இந்தியாவின் முதல் பெண் சுமோ மல்யுத்த வீராங்கனைக்கு உதவிக்கரம் நீட்டத் தயாரா?

0


தனது சமகால பெண் குழந்தைகள் கார்டூன்களைக் கண்டுகளித்து, சமையல் பாத்திரங்களுடன் விளையாடியபோது ஐந்து வயது ஹெத்தெல் டேவ், ஜாக்கி சானின் ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். ‘சிறு வயது முதலே ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் தனக்கு இருந்ததாக ஹெத்தெல் குறிப்பிட்டார். தனது மகளுக்கு ஜாக்கி சான் சண்டையின் மீது இருந்த ஆர்வத்தை கவனித்த அவரது தந்தை அவளை ‘கராத்தே’ வகுப்பில் சேர்த்தார். அதே இடத்தில் ‘ஜூடோ’ வகுப்புகளும் எடுக்கப்பட்டு வந்தது. அதுதான் ‘விதி என்பார்கள்’ என்கிறார் ஹெத்தெல்.

இந்தியாவின் முதல் பெண் சுமோ மல்யுத்த வீராங்கனையாக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள ஹெத்தெல் தன்னுடைய ஏழு வயது முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 

‘என் அளவுக்கு வீழ்ச்சிகளை யாரேனும் சந்தித்திருந்தால் அத்துடன் தமது விளையாட்டைத் தொடரும் எண்ணத்தையே கைவிட்டிருப்பர். எனது கடும் உழைப்பு ஒரு கட்டத்தில் கைக்கொடுத்து வாழ்வின் பாதையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.’ 

ஹெத்தெல் தைவானில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சுமோ போட்டியில் இந்தியாவின் சார்பில் நடுத்தர எடைகொண்ட பெண்கள் பிரிவில் பங்கேற்று ஐந்தாம் இடத்தைப் பெற்றார்.

ஹெத்தெல்லின் ஒவ்வொரு அடிக்கும் உறுதுணையாக நிற்பது, நின்றது அவரது பெற்றோரும் சகோதரன் அக்‌ஷயும்தான். விளையாட்டுக்கு நடுவே கல்வியிலும் சிறப்பாகத் திகழ வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததா? என்று கேட்டதும், குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி ‘நான் தேர்ச்சி அடைந்தாலே போதும் என்ற நோக்கில்தான் கல்வி பயின்றேன். பள்ளிக் கல்விக்கும் மேலாக எனது பெற்றோர் எனக்கு விருப்பான கலையில் நான் சிறப்படைய பக்கபலமாக இருந்தனர்’ என்றார்.

ஏகலைவனாக வெற்றிபெறத் துடிக்கும் ஹெத்தெல்

ஜூடோவை தனது வாழ்க்கையென தெரிவு செய்துகொண்ட ஹெத்தெல், சக நண்பர்கள் போல பதின்பருவத்தில் காதலுக்கு நேரம் ஒதுக்கவேயில்லை. அந்த காலகட்டத்தைத் தவறவிட்டதற்காக வருத்தமடையவும் இல்லை. ‘எனக்கு ஒரு இலக்கு இருந்தது, இருக்கின்றது. இதைவிட்டு வேறு எந்தப்பக்கமும் நான் திரும்பவில்லை. திரும்பவும் விருப்பமில்லை. நான் ஒரு ஒலிம்பியன் என்ற பெயர் பெற வேண்டும். அதை நோக்கியே தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றேன். அதன் பிறகு ஒரு நல்லாசிரியை என்ற மதிப்பைப் பெற விரும்புகின்றேன்.’ ஹெத்தெல் தற்போது இளம் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றார். சமீபத்தில் அவரது மாணவர் ஒருவர் தேசிய அளவிளான போட்டியில் பங்கேற்றார். ‘தேசியளவில் வெற்றியடைந்த மாணவனின் குரு என பெயர்பெறும் நாளுக்காக தொடர்ந்து பயிற்சியளிப்பேன்’ என்றும் பூரிப்புடன் கூறி வருகிறார்.

பள்ளிப்பருவத்தில் தொடர் பயிற்சிகளின் காரணமாக தேவைக்கேற்ப உணவை எடுத்துக்கொண்டு வந்த ஹெத்தெல் கிண்டல்காரர்களின் சீண்டல்களுக்கு உள்ளானாரா? எனக் கேட்டபோது,

‘யாருக்கும் அவ்வளவு தைரியம் வரவில்லை’ எனச் சிரித்துக்கொண்டே கூறினார். கல்லூரியில் ‘ராகிங்’ ஒரு கலாச்சாரமாகவே இருந்தது. ‘ராகிங் செய்ய வந்தவனும் பதறி ஓடிப்போனன்’ என அவர் நினைவுகூர்ந்தார். 

