போலியோவால் முடங்காமல் உலக செஸ் போட்டிகளில் தொடர் சாம்பியனாக திகழும் மலைக்கோட்டை நாயகி ஜெனிதா!!

மாற்றுத்திறனாளி என்பதை சாபக்கேடாக நினைக்கும் சமூகத்தில் அறிவைத்தீட்டி விளையாடும் உலக செஸ் போட்டியில் 5வதுமுறையாக சாம்பியன் பட்டம் பெற்று ஜொலிக்கிறார் திருச்சி ஜெனிதா ஆன்ட்டோ.

0

தன்மேல் தனக்கிருக்கும் ஆளுமையின் உச்சமே தன்னம்பிக்கை! அனைத்துமிங்கு சாத்தியமே என அறிவித்திடும் சுய அறிவே தன்னம்பிக்கை என்பதை உணர்த்தியுள்ளார் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனிதா ஆன்ட்டோ. ஜெனிதாவின் தந்தை கணிகை இருதயராஜ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். குடும்பத்தில் கடைக்குட்டி பெண்ணாக பிறந்த ஜெனிதாவின் மழலைப் பருவம் எல்லாக் குழந்தைகளையும் போல இயல்பானதாகவே இல்லை.

1987ம் ஆண்டு பிறந்த ஜெனிதா, 3 வயது வரை ஓடியாடி மழலை நடைபோட்டுள்ளார். திடீரென தாக்கிய போலியோ நோய் அவரை வீட்டிலேயே முடக்கிப் போட்டுவிட்டது. 

“எனக்கு 3 வயது இருக்கும் போது போலியோ நோய் தாக்கிவிட்டது அதில் இரண்டு கால்கள், முகுதுக் தண்டுவடம், ஒரு கை செயலிழந்து விட்டது. விவரம் தெரியாத வயதில் நடந்த அந்த சம்பவம் என்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது," என்கிறார் ஜெனிதா.

தொடக்கநிலைக் கல்வியை நிலக்கோட்டையில் உள்ள தங்கும் விடுதியில் படித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் தனது வீட்டின் அருகில் இருந்த பள்ளியிலேயே 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். 10, 12 மற்றும் இளங்கலை பி.காம் என அனைத்தையும் வீட்டில் இருந்த படியே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார் ஜெனிதா. 

தான் செஸ் விளையாடத் தொடங்கியதற்கான முழுக் காரணமாக இருந்தது தந்தை கணிகை இருதயராஜ் மட்டுமே என்று கூறுகிறார் இவர். அப்பா 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது அதில் சாதித்த மாற்றுத்திறனாளிகள் பற்றி ஒரு பிரிவு வந்துள்ளது. இதைப் பயிற்றுவித்தவர் எனக்கும் ஏன் இதை முயற்சித்து பார்க்கக் கூடாது என்று நினைத்தார். இதோடு அப்பாவும் கல்லூரி காலங்களில் செஸ் விளையாட்டில் ஜாம்பவானாக இருந்ததால் எனக்கு அவரே ஆசானாகவும் மாறினார்,” என்று நெகிழ்கிறார் ஜெனிதா.

எப்போதும் ஒரு விளையாட்டில் முதல் வெற்றியே அடுத்தகட்டத்திற்கு விரல்பிடித்து அழைத்துச்செல்லும், ஜெனித்தாவுக்கும் அப்படித்தான். 

“10 வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினேன், 3 மாதத்திலேயே ஒரு போட்டியில் பங்கேற்று அதில் முதல் பரிசு பெற்றேன், அதுவே எனக்கு உத்வேகமாக அமைந்தது” என்கிறார் ஜெனிதா. 

இதனைத் தொடர்ந்து தந்தையிடமே செஸ் கற்றுக் கொண்டு 2007ம் ஆண்டு முதன்முதலில் வெளிநாட்டில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள 70% விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை ஜெனிதாவுக்கும் இருந்தது. தந்தையின் வருமானத்திலேயே குடும்பம் நடக்க வேண்டும் என்பதோடு உலக அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க செல்லும் போது இருவரின் பயணச்செலவு, விடுதி செலவு என அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் 6 வருட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் 2013-ல் உலக அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் விடாமுயற்சியின் அடையாளமான ஜெனிதா.

2014, 2015, 2016, 2017 என தொடர்ச்சியாக அடுத்தடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியாக Quintuple சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளார் ஜெனிதா. போலந்து, ஜெர்மனி, நார்வே, அர்ஜெண்டினா, கடைசியாக ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளில் பல ஜாம்பவான் போட்டியாளர்களுடன் மோதியுள்ளார் ஜெனிதா.

2014 வரை எங்களது சொந்த நிதியிலேயே உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றோம், 2015-ம் ஆண்டு முதல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதியுதவி செய்துள்ளது, ஆனால் இதையும் பெரும் சிரமம் பெற்றே வாங்கினோம்,” என்கிறார்.

விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் கருதாமல் மற்றத்திற்கான தூண்டுகோளாக கருதும் ஜெனிதா, தடைகளை தாண்ட உதவிகளை எதிர்பார்க்கிறார். மற்ற நாடுகளில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது போல நமது நாட்டில் செய்வதில்லை என்பதால் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு தடையாக மாறிவிடுகிறது. வெளிநாடுகளில் வீரர்கள் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அவர்களுக்கு அந்தந்த நாடுகள் நிதியுதவி முதல் அனைத்து சலுகைகளையும் அளிக்கிறது என்று கூறுகிறார் ஜெனிதா.

இந்தியாவில் இருந்து சதுரங்கப் போட்டியில் பங்கேற்று வரும் ஒரே மாற்றுத்திறனாளி வீரரான ஜெனிதா, சத்தமில்லாமல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.

குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு, ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் பயிற்சி எடுத்து வருகிறார். இதுவரை தந்தையிடம் செஸ் கற்றுவந்தவர், தற்போது சென்னையைச் சேர்ந்த மாஸ்டர் ஒருவரிடம் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் செஸ் பயின்று வருகிறார். சாதாரண வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெறும் நிலையில் மாற்றுத்திறனாளியான தனக்கு அது சாத்தியமில்லாததால் செஸ் தொடர்பான புத்தகங்களை படிப்பது மற்றும் ஆன்லைனில் செஸ் விளையாடுவது என்று சதுரங்கக் காய்களுடன் எப்போதும் சண்டை போட்டு புத்திக் கூர்மையை தீட்டுவதற்கே செலவிடுகிறார் ஜெனிதா.

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்னும் இலக்கை நோக்கி பயணிக்கும் ஜெனிதா அதன் பின்னர் சிறந்த பயிற்சியாளராகி, பல சாம்பியன்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளையும் வைத்துள்ளார். நம்பிக்கை இருந்தாலும் நிதிப் பிரச்னை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக வாய்ப்பிற்காக காத்திருக்கும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் தந்தால் பல வீரர்களை உருவாக்க முடியும் என்கிறார்.

மாற்றுத்திறனாளி என்பவர் உடலால் ஊனம் அடைந்தவரே தவிர, உள்ளத்தில் நம்பிக்கை இருந்தால் முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதை உணர வேண்டும். 

ஆரம்ப நிலையில் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும், ஆனால் அதற்கடுத்த நிலைகளில் மனம் புடம் போடப்பட்டு எதையும் தாங்கும் என்பதை உணர்ந்து, தோல்வியை கடந்தால் மட்டுமே வெற்றியை உரித்தாக்க முடியும் என்ற வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டுள்ளதாக உத்வேகம் தருகிறார் ஜெனிதா.