அவசர உதவிகளுக்கு வழிகாட்டி உயிர் காக்கும் உன்னத முயற்சி!

0

மின் கம்பத்தில் சிக்கிக்கொண்டு உதவிக்கு யாரும் இல்லாமல் தவிக்கும் சினிமா வில்லனைப் பார்த்து நாமெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போமே... அதுபோலவே, பெரும்பாலும் காலதாமதாகவே வந்தடையும் ஆம்புலன்ஸும் 'வெறும் இந்தியத் தன்மை' ஆகிவிட்டது. தூரத்தில் இருந்து பார்த்தால், இது பெரிதாகத் தெரியாமல் போகலாம். ஆனால், சற்றே நெருக்கத்துடன் அணுகும்போது இது மிகக் கொடூரமாக விஷயம் என்பது புரியும். இந்த நிலையை மாற்றுவதற்கு நமக்கும் நிச்சயம் பங்கு உண்டு. இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்கள்தான் இந்தியாவில் இறப்புக்கான காரணிகளில் முதன்மை வகிக்கின்றன. ஒவ்வோர் ஒரு லட்சம் பேரில் 4,280 பேர் மட்டும் மாரடைப்புக்கு பலியாகின்றனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானோர், சரியான நேரத்தில் முதலுதவிகள், உயிர்க்காப்பு நடைமுறைகள் கிடைக்காததால் இறக்க நேர்கிறது என்று சொல்கிறது ஓர் ஆய்வறிக்கை. சாலை விபத்தில் மடிந்த 22 வயது இளம்பெண் அர்ச்சனாவின் முகத்தை மும்பைவாசிகள் எளிதில் மறந்திருக்க முடியாது. ஆம், வாகனத்தால் தூக்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அர்ச்சனா அருகே ஒருவர் கூட செல்லவில்லை. எவரேனும் சட்டென முதலுதவிகளுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன்வந்திருந்தால் அந்த உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இது, நம் நாட்டின் மிகவும் வளர்ந்த மாநகரில் கூட அவசர உதவிகள் சரியாக கிடைப்பது இல்லை என்ற உண்மை நிலையையே காட்டுகிறது.

கைக்குழந்தைக்கு நேர்ந்த அபாயம்

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவரான கவிதா ஜெயின், அமெரிக்காவில் 7 ஆண்டுகள் இருந்தபோது இதுபோன்ற சம்பவங்களைக் கடந்து வந்ததில்லை. "என் மகன் பிறந்ததும் என்.ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டான். பிறந்தவுடனே மூச்சுத்திணறலால் தவித்த என் கைக்குழந்தையை உடனடியாக என்.ஐ.சி.யு.வில் வைத்து காத்திடும் வசதியை அந்த மருத்துவமனைக் கொண்டிருந்தது எங்களது அதிர்ஷ்டம்தான். ஒருவேளை, என் வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு அந்த கதி நேர்ந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும்போதெல்லாம் மனம் பதற்றம் அடைந்துவிடும்" என்று மிரட்சியுடன் சொல்கிறார் கவிதா.

ஆனால், கவிதாவின் தோழிக்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தில் இருந்தபோது, தனது மாமாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. ஆரோக்கியமான இளைஞராக இருந்தாலும், மாரடைப்பால் நிலைகுலைந்துபோன அவர் தன் உயிரையே பறிகொடுத்தார். சரியான முதலுதவிகள் கொடுக்கப்படாத நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்ட தகவலை மட்டும் சொல்லி நகர்ந்தனர்.

"அந்தச் சம்பவம்தான் என்னைப் புரட்டிப் போட்டது. இந்தியாவில் உரிய அவசர சேவைகள் சரியாகக் கிடைக்காததால் நம் குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளை எண்ணிப் பார்த்தபோது என் உடம்பு வேர்த்தது. அப்போதுதான் 'கார்டியோபல்மொனரி ரிசஸ்டியேஷன்' (Cardiopulmonary Resuscitation அல்லது CPR எனப்படும் இதய இயக்க மீட்பு உதவி) என்ற உயிர்க்காப்பு பயிற்சி நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்" என்கிறார்.

அமெரிக்காவில் தங்களது குழந்தைக்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பே சிபிஆர் மற்றும் முதலுதவிகளை கவிதாவும் அவருடைய கணவரும் கற்றுக்கொண்டனர். என்னும், இந்த முக்கிய முதலுதவிகள் பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில் பல உயிர்கள் மடிவதை எண்ணி அவர்கள் வருந்தினர்.

"அந்தச் சூழலில்தான் இந்தியாவில் பாமர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அவசர மருத்துவ உதவிகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு லாப நோக்கமற்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். அதன்படி, தாயகம் திரும்பிய பிறகு 'கேம்ப் சிபிஆர்' (Camp CPR) என்ற அமைப்பைத் தொடங்கினோம்."

ஓர் உயிரைக் காப்பது எப்படி?

மாரடைப்பு, பக்கவாதம், சுயநினைவிழத்தல், வலிப்பு முதலான திடீர் பாதிப்புகளின்போது உயிர்க்காக்கும் முதலுதவிகளை வழங்குவது குறித்து வழிமுறைகளைச் சொல்லித்தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் 'கேம்ப் சிபிஆர்' தொடங்கப்பட்டது.

"உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உயிர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதற்கும் இடையே இந்தியாவில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்றால், அந்த இடத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அவரது உறவினர்களாகவோ அல்லது நெருக்கமானவர்களாகவோ தான் இருப்பார்கள். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் முதலுதவிகள் மற்றும் சிபிஆர் ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்த அறிதல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்."