‘எனது நண்பர்கள் வட்டத்தில் சகஜமாகவே என்னை ஏற்றுக்கொண்டனர். அதிலும், என்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துக்கொடுப்பதில் அவர்களின் பங்கு அதிகம். இந்த நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக உள்ளனர். இந்தக் கூட்டத்துக்குள் நான் ஒருபோதும், தனியாளாக உணர்ந்ததேயில்லை’ எனப் பெருமிதமாக தெரிவித்தார் ஹெத்தெல்.

தனது சமூகத்தினரின் புலம்பல்களுக்கிடையே ஹெத்தெலின் வளர்ச்சி

ராஜஸ்தானின் பழமைவாத பிராமணர் சமூகத்தில் பிறந்துள்ள ஹெத்தெல், ‘தற்போதுவரை பெண்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுக்கும் சமூகத்துக்கிடையே நான் எனது வாழ்க்கைப் பாதையை தெரிவு செய்துள்ளேன்’ என்றார். ‘மேற்படிப்பு படிப்பதற்கே போராட்டம் நடத்தும் பெண்களுக்கிடையே, ஆடவர் அரை நிர்வாணமாக போட்டியிடும் விளையாட்டில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். ஆனாலும், நானோ என் குடும்பத்தினரோ சமூகத்தின் இந்தப் பார்வைக்கு தீனி போட விரும்புவதில்லை.”

‘நான் இருமுறை எனது பள்ளியைவிட்டு மாற வேண்டி வந்தது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சியடையாததால் பள்ளியிலிருந்து மாறினேன்.’ இரண்டாவதாக படித்த பள்ளியின் ஆசிரியர்கள் ஹெத்தெலின் வாழ்க்கை இலட்சியத்தை சரியாகப் புரிந்துகொண்டு அவருக்கு ஏற்றபடி வகுப்பு நேரங்களை மாற்றித்தந்தனர். கல்லூரிப் படிப்பு ஹெத்தெலுக்கு இன்னும் எளிமையானதாக இருந்தது. ‘ எனது கல்லூரியில் கிடைத்த உடற்கல்வி ஆசிரியர் அதிசிறந்தவர். ஒரு தந்தைபோல எனக்கு ஆதரவளித்தார். எனக்கு இரண்டு தந்தைகள் எனப் பெருமையாக நான் கூறிக்கொள்ள முடியும்.’

ஹெத்தெல் வசதி படைத்த வீட்டில் பிறக்கவில்லை. ஆகவே, செலவுகளை சமாளிக்க தனது பயிற்சிக்கு இடையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றார். சிறு வயதில் ஜூடோ வகுப்பில் சேர்ந்திருந்தபோது, இருவழிப் பயணத்துக்கான பணமின்றி ஒருவேளை நடந்தே வீட்டுக்கு வருவாராம். ‘நீண்ட நெடு பயணத்தின் களைப்பைப் போக்க எனக்கும், எனது சகோதரனுக்கும் பாதைதோரும் கதை சொல்லுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் இரவரது அப்பா. வேறு எப்படி தனது தந்தையால் தனது பிள்ளைகளிடம் அந்த இளம் வயதில் பேருந்தில் பயணிக்க காசு இல்லை எனச் சொல்லியிருக்க முடியும்.’

மும்பையின் ஹெச்.ஆர். கிளப்பில் பரிசு பெறும் ஹெத்தெல்
மும்பையின் ஹெச்.ஆர். கிளப்பில் பரிசு பெறும் ஹெத்தெல்

அத்தகைய மோசமான சூழ்நிலையிலும் மும்பையில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற கவாஸ் பில்லிமோரியாவிடம் தமக்கு ஜூடோ கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.

‘மும்பையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் அவர், முதலில் என் தந்தையிடமும் பணம் வாங்கிக்கொண்டுதான் எங்களுக்கு பயிற்சியளித்தார். பின்னர், எனது ஆர்வமும், உழைப்பும் அவரை பெரிதும் கவர்ந்தது. ஹெத்தெலின் தந்தையிடம் எனக்கு வருமானம் கூட இரண்டாம் பட்சம்தான், இலவசமாகவே உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க விரும்புகின்றேன்’ என்றாராம்.

கவாஸின் கீழ் ஹெத்தெல் பயிற்சி பெற்றும், பயிற்சியளித்தும் வருகின்றார்.

