சாலையில் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய பெண் காவலர்!

0

ஜுன் மாதம் 1-ம் தேதி. வழக்கமான வார நாட்களின் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் வார இறுதியை எதிர்நோக்கி காத்திருந்த வேளையில் காண்போரை நெகிழச்செய்யும் ஒரு புகைப்படம் இணையத்தில் வலம் வந்தது. ஆதில் ஒரு பெண் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்குப் பாலூட்டுகிறார். இதிலென்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்கலாம்? 

காவலர் சீருடையில் இருந்த அந்தப் பெண் காவலர் பாலூட்டியது பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு என்பதில்தான் ஆச்சரியம் அடங்கியுள்ளது. 

பெங்களூருவில் தொட்டதோகுருவில் உள்ள செலிப்ரிட்டி லேஅவுட்டில் கட்டுமான பணிகள் பாதியளவே நிறைவுபெற்ற ஒரு கட்டிடத்திற்கு அருகில், பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அந்த வழியைக் கடந்து சென்ற ஒருவர் அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கவனித்தார். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலளித்தார். அவர்கள் எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உதவி துணை ஆய்வாளர் ஆர் நாகேஷ் ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,

”நாங்கள் நான்கு காவலர்கள் ரோந்து வாகனத்தில் சென்று குழந்தையை மீட்டு காவல் நிலைத்திற்குக் கொண்டு வந்தோம். குழந்தையை அவ்வாறு விட்டுச் சென்றதைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி கழுத்தைச் சுற்றியிருந்தது. உடல் முழுவதும் ரத்தம். குழந்தையின் உடலைக்கூட சுத்தம் செய்யாமல் விட்டுச் சென்றிருந்தனர்.”

அந்தக் குழந்தைக்கு லக்‌ஷ்மி நர்சிங் ஹோமில் இலவசமாக சிகிச்சையளிக்கபட்டது. குழந்தையிடம் எந்தவித சலனமும் இல்லாததை அதிகாரிகள் கவனித்தனர். அப்போது தன் குழந்தைக்கு தாய்ப்பால் அளித்து வரும் காவல் அதிகாரியான டிஎஸ் அர்ச்சனா விடுப்பு முடிந்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்தார். அவர் குழந்தையை அருகிலிருந்த அறைக்குத் தூக்கிச் சென்று தாய்ப்பால் அளித்து உறங்க வைத்தார்.

குழந்தை அழுதபோது மொத்த காவல் நிலையமும் கொண்டாடி மகிழ்ந்தது. நாங்கள் அனைவருமே பயந்துவிட்டோம். குழந்தை மிகவும் பலவீனமாக இருந்தது. குழந்தைக்குப் பாலூட்டிய பிறகே அக்குழந்தை சற்று சக்தியுடன் காணப்பட்டது. ’இந்தியா டுடே’ உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

”குழந்தைக்குப் பாலூட்டுவதைத் தவிர அந்தச் சூழலில் வேறு என்ன செய்யமுடியும்? அவனைத் தூக்கி பாலூட்டத் துவங்கியபோது என்னுடைய மகன் ஆஷித்திற்கு பாலூட்டியதைப் போலவே உணரந்தேன்.”

பின்னர் அதிகாரிகள் அருகிலிருக்கும் ’ஷிஷு பவன்’ என்கிற குழந்தைகள் மையத்தில் அந்தக் குழந்தையை ஒப்படைத்தனர். அக்குழந்தைக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் பெயரை வைத்துள்ளனர். அந்தப் பெண் காவலரை சந்திக்க விரும்புவதாக முதலமைச்சர் குமாரசாமி தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL