தமிழ் பழமொழிகளை கலைநயத்துடன் புதுமைப் படுத்திய கல்லூரி மாணவி!

0

பழமை புதுமையோடு இணையும்போது அது பலரை ஈர்க்கிறது. அவ்வாறு பழமொழிகளுக்கு புதுமையை புகட்டி பலரை தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார் கோவாவை சேர்ந்த தமிழ்ப்பெண் சினேகா சுரேஷ்.

வட்டார மொழிகளை மையமாகக் கொண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என்று தன் கல்லூரியில் அளித்த ப்ராஜெக்டிற்காக ’இணைப்பு’ என்னும் அழகிய படைப்பை வெளியிட்டுள்ளார் சினேகா. பெங்களூர் தனியார் கல்லூரியில் படிக்கும் இவரை தொடர்புக் கொண்டோம்.

தன் படைப்புகளுடன் சினேகா
தன் படைப்புகளுடன் சினேகா
“என் தாய் மொழி தமிழ் என்றாலும் நான் கோவாவில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது. அதனால் எந்த வட்டார வழக்கை பயன்படுத்த வேண்டும் என குழப்பம் இருந்தது,”

என பேசத் தொடங்கினார் அவர். தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என்றாலும் தன் தாய் மொழி தமிழில் ஒரு ஆய்வறிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தார். இணைப்பு என்னும் தலைப்பிட்ட இதில்; பழமொழிகளுக்கு தமிழ் எழுத்து வடிவிலே ஓர் உருவத்தை கொடுத்து விளக்கியுள்ளார்.

ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?
ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?

உதாரணமாக, “ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?” என்னும் பழமொழிக்கு யானையின் தந்தம் போல் காட்சி அளிக்கும் “ஓ” எழுத்தையும் பானை போல் தோற்றம் அளிக்கும் “ஞ” பயன்படுத்தி இந்த பழமொழியை விளக்கியுள்ளார் (படம் மேலே)

“எனக்கு தமிழ் எழுதத் தெரியாததால் எல்லா எழுத்துடனும் ஓர் படத்தை காட்சி செய்துக்கொள்வேன். அப்படிதான் இந்த யோசனை எனக்கு வந்தது,” என விளக்குகிறார்.

எல்லா வெற்றிக்குப்பின் ஏதோ ஒரு தூண்டுதல் இருக்கும். சினேகாவின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம் தன் பாட்டிகள் என்கிறார்.

தன் பாட்டிகள் மற்றும் தாயார் உடன் சினேகா
தன் பாட்டிகள் மற்றும் தாயார் உடன் சினேகா
“நான் என் இரண்டு பாட்டிகளுடன் வளர்ந்தவள், அவர்கள் எப்பொழுதுமே பேச்சு வழக்கில் பழமொழிகளை அதிகம் பயன்படுத்துவர். அதுவே இந்த ப்ரோஜக்டின் ஆரம்பம்.”

தன் பாட்டிகள் இடமிருந்து பழமொழிகளை கற்று, தன் தாயின் உதவியுடன் அதற்கான அர்த்தங்களை பெற்று இதை செய்து முடித்துள்ளார் சினேகா.

சினேகாவின் படைப்பில் மற்றும்மொரு பழமொழி, “எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு.”  அதாவது எண்ணெய் குடத்தை சுற்றும் எறும்பு போல் பணம் அல்லது செல்வத்தை நோக்கிச் செல்லும் மக்கள் என்று பொருள்.

இந்த பழமொழியை விளக்க, பார்க்க குடத்தின் மேல் பகுதிப்போல் இருக்கும் “கு” எழுத்தை பயன்படுத்தி அதை சுற்றி எறும்புகளை வரைந்துள்ளார். (படம் கீழே)

“எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு
“எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு
“இதில் கோபுரத்தில் உள்ள வண்ணம் மற்றும் கோவா தமிழ்நாடை மையப்படுத்தும் வகையில் கடற்கரை வண்ணங்களை பயன்படுத்தியுள்ளேன், மேலும் என் பாட்டிகளின் புடவைகளில் உள்ள வண்ணங்களை இணைத்துள்ளேன்,” என்கிறார் உற்சாகமாக.

தன் தாய் மொழி, தான் பிறந்த மண் மற்றும் தான் வளர்ந்த சூழலை இணைக்கும் வகையில் பிறந்ததே இந்த ’இணைப்பு’. தனக்காக செய்ய நினைத்த ஒன்று இவ்வளவு வரவேற்பு அடைந்ததை கண்டு மகழ்ச்சி அடைகிறார் சினேகா.

மேலும் தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்பொழுதே தன் தொழில்முனைவுப் பயணத்தையும் துவங்கி விட்டார் இவர். ’tuksac’ என்னும் ஒரு ஆன்லைன் தளத்தை முகநூல் மூலம் துவங்கியுள்ளார். இதில் கைப்பைகள், அலுவலக பைகள், மடிகணினி உரை போன்றவற்றை விற்கிறார்.

கல்லூரியில் இணைப் படிப்பாக தான் கற்ற திரை அச்சிடுதல் மற்றும் சாயமிடுதலை பயன்படுத்தி பிளாஸ்டிக் மற்றும் தோல் பயன்படுத்தாமல் துணிகளில் தயாரிக்கிறார். இந்த ஆன்லைன் விற்பனை நன்றாக சென்றாலும், கோவாவில் சொந்தமாக ஒரு ஸ்டுடியோ நிறுவுவதே தன் இலக்காக வைத்துள்ளாராம் இந்த கோவா தமிழ்பெண்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin