சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சுலபமாக கடனுடதவி பெற சென்னையில் ஆன்லைன் நிதி ஒருங்கிணைப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது! 

1

பிரதமர் நரேந்திர மோடியின் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய சிறு தொழில் நிறுவன கழகத்தின்(NSIC) இயக்குனர் ரவீந்த்ர நாத் சென்னையில் ’ஆன்லைன் நிதி ஒருங்கிணைப்பு மையம்’ (Online Finance Facilitation Center) ஒன்றை துவக்கி வைத்தார். NSIC அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் நிதி வசதியளிக்கும் தளம் www.nsicffconline.in மூலம் எம்எஸ்எம்இ அதாவது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடன் திட்டங்களை, ஒருங்கிணைக்கும் இடமாக இந்த ஆன்லைன் நிதி ஒருங்கிணைப்பு மையம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

www.nsicffconline.in தளத்தின் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களின் கடன் தேவைகள் குறித்து அறிந்து, அதற்கான தகுதிகளை தேசிய சிறு தொழிற்சாலைகள் கழக அதிகாரிகள் மதிப்பிட்ட பின்னர், வங்கிகளில் கடனுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கமுடியும். இதன் மூலம் MSME’ க்களின் கடன் தேவைகள் வேகமாக பரீசிலிக்கப்பட்டு நிதியை பெற எல்லா விதங்களிலும் இத்தளம் உதவிகரமாக இருக்கும். இது MSME சுலபமாக நிதியுதவி பெறவும், கூடுதல் செலவில்லாமல் MSMEக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

இதைத்தவிர இத்தளத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள், வங்கிகள் மற்றும் கடனளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகள் குறித்த விவரங்களும் அவ்வப்போது வெளியிடப்படும்.

கடனுக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் தேவையான உதவிகள், வழிக்காட்டுதல், ஆவணப்படுத்துதல் மற்றும் விண்னப்பத்தை சமர்ப்பித்தல் வரை NSIC’ இன் நிதி ஒருங்கிணைப்பு மையம் உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு தளம், பல வங்கிகளின் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கடனுக்கான விண்ணப்பம் வேகமாகவும், உடனடியாகவும் பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் மூலமே பதிலும் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளனர். 

இதற்காக NSIC, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உட்பட 32 வங்கிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இது சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிதி தேவையை உடனடியாக பெற உதவியாக இருக்கும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம்: NSIC Online Facilitation Center