்சயம் உங்களை தனித்துக் காட்டும்.

4. மீட் அப், விஸ்டேஜ் அல்லது இண்டி ஹேக்கர்ஸ் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

மீட் அப், விஸ்டேஜ் அல்லது இண்டி ஹேக்கர்ஸ் போன்றவை இணைப்புகளை உருவாக்கிக்கொள்ள சிறப்பான பகுதி என்பதால் இந்தத் தளங்களில் இணைந்துகொள்ளுங்கள்

மீட் அப் - ஒத்த சிந்தனையுடைய மக்கள் அடங்கிய குழுக்களுடன் இணைந்து தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மீட் அப் தளம் உதவுகிறது. இந்த நிகழ்வுகளில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆர்வமுள்ள பகுதிகள் குறித்து விவாதித்துக்கொள்ளலாம்.

விஸ்டேஜ் - பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து கற்கவும் உதவும் தளமாகும். நீங்கள் உற்சாகத்துடன் தீவிரமாக பங்கேற்றால் மட்டுமே மக்களால் உங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள முடியும்.

இண்டி ஹேக்கர்ஸ் - வெவ்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோர் தங்களது பயணம் குறித்து பகிர்ந்துகொள்ள உதவுகிறது. இவை திறமையாக தொழில் நடத்துவது குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குவதுடன் மதிப்புமிக்க தொடர்புகளையும் உருவாக்கித் தருகிறது.

5. எப்போதும் மதிப்பைக் கூட்ட முயற்சி செய்யுங்கள்

முன்னணித் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அர்த்தமுள்ள விதத்தில் நீண்ட நாள் உறவை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செல்வாக்கு நிறைந்தவர்கள் தினமும் பலரைச் சந்திப்பார்கள். அவர்களுடனான உங்களது சந்திப்பு உங்களை நினைவில் கொள்ளும் விதத்தில் அமையவேண்டும்.

அவர்களைப் பற்றி போதுமான தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள். அவர்களுடனான உரையாடலின்போது இதை நீங்கள் பயன்படுத்தலாம். பணிவாக நடந்துகொள்ளுங்கள். முற்றிலுமாக உங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படவேண்டாம். கேள்வி கேட்கலாம். அறிவைப் பெற முயற்சிக்கலாம். அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

6. தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்

சில முன்னணித் தலைவர்களைச் சந்தித்ததும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். அவர்களது ஆர்வத்தை அறிந்துகொண்டு உங்களது உரையாடல் அதைச் சார்ந்தே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

Contactually அல்லது Refer போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் உங்களது தொடர்புகளை சேமித்துக்கொள்ளலாம். நினைவூட்டுவதற்காக நீங்கள் பதிவு செய்திருக்கும் தருணத்தில் இந்த செயலி குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ள நினைவூட்டும்.

தனிப்பட்ட விதத்தில் விடுமுறை கார்டுகள் அனுப்பலாம். கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளே எப்போதும் சிறந்தது.

7. ஏற்கனவே அறிமுகமானோரின் தொடர்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பது சிறப்பான வணிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களது துறை சாராத நபர்களுடனும் ஒன்றிணைய இந்த குழுக்கள் உதவும்.

வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் தங்களது துறையில் முன்னணியில் இருக்கும் தலைவர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இத்தகைய குழுக்கள் நீங்கள் கற்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் மதிப்புமிக்க தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவும் உதவும்.

இறுதி கருத்து

இந்த இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும்போது முன்னணித் தலைவர்களும் மனிதர்களே என்பதுதான் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். அவர்களும் நம்மைப் போன்றவர்களே. அவர்களது பதவியைத் தாண்டி அவர்களிடம் சக மனிதர்களைப் போன்றே நடத்தவேண்டும்.

அவர்களுக்கும் விருப்பம் உள்ள விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு இணைப்பைத் தொடரலாம். எண்ணங்களை குறுக்கிக்கொள்ள வேண்டாம். அதற்கு மாறாக பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு அவர்களுக்கு நீங்கள் எத்தகைய வழிகளில் உதவலாம் என ஆராயத் துவங்குங்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : கௌரவ் ஷர்மா | தமிழில் : ஸ்ரீவித்யா

(இது யுவர் ஸ்டோரி வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட சமூக பதிவாகும். இந்த உள்ளடக்கமும் புகைப்படமும் குறிப்பிட்ட ஆசிரியரைச் சேர்ந்ததாகும். இதில் ஏதேனும் காப்புரிமை மீறல் இருக்குமானால் mystory@yourstory.com என்கிற தளத்தில் நீங்கள் பதிவுசெய்யலாம்.)

Related Stories

Stories by YS TEAM TAMIL