இசை மற்றும் கணவரின் ஆதரவு மட்டுமே புற்றுநோய் எதிர்த்த லஷ்மியின் போராட்டத்துக்கு உறுதுணை புரிந்தது!

0

லஷ்மி கனகருக்கு பாடுவதென்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனது சிறிய வயதில் சந்தித்த போராட்டங்களை அவரது இனிமையான தெளிவான குரல் தகர்த்திவிடுகிறது. பெல்காம் மாவட்டத்தின் கோகக் தாலுக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் லஷ்மி. எப்போதும் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழலில் வளர்ந்தார். அவருடைய சிறு வயதில் கோவாவில் வசிக்கும் ஒரு வசதியான குடும்பத்திற்கு பணிப்பெண்ணாக அவரை வற்புறுத்தி அனுப்பிவைத்தனர். ஆனால் ஒரு பணிப்பெண்ணாக தனது வாழ்நாள் முழுவதும் கழிவதை அவர் விரும்பவில்லை.

அனைவரது விருப்பத்திற்கும் மாறாக கோவாவிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். குடும்பத்திற்கு சிரமம் ஏற்படுத்தாமல் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக கோகாகிலிருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதியில் சேர்ந்தார். அந்த காலகட்டம் அவர் நினைத்ததைவிட மிகவும் கடினமாகவே கழிந்தது. 

”வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருந்தது. உணவு மூடிவைக்கப்படாமல் திறந்தே இருக்கும். சில நாட்கள் உணவில் புழுக்கள்கூட இருக்கும். ஆனால் பசியில் அதை சாப்பிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” 

வெற்றி பெற வேண்டும் என்ற வெறி 

பள்ளிப்படிப்பை முடித்ததும் மேற்படிப்பிற்கு குடும்பத்தினரால் எந்தவித உதவியும் செய்ய முடியாது என்பதை அவர் நன்கறிவார். பகல் நேரத்தில் கல்லூரியில் படித்தார். அதற்கான கட்டணத்தை செலுத்த ஒரு மருத்துவமனையில் இரவில் பணி புரிந்தார். இப்படிச் செய்வது கடினமாக இருந்தபோதும் அதை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக பன்னிரண்டாம் வகுப்பை முடித்தார்.

கோகாக்கைப் போன்ற ஒரு சிறிய நகரத்தில் அவருடைய தகுதிக்கு மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே இருந்தன. அவருடைய கஷ்டங்களிலிருந்து விடுபட ஒரு வேலை தேடி அங்கும் இங்கும் ஓடினார். 

”செய்தித்தாளில் உள்ளூர் நிறுவனம் ஒன்று அதன் பல் சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஒரு மார்க்கெட்டிங் பணி காலியாக இருப்பதாக விளம்பரம் செய்திருந்தது. அதற்கு விண்ணப்பித்ததும் தேர்வானேன். பணி கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இந்த பணியில் பல புதிய பிரச்சனைகளை சந்தித்தேன்.”

லஷ்மியும் அவருடன் பணிபுரிந்தவர்களும் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும். அதிகம் விற்பதற்காக இவர்களின் வருகையை சற்றும் விரும்பாமல் முகம் சுளிக்கும் நபர்களின் கதவுகளையும் தட்டவேண்டும். எவ்வளவு விற்கிறார்களோ அதற்குரிய ஊதியம்தான் கிடைக்கும். இந்த பணி வாயிலாக கணிசமான வருமானம் கிடைக்காது என்றபோதும் வேறு வழியின்றி தொடர்ந்து கடினமாக உழைத்தார். அவரது விடாமுயற்சி பலனளித்தது. மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. அவரது மகிழ்ச்சிக்கு பணி அல்லாத மற்றொரு விஷயமும் இருந்தது.

”கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான் நான் விஷ்ணுவை சந்தித்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம். வாழ்க்கையில் எனக்கு அமைந்த மிகச் சிறப்பான விஷயமே இதுதான்.”