‘பணம் சம்பாதிப்பது எனது குறிக்கோள் அல்ல. வசதியில்லாத பெண்களுக்கென ஒரு விளையாட்டுக் கழகம் தொடங்க விரும்புகின்றேன். அவர்களுக்கு நல்லப் பாதையை அமைத்துத் தர ஆசைப்படுகின்றேன்.’ கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தராத விளையாட்டுக் கழகம் மீது எரிச்சல் ஏற்படுகின்றதா? என கேட்டதற்கு,

‘எரிச்சல் ஏதும் இல்லை. என்னை தமது நாட்டுக்காக விளையாட்டில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் அழைப்பு விடுத்தனர். எனினும், இந்தியாவின் சார்பில் விளையாடவே நான் விரும்புகின்றேன். நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. யாரும் நான் செய்வதைத் தடுக்க வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள். ஆகவே, எதிர்மறை எண்ணங்கள் என்னை நெருங்க வேண்டாம்’ என்றார்.

மேலும், ஜூடோ கிரிக்கெட் போட்டியைப்போல புகழையும், கவனிப்பையும் பெற இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம். ஜூடோவும் ஒரு நாள் சிறப்பான அந்தஸ்த்தை பெற்று விளங்கும் என மனதார நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தந்தைதான் எனக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி
தந்தைதான் எனக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி

உத்வேகமும், மனச்சோர்வும்

‘என் தந்தைதான் எனக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி’ என்ற ஹெத்தெலிடம் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அடுத்த அடி நகர உதவுவதில் தந்தையின் பங்கு என்ன? எனக் கேட்டோம். அதற்கு,

‘சிறு வயதிலிருந்து இன்று வரை, போட்டியில் தோற்றுப்போன அடுத்த நாள் என்னிடம் வந்து வருத்தப்படாதே, அடுத்தப் போட்டிக்கு இன்னும் கடுமையான உழைப்பைப் போட்டு தயாராகு என்பார். அவரது உற்சாகமும், நம்பிக்கையும்தான் நான் அடுத்த போட்டிக்குத் தயாராகக் காரணம். அவர்தான் எனக்கு அதிர்ஷ்ட தேவதை. அவர் என்னுடன் வரும் போட்டிகளில் நான் தோல்வியைத் தழுவியதே இல்லை’ என்கிறார்.

தற்போது இருபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் ஹெத்தெலுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி வந்ததுண்டா என்று கேட்டோம். ‘இந்தக் கேள்வி அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. ஆனால், திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இதுவரை ஏற்படவில்லை. ஆனால், எனக்கும் ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்று தற்போது தோன்றுகின்றது’ என வெட்கத்துடன் தெரிவித்தார். அதுவும் ‘எனது தந்தைக்கு அடுத்து போட்டி நடைபெறும் வளையத்துக்கு அருகில் நின்று உன்னால் முடியும் ஹெத்தெல்! என்ற உற்சாகப்படுத்துபவராய் அவர் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

ஹெத்தெலின் வேண்டுகோள்

ஹெத்தெலின் குடும்பத்தினர், அவரை ஆதரிக்க எத்தனையோ கஷ்டங்களை இதுவரை சந்தித்துவிட்டனர். அரசோ, அரசு சார்ந்த அமைப்புகளோ உதவ முன்வர வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், ஏதேனும் உதவி கிடைத்தால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கொஞ்சமாவது தீர வாய்ப்புள்ளது. ‘எனக்கு ஸ்பான்சர்கள் இல்லை. போட்டிகாலத்தில் தீவிர பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய வேளையில், வீடு வீடாக சென்று ஸ்பான்சர்களைத் தேடி எனது நிலையை எடுத்துக்கூற வேண்டியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஸ்பான்சார் இல்லாத காரணத்தாலேயே பங்கேற்க முடியாமல் போனது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பே கிடைக்காது. ஆகவே, நான் ஸ்பான்சரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளேன்’ என்று கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் ஹெத்தெல் பங்கேற்றிருந்தார். ‘தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது மட்டுமே எனது லட்சியம். அதற்கு ஸ்பான்சர் அத்தியாவசியம். ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தமது நாட்டின் சார்பாக போட்டியில் பங்கேற்க முடியாமல் போவது எவ்வளவு கொடுமையான விஷயம்’ என கனமான மனதுடன் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு பெருமையும், பதக்கங்களும் தேடித்தர காத்திருக்கும் ஹெத்தெல் போன்ற போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.

ஆக்கம்: ஸ்நிக்தா சின்ஹா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களின் கதைகள்:

பேச முடியாத பயில்வானின் ஓசையற்ற குரலுக்கு காது கொடுப்பார்களா?

சரக்கு வண்டி ஓட்டிப் பிழைக்கும் தேசிய விருது பெற்ற பாக்சிங் வீரர்!