இந்தப் பின்னணியில்தான், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதை இவர்கள் முதன்மைப் பணியாகக் கருதுகின்றனர். இலவச விழிப்புணர்வு முகாம்கள், பயிற்சி வகுப்புகள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பகிர்வுகள், உள்ளூர் பத்திரிகைகள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக இயங்குகின்றனர்.

"உடலில் அறிகுறிகள் மூலமாக அவசரநிலைகளை சரியாகக் கண்டறியும் முறைகளையும், அதன்பின் உடனடியாக அவசர உதவிகளை வழங்கும் முறைகளையும் எல்லாவிதமான முகாம்களிலும் கற்றுத் தருகிறோம். மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு, இதய நிறுத்தம், சுயநினைவிழப்பு மற்றும் காயங்கள் முதலான பாதிப்புகளின்போது உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இந்தியாவில் இந்த பாதிப்புகள்தான் அதிகம் என்பதாலே எங்களின் கவனம் இவற்றில் மிகுதியாக இருக்கிறது" என்று விவரிக்கிறார் கவிதா.

ஒரு விஷயத்தை முழு அறிவுடன் செயல்படுவதை விடுத்து அரைகுறை புரிதலுடன் செய்வதில் உள்ள பேராபத்தையும் சுட்டிக்காட்ட தவறாத கவிதா, "எல்லா விதமான அவசர உதவி தேவைப்படும் காலத்திலும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை. உதாரணமாக, சுயநினைவு இழந்தவர்கள் முகத்தில் உடனடியாக தண்ணீரைத் தெளிக்க வேண்டும் என்பதையும், வலிப்பு வந்தவர்களுக்கு உலோகங்களைக் கையில் திணிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். இவை இரண்டுமே நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர, நல்ல பலனைத் தராது. அதேபோல், பலருக்கும் மாரடைப்புக்கும் இதய நிறுத்தத்துக்கும் இடையிலான வித்தியாசம் பற்றிய முழுமையான தெளிவு இருப்பதில்லை. இந்தச் சிக்கல்கள் பற்றிதான் எங்கள் முகாம்களில் எடுத்துரைக்கிறோம்.

செயல்படும் முறைகள்

எங்கள் குழு ஒத்திகை முறைகளைப் பின்பற்றி, உரிய மருத்துவர்களின் துணையுடன் சிபிஆர் பயிற்சி முகாம்களில் மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மாதத்துக்கு 20-ல் இருந்து 30 மணி நேரம் வரையில் பயற்சிகள் வழங்குவதில் எங்களது 19 தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருமே தொழில்முனைவர்கள், வங்கி முதலீட்டாளர்கள், தரவு விஞ்ஞானிகள், இல்ல நிர்வாகிகள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள்" என்று விவரிக்கும் கவிதாவும் ஃபேஷன் துறையில் தொழில்முனைவராகவும், சமூக வர்த்தக முன்முயற்சியில் ஈடுபட்டு வருபவரும் ஆவார்.

ஒட்டுமொத்தமாக, இவர்கள் இதுவரை ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 2000 பேர் முழு பலன்களையும் விழிப்புணர்வையும் பெறும் வகையில் ஒன்பது நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

"உள்ளூர் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளுடன் கைகோத்து அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விரைவில் சென்று சேர்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். யூடியூபில் விழிப்புணர்வு - வழிகாட்டுதல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளோம். இந்த முயற்சிகளால் பெரிய எண்ணிக்கையிலான மக்களை அடைவோம்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கவிதா.

அடுத்தது என்ன?

மனிதேயம் மிக்க இந்த மகத்தான பணியை மக்களுக்காக இலவசமாகவே செய்து வரும் கவிதா, "எங்கள் முகாம்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று பயனடையலாம். மக்களுக்காக இலவசமாகவே அனைத்தையும் செய்கிறோம். எங்களின் இந்த விழிப்புணர்வு முகாம்களில் அளிக்கப்பட்ட பயிற்சிகளின் மூலம் ஓர் உயிர் காக்கப்பட்டிருந்தால்கூட, அது எங்களது முழு இலக்கும் நிறைவடைந்ததற்கு சமமானதே" என்று சிலாகிக்கிறார்.

"எங்களின் இந்த சமூகப் பணிகளுக்காக நிதிகளையும் நன்கொடை மூலமாகவே திரட்டுகிறோம். எங்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களில் பலரும் நன்கொடை அளிக்கின்றனர். சில நிகழ்ச்சிகளை தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன. தனி நபர்களும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்வது உண்டு." சமீபத்தில்தான் இவர்கள் தங்கள் அமைப்புக்காக 80G தரநிலையைப் பெற்றதும் கவனிக்கத்தக்கது.

தங்கள் முக்கிய இலக்குகளை அடைவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறது இந்த அமைப்பு. "உயிர்க் காக்கும் கருவியான ஏஇடி-க்களை (AEDs - Automated external defibrillators) இந்தியாவில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு சரியான நபர்களை அணுகி வருகிறோம். அவசர உதவிகள் தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக ஆண்ட்ராய்டு செயலி ஒன்றையும் உருவாக்கி வருகிறோம்.

நாங்கள் செல்லும் பாதையின் முன்னே பல சவால்கள் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, உயிர்களைக் காக்கும் உன்னத முயற்சிகளுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஆனால், சவால்களை சரியாக அணுகி, மாற்றத்தை உண்டாக்குவோம் என்ற நம்பிக்கை மட்டும் மிகுதியாக இருக்கிறது" என்று ஆரம்பித்தபோது இருந்த அதே உத்வேகத்துடன் முடித்தார் கவிதா.

'கேம்ப் சிபிஆர்' வலைதளம்

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்