பெங்களூருவிலிருந்த அதே சுகாதார நிறுவனத்தில் இருவரும் பணிக்குச் சேர்ந்து இருப்பிடத்தையும் மாற்றிக்கொண்டனர். சிறு வயதில் எந்த வேலையை தவிர்த்து ஓடி வந்தாரோ அதே வேலைகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது.

”நோயாளிகளை பராமரிப்பதற்காக அவர்களது வீட்டிற்கு சென்றாலும், அவர்கள் வீட்டில் பணிபுரியும் நபர் வரவில்லையெனில் அந்த வேலைகளையும் செய்யவேண்டியிருந்தது.”

இருவரும் கோகாக்கிற்கே திரும்ப சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தனர். பெல்காம் மாவட்டத்திலிருந்த ஒரு அரசுசாரா நிறுவனத்தில் உதவி நர்ஸாக பணியில் சேர்ந்தார். விஷ்ணு புனேவிலுள்ள ஒரு கால் செண்டரில் பணிபுரியத் தொடங்கினார். இருவரது நிலைமையும் சீரடையத் தொடங்கியது. 

”எனக்கு பிடித்ததை செய்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். நல்ல சம்பளம். சுற்றி நல்ல மக்கள். என் வேலை எனக்குப் பிடித்திருந்தது. இறுதியாக என் பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வந்ததாக தோன்றியது.”

சற்றும் எதிர்பாராத தருணம்

ஆனால் விதி வேறு விதமாக திட்டமிட்டது. பசியின்மை ஏற்பட்டது. லஷ்மியின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது உயரதிகாரி வலுயுறுத்தியதன் பேரில் மருத்துவரை அணுகினார். இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு திடுக்கிடவைத்தது. லஷ்மியின் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அளவிற்கு அதிகமாக காணப்பட்டது. மருத்துவர்கள் அவரது நிலையைப் பார்த்து பயந்து வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டனர். லஷ்மி இது குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் அவரது சகோதரியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டார். மருத்துவமனையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

”என்னுடைய மருத்துவ ரிபோர்ட் வந்துவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர் யாரையாவது உடன் அழைத்து வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டனர். ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை உடனடியாக உணர்ந்தேன்.” ஆனால் குடும்பத்திற்கு தெரியப்படுத்தால் லஷ்மி தனியாக மருத்துவமனைக்கு சென்றார்.

”மருத்துவர் என்னிடம் எந்த விவரத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. என் வீட்டின் நிலைமையை எடுத்துச் சொன்னதும் மிகுந்த தயக்கத்துடன் எனக்கு ரத்தத்தில் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தார். அவரது வாக்கியத்தை முடிக்கும் முன்பே மிகுந்த கலக்கத்துடன் தாங்கமுடியாமல் அழத் தொடங்கினேன். வாழ்க்கையே முடிந்ததுவிட்டதாக தோன்றியது.”

தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும் என்று மருத்துவர் லஷ்மியை சமாதானப்படுத்த முயன்றபோதும் மனதிளவில் எல்லாம் முடிந்துவிட்டதாகவே நினைத்தார். ஒரு மாதத்திற்கு 6,000 ரூபாய் வரை மாத்திரைக்கு செலவழித்தால் பணம் எதுவும் மிஞ்சாது என்கிற நிலையில் இருந்தார். சிகிச்சையை புறக்கணித்துவிட்டு விதியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார். விஷ்ணு உட்பட அனைவரிடமிருந்தும் சற்று விலகியே இருக்கலாம் என்று தீர்மானித்தார்.

”இறக்கப் போகும் ஒருவரை அவரிடம் ஒப்படைத்து அவரை கஷ்டப்படுத்தவேண்டாம் என்று விஷ்ணுவிடமிருந்து ஒதுங்கியே இருந்தேன்.” லஷ்மியின் மேலுள்ள அன்பில் உறுதியாக இருந்தார் விஷ்ணு. 

”அவர் என்னை ஒதுக்காமல் ‘ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்னோடுதான் வாழ்வேன். நான் உன்னோடு இருந்தால் உனக்கு ஒன்றும் ஆகாது. நாம் திருமணம் செய்துகொள்வோம்’” என்றார். 

