இந்திய ரயில் பெட்டிகளில் மின் கழிப்பறைகளை அறிமுகம்!

0

ஒவ்வொரு முறை ஒருவர் கழிப்பறைக் கதவைத் திறக்கும்போது, உள்ளே நபர் வருவதை உணர்ந்து தானாகவே தண்ணீரை ஃப்ளஷ் செய்தால் எப்படி இருக்கும்? அதுவும் ரயிலில் இப்படிப்பட்ட வசதி இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்...  ஆம் துர்நாற்றம் பிடித்த ரயில் டாய்லெட்களில் இருந்து விடுதலை பெறும் நேரம் வந்துவிட்டது எனலாம். 

இந்திய ரயில்வே இ-கழிப்பறைகள் எனப்படும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய கழிப்பறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக கழிப்பறை தினத்தை ஒட்டி இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரயில்வே பெட்டிகளில் இது இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மின் கழிப்பறைகள் பல்வேறு அம்சங்களையும் உணர்கருவிகளையும் கொண்டிருக்கும். இவை அழுத்தத்துடன் ஃப்ளஷ் செய்ய உதவும். அத்துடன் கூடுதல் அம்சங்களும் கொண்டிருக்கும். ஆனால் இதுவரை நிலையான பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவின் லோகமான்ய திலக் ரயில் நிலையம் (LTT) முதல் முறையாக இவற்றை ரயில் எண் 11013, LTT- கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் இணைக்க உள்ளது.

”தற்போதைய கழிப்பறைகளுடன் ஒப்பிட்டு வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள இதன் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் கருத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்,” என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

தானியங்கி முறையில் சுத்தம் செய்ய கழிப்பறைகளில் உணர்கருவிகள் இணைக்கப்படும். ஒவ்வொரு ஐந்து பயன்பாடுகளுக்குப் பிறகு தரைப்பகுதியும் தானியங்கி முறையில் சுத்தம் செய்யப்படும். கழிப்பறையில் குறைவான இணைப்புகளுடனேயே பைப்பிங் செய்யப்பட்டிருக்கும். இது நீரோட்டத்தில் அழுத்தம் அதிகரித்திருப்பதை உறுதிசெய்யும்.

அத்துடன் கழிப்பறைகளில் மேம்படுத்தப்பட்ட காற்றோட்ட அமைப்பு இருக்கும். இது தற்போதைய பயோ கழிப்பறைகளுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். காலி டெட்ரா பேக்குகள், காலி டூத்பேஸ்ட், மற்ற காஸ்மெடிக் ட்யூப்கள் போன்றவற்றைக் கொண்டு துண்டுகளாக்கப்பட்ட ப்ளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி இதன் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள Eram Scientific என்கிற நிறுவனமே இதை உருவாக்கியுள்ளது. இது முழுமையாக ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட ஸ்டீல் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் இந்த சாதனத்தை எளிதாக பொருத்திவிடலாம் என இந்நிறுவனம் தெரிவிப்பதாக பிசினஸ் டுடே குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மின் கழிப்பறைகளை சுமார் 2,000 ரயில் பெட்டிகளுடன் இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL