நீங்களும் எலன் மஸ்க் ஆகலாம்! 

0

பணி நியமன உலகில் ஒரு பக்க ரெஸ்யூம் எனும் கருத்தாக்கம் மிகவும் பிரபலமானது. அதாவது வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர் தனது திறமைகளையும், தகுதிகளையும் ஒரு பக்கத்தில் இடம்பெறச்செய்து மிக நேர்த்தியான ரெஸ்யூமை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது தான் இந்த கருத்தாக்கத்தின் மையம். 

ரெஸ்யூம் என்பது பல பக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டியதில்லை, ரத்தினச்சுருக்கமாக ஒரு பக்கத்தில் கச்சிதமாக இருந்தால் போதும் என்பதே இதன் பின்னே இருக்கும் சித்தாந்தம்.

ஒரு நல்ல ரெஸ்யூம் எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலாகவும் ஒரு பக்க ரெஸ்யூமே முன் வைக்கப்படுகிறது. ஒரு பக்க ரெஸ்யூமில் பலவித சாதகங்கள் இருக்கின்றன. எப்படியும் நேர்காணல் செய்யும் அதிகாரி ரெஸ்யூமை சில நொடிகளுக்கு மேல் பார்க்க போவதில்லை. எனவே ரெஸ்யூம் பல பக்கங்களை கொண்டதாக இருந்தாலும் அவர் அத்தனையையும் படித்துக்கொண்டிருக்க போவதில்லை. முதல் பார்வையில் படுவதை வைத்து தான் தீர்மானிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது.

இதன்படி பார்த்தால், அவரது வேலையை எளிதாக்கும் வகையில் ஒரே பக்கத்தில் ரெஸ்யூம் விவரங்களை தொகுத்தளிப்பது நேர்காணல் செய்பவருக்கும் நல்லது, வேலைக்கு விண்ணப்பித்திருப்பவருக்கும் நல்லது. எனவே தான் ஒரு பக்க ரெஸ்யூம் ஐடியா பெரிதாக கொண்டாடப்படுகிறது.

ஆனால், முதல் முறையாக இந்த ஐடியாவை கேள்விப்படுபவர்களுக்கு ஒரு பக்கத்தில் ரெஸ்யூமை எப்படி தயார் செய்ய முடியும் என்ற சந்தேகம் இருக்கலாம். வேலைக்கான தகுதிகள், திறமைகள் அனைத்தையும் எப்படி ஒரு பக்கத்திற்குள் சுருக்க முடியும் என்ற கேள்வியும் எழலாம்.

இந்த கேள்விகளுக்கான பதில், கோடீஸ்வர இளம் தொழிலதிபரான எலன் மஸ்கின் ரெஸ்யூமையே ஒரு பக்கத்தில் உருவாக்கி காண்பித்திருக்கிறது நோவாரெஸ்யூம் இணையதளம். பேபாலில் துவங்கி ஸ்பேஸ் எக்ஸ் வரையான நிறுவனங்களை நிறுவியவர், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருப்பவர், முன்னோடி தொழிலதிபர், ஸ்டார்ட் அப் முதலீட்டாளர், பொறியாளர் என பன்முகம் கொண்ட எலன் மஸ்கின் அருமை பெருமைகளை எல்லாம் ஒரு பக்கத்தில் அடக்கி விட முடியும் போது, உங்கள் ரெஸ்யூமை இவ்வாறு தயார் செய்ய முடியாதா? என கேட்கும் வகையில் இந்த இணையதளம் செயல்பட்டுள்ளது.

சந்தேகத்ததை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எலன் மஸ்கின் அந்த ஒரு பக்க ரெஸ்யூமை பார்த்தால் அத்தனை கச்சிதமாக இருக்கிறது. எலன் மஸ்கை பற்றிய சுருக்கமான அறிமுகத்திற்கு கீழே, பணி அனுபவம், கல்வி, திறன்கள், மொழிகள் மற்றும் ஆர்வங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் மஸ்கின் திறமைகளும் சாதனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பணி அனுபவம் எனும் பகுதியின் கீழ் அவர் உருவாக்கிய நிறுவனங்களும், தற்போது நிர்வகிக்கும் நிறுவனங்களும் அவற்றின் சிறப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு பக்கத்தை பார்த்தால் போதும் எலன் மஸ்க் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம். இந்த ரெஸ்யூமை ஊக்கமாகக் கொண்டு யார் வேண்டுமானாலும் தங்களுக்கான ஒரு பக்க ரெஸ்யூமை உருவாக்கிக் கொண்டு விடலாம்.

இந்த மாதிரி ரெஸ்யூம் பக்கத்தை உருவாக்கிய நோவா ரெஸ்யூம் தளம் ரெஸ்யூம் உருவாக்க சேவையை வழங்கி வருகிறது. ஒரு பக்க ரெஸ்யூம் கருத்தாக்கத்தின் வலிமையை உணர்த்துவதற்காக எலன் மஸ்கை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதற்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளது. இந்த தளம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மாதிரி ரெஸ்யூமை உருவாக்கி வெளியிட்ட போது, இதன் கருத்தாக்கம் அனைவரையும் கவர்ந்து இந்த ரெஸ்யூம் வைரலானது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மஸ்கின் வளர்ச்சிக்கு ஏற்ப நோவோ ரெஸ்யூம் தளம் அவரது ஒரு பக்க ரெஸ்யூமை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்த முறை அவரது திறன்கள் பகுதியில், அவரது நிர்வாக கொள்கை மற்றும் அணுகுமுறைகள் கச்சிதமாக இடம்பெற்றுள்ளன. அவருடைய சாதனைகள் மற்றும் சான்றிதழ்கள் பகுதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த அசத்தலான ரெஸ்யூமை பார்த்து நாமும் இதே போன்ற ரெஸ்யூமை தயார் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் இந்த தளத்திலேயே அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எலன் மஸ்கின் மாதிரி ரெஸ்யூம் கீழ் பகுதியில் இதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எலன் மஸ்க் பாணியில் நீங்களும் ஒரு பக்க ரெஸ்யூமை உருவாக்க விரும்பினால் இந்த தளத்தை ஆய்வு செய்து பார்க்கலாம். அப்படியே நகலெடுக்க வேண்டும் என்று கூட இல்லை, ஆனால் இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டால் போதும். ஏனெனில் இந்த கருத்தாக்கத்தின் மையம் குறைவே அதிகமானது என்பதாகும். அதாவது குறைந்த பட்ச தகவல்களை இடம்பெற வைப்பதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதாகும். 

ரெஸ்யூமில் எதை எல்லாம் சேர்ப்பது, எதை எல்லாம் விலக்குவது எனும் குழப்பம் இருந்தால் இந்த பார்முலா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை மட்டும் தேர்வு செய்ய கைகொடுக்கும். 

ஆல் தி பெஸ்ட்!