மீட்புப் பாதை

வாழ்வதற்கு ஒரு புதிய காரணம் கிடைத்தது. அவருக்கு ஏற்பட்ட நோயை ஒரு புதிய உற்சாகத்துடன் அணுக முடிவெடுத்தார். அப்போது தற்செயலாக ஒரு பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மையத்தின் விளம்பரத்தை செய்தித்தாளில் படித்தார். இலவச ஆலோசனைக்கு சென்றார். மருத்துவர்கள் லஷ்மியின் நிலையை கேட்டு அறிந்தனர். அவரை சந்தித்த இரண்டாவது நாள் மருத்துவர்கள் அவர் கையில் ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில் அவருடைய சிகிச்சைக்குரிய அனைத்து செலவுகளையும் தள்ளுபடி செய்துவிட்டு இலவசமாக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது வாக்குறுதியை நிறைவேற்றி 2014-ல் லஷ்மியை திருமணம் செய்துகொண்டார் விஷ்ணு.

”விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டபின் என்னுடைய நம்பிக்கை மேலும் அதிகரித்தது. ஒரு பெண் தனது வாழ்நாளில் என்னவெல்லாம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுவாரோ அத்தனையும் எனக்குக் கிடைத்ததாக உணர்ந்தேன்.”

பலவீனம் காரணமாகவும் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாகவும் அரசு சாரா நிறுவனத்தின் பணியை விட்டுவிட்டார். வீட்டிலேயே இருந்து அவர் அதிகம் விரும்பும் இசையில் கவனம் செலுத்தினார். புற்றுநோய்க்கு எதிரான சண்டையில் லஷ்மிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது அன்புதான் என்றாலும், இசை அவரை நம்பிக்கை இழக்காமல் இருக்கச்செய்தது. உடல்நிலை குறித்த ஆய்விற்கு  முன்னரே உள்ளூர் இசைக்குழுவுடன் பாடிக்கொண்டிருந்தார். எனினும் திடீரென்று இசை அவரது வாழ்க்கையில் மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது.

”நான் பாடும்போது அனைத்தையும் மறந்துவிடுவேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களே என்னை சுற்றி இருக்கவேண்டும் என்று நினைப்பதால் அதற்கான அதிகபட்ச முயற்சியை ஒவ்வொரு முறையும் மேற்கொள்வேன்.”

”இறப்பு தவிர்க்கமுடியாதது. ஆனால் எதனால் ஏற்படும் என்கிற காரணம் பெரும்பாலும் தெரியாது. சிலர் உடல்நலக்குறைவினாலோ சிலர் திடீரென்று ஏற்படும் விபத்தினாலோ மரணமடைவார்கள். எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது. ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள தீர்மானித்தேன். எனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து இசையில் கவனம் செலுத்தினேன். வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் அனைத்தையும் கடந்து சென்றுகொண்டே இருக்கவேண்டும். நோயின் தாக்கம் சிறியதாக இருந்தாலும் அதை மறைக்கவேண்டாம். உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும். ஒரு சிறிய விஷயம் எப்படி, எப்போது மரணத்திற்கான காரணமாக மாறும் என்று உங்களுக்கு தெரியாது.”

அவரது நாட்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழந்தார். அத்துடன் அவரது குடும்பத்தினர் உடல்நலத்துடன் இருக்கவும் உதவினார். புற்றுநோய் அவரது வாழ்க்கையை நொறுக்கியிருக்கலாம். ஆனால் நொறுங்கிய துகள்களை ஒன்று திரட்டி சீரமைத்து அவரது வாழ்க்கையை திரும்பப்பெற்றார். சில நாட்கள் வெற்றியோடும் சில நாட்கள் தோல்வியோடும் அவரை அணுகியது. அவர் இரண்டையும் புன்னகையுடன் வரவேற்றார். ஒவ்வொரு முறை மனமுடைந்து போகும் போதும், அதை எதிர்த்து போராடினார். இப்படிப்பட்ட விஷயங்கள்தான் பாராட்டுக்குரிய ஒரு தைரியசாலியை உருவாக்கும்.

கட்டுரை: ப்ரதீக்‌ஷா நாயக்