மரணத்தை எதிர்த்துப் போராடி வென்ற மாவீரன்! 

12

இந்திய ராணுவ அகாடமியின் (IMA) முன்னாள் மாணவரான 27 வயது லெப்டினண்ட் ராஜ்சேகர் மருத்துவமனையில் மிகவும் மோசமான நாட்களைக் கழித்துள்ளார். அகாடமியில் வழக்கமான பயிற்சியின்போது நிலைகுலைந்து விழுந்த இவர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உறுப்புகள் செயலிழந்து போனதாகவும் இவர் பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

எனினும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இன்று உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

"ராணுவப் பயிற்சியின் போது முதுகில் அதிக கனத்தைத் தூக்கிக்கொண்டு 10 கிலோமீட்டர் ஓடும் பயிற்சியின்போது உடலில் நீர் சத்து குறைந்து போனதன் காரணமாக நான் திடீரென்று நிலைகுலைந்துவிட்டேன். மருத்துவமனையில் 18 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் 22 நாட்கள் HDU பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் நிச்சயம் பிழைக்கமாட்டேன் என்று என்னுடைய பயிற்சியாளர்களிடம் மருத்துவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்."

அவரது சிறுநீரகமும் கல்லீரலும் 70 சதவீதம் பாதிக்கப்பட்டு 40 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். சக பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் அனைத்து பிரச்சனைகளையும் துணிந்து எதிர்த்துப் போராடியதாக அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தின் பயனாக அகாடமியில் சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருதைப் பெற்றார்.

நான் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் தினமும் நான்கு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளத் துவங்கினேன். அது பலனளித்தது. நான் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் என்னுடைய பயிற்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உடற்தகுதியும் பெற்றுவிட்டேன்.

தமிழ்நாட்டின் மைதான்பட்டி என்கிற பகுதியைச் சேர்ந்த ராஜ்சேகரின் அப்பா 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது ராஜ்சேகரின் வயது 15. குடும்பத்தைப் பராமரிக்க அவரது அம்மா தையல் பணியை மேற்கொண்டார். சியாச்சினின் 12 அசாம் ரைஃபிள்ஸ்-ல் ராஜ்சேகரின் முதல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ’தி பெட்டர் இந்தியா’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL