தொழில்முனைவர் டூ அமைச்சர்: மாஃபா பாண்டியராஜனின் வளர்ச்சிப் படிநிலைகள்!

0

தொழில்முனைவராக வாழ்க்கையை தொடங்கிய 'மாஃபா பாண்டியராஜன்' அதில் வெற்றி அடைந்த நிலையில், அரசியலில் பிரவேசம் செய்து, இன்று தமிழக அரசின் காபினட் அமைச்சர் பதவிக்கு உயர்ந்து, தொழில்முனைவோர் சமூகத்தினருக்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாஃபா பாண்டியராஜன் பின்னணி

1992 இல் 60000ரூபாய் சுய முதலீட்டில், 'மாஃபா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ்' என்ற மனிதவள மேம்பாடு நிறுவனம் ஒன்றை சென்னையில் தொடங்கினார் பாண்டியராஜன். இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை சந்தித்த இவரது நிறுவனத்தின் அதிகபட்ச ஷேர்களை, நெதர்லாந்து நிறுவனம் 'வெடியார்' எடுத்துக்கொண்டது. பாண்டியராஜன் என்ற பெயருடன் அவரது நிறுவன பெயரான 'மாஃபா' என்பதையே அடைமொழியாக சேர்த்துக்கொண்டு இன்று பலராலும் அவ்வாறே அழைக்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டிற்குள் இந்த நிறுவனம் மாபெரும் வளர்ச்சி அடைந்து, சுமார் 1000 கோடி ரூபாய் விற்றுமுதல் பெற்றது. அதே ஆண்டு, மற்றொரு நெதர்லாந்து நிறுவனமான 'ரான்ட்ஸ்டாட்', வெடியார்' நிறுவனத்தை கையகப்படுத்தியது. அப்போது பாண்டியராஜன், மாஃபா'வில் இருந்த தன்னுடைய பங்குகளையும் அந்நிறுவனத்திடம் விற்றார். 

பாஜக மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பாண்டியராஜன், பின்னர் தேமுதிக வில் இணைந்து 2009 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011 ஆண் ஆண்டு, பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். 4 ஆண்டுகள் அந்த கட்சியில் இருந்த அவர், பின்னர் 2013 இல் அதிமுக' வில் இணைந்தார்.  

பின்னர் 2015 இல் மீண்டும் பிசினசில் கவனம் செலுத்தத் தொடங்கிய பாண்டியராஜன், பெங்களுருவில், 3 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மனிதவள மேம்பாடு கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கி, தொழிலில் இறங்கினார். 'CIEL HR Services' என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தை பாண்டியராஜனும், அவரது மனைவி லதா ராஜன் உட்பட நான்கு பேர் நடத்தி வருகின்றனர். அப்போது பேட்டி அளித்த பாண்டியராஜன், 

"2010 இல் நான் தொழிலை விட்டு விலகியபோது, எங்கள் நிறுவனம் 2 நிமிடங்களில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அளித்துவந்தது, ஆனால் இப்போது ஒரு நிமிட நேரத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்பதே என் இலக்கு. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதே எங்கள் குறிக்கோள்" என்றார். 

அதே சமயத்தில் அதிமுக'வில் தொடர்ந்து அரசியல் பணிகளையும் ஆற்றி வந்த பாண்டியராஜன், இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ பதவிக்கு ஆவடி தொகுதில் இருந்து போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டமன்றம் நுழைந்தார். பல்துறை திறமை கொண்டுள்ள மாஃபா பாண்டியராஜன், தமிழக கேபினட் அமைச்சரவையில், 'பள்ளிக்கல்வித்துறை மற்றும் 'இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை' அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொழில்முனைவராக தன் பயணத்தை தொடங்கிய மாஃபா பாண்டியராஜன், இன்று ஒரு மாநிலத்தில் அமைச்சராக உயர்ந்துள்ளது ஊக்கம் தரக்கூடிய ஒன்று. மேலும் இளைஞர் நலன் துறையின் வழியே இவர் இளம் தொழில்முனர்வோர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திர செயல்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் வாழ்த்துக்கள்!

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan