பால் கலப்படத்தைக் கண்டறியும் உணர்கருவியை உருவாக்கிய ஐஐடி ஆய்வுக் குழு!

0

அதிகரித்து வரும் உணவு கலப்படம் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு. இந்தக் குழு பாலின் தூய்மையை பரிசோதிக்க ஸ்மார்ட்ஃபோன் சார்ந்த உணர்கருவிகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு பாலின் அமிலத்தன்மைக்கேற்ப நிறம் மாறும் காகிதத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 

பேப்பரை ஆராய்ந்து, மாறும் நிறத்தினை துல்லியமாகக் கண்டறிய ஸ்மார்ட்ஃபோனில் அல்காரிதம்களையும் இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். அசுத்தமான பாலை கண்டறிவதில் 99.71 சதவீத அளவு துல்லியத்தன்மை எட்டப்பட்டுள்ளது. ’ஃபுட் அனாலிட்டிக்கல் மெதட்ஸ்’ பத்திரிக்கையின் நவம்பர் மாதம் வெளியான பதிப்பில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.

ஐஐடி ஹைதராபாத்தின் எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையின் பேராசிரியரான ஷிவ் கோவிந்த் சிங் இக்குழுவிற்கு தலைமை வகிக்கிறார். அசோசியேட் பேராசிரியர்களான சௌம்யா ஜனா, சிவ ராம கிருஷ்ண வன்ஜாரி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் சிங் குறிப்பிடுகையில்,

கலப்படத்தைக் கண்டறிய நிற ஆய்வியல் (chromatography), நிறப்பிரிகை (spectroscopy) போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றாலும் இவற்றிற்கு விலையுயர்ந்த அமைப்பு தேவைப்படும். குறைந்த விலையில் எளிதாக பயன்படுத்தப்படும் வகையில் இல்லை. இதனால் பால் பயன்படுத்தும் அதிகளவிலான நுகர்வோரை இது பெரிதாக கவர்ந்திழுக்காது. பால் கலப்படத்தைக் கண்டறிய எளிதாக பயன்படுத்தக்கூடிய சாதனத்தை நாம் உருவாக்கவேண்டும். அதே சமயத்தில் அது விலைமலிவானதாகவும் இருக்கவேண்டியது அவசியம் என ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது.

பாலின் pH-ஐ அளவிட எலக்ட்ரோஸ்பின்னிங் செயல்முறை வாயிலாக உணர்கருவி சார்ந்த சிப் உருவாக்கப்பட்டது. இந்த செயல்முறையின் உதவியுடன் நானோ அளவு நைலான் ஃபைபரினால் ஆன காகிதம் போன்ற பொருள் உருவாக்கப்பட்டு மூன்று நிறங்களின் கலவையுடன் லோட் செய்யப்பட்டது.

ஒவ்வொரு தனிநபரும் பாலின் தூய்மையை சோதிக்கமுடியும் என்பதை உறுதிசெய்ய இக்குழு தற்போது ஸ்மார்ட்ஃபோன்களுக்கான முன்வடிவ அல்காரிதம்களை உருவாக்கியுள்ளது. இதில் உணர்கருவி பட்டையின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் போன் கேமிராவில் படம்பிடிக்கப்படும். இது தரவுகளை pH வரம்புகளாக மாற்றும் என ’தி இந்து’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA