தண்ணீரினால் இயங்கும் கணினி, ஸ்டான்ஃபோர்டு பேராசிரியர் அசத்தல்!

0

மனு பிரகாஷ் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயோ எஞ்சினியரிங்கில் துணை பேராசிரியராக இருப்பவர். இவரும் இவரது மாணவர்களும் சேர்ந்து ஒரு வித்தியாசமான கணினியை உருவாக்கி இருக்கிறார்கள். அது தண்ணீர் துளிகளை கொண்டு இயங்கக்கூடியது என்பதே அதன் சிறப்பம்சம். மனுபிரகாஷ் இதற்காக நீண்டநாட்கள் போராடி இருக்கிறார்.

கணினியின் அடிப்படை அம்சத்தில் திரவ இயக்கவியலை பயன்படுத்தி இதை சாதித்திருக்கிறார். குறிப்பாக கணினிக்குள் இருக்கும் கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு காந்த மையம், அதில் நீர்த்துளிகளெல்லாம் இருக்கும். அந்த மையம் சுழலும் போது நீர் அதற்கு ஏற்ப சுழலும். இப்படிச் சுழல்வதன் மூலம் கணினியின் அடிப்படை கடிகார அமைப்பு உருவாகும். இதுவே இதன் இயக்க அடிப்படை.

இது பற்றி ஸ்டான்ஃபோர்டு நியூஸ் தளத்திற்கு அளித்த செய்தியில் “புதுவிதமான கணினியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். அதன் மூலம் எந்த ஒரு பொருளையும் கட்டுப்படுத்தவும், கையாளவும் முடியும்” என்கிறார். ஒரு பொருளை ப்ரோக்ராம் மூலம் மட்டுமல்லாது அல்காரிதம் வழியாகவும் இயக்கும் உத்தியை இதன்மூலம் சாத்தியப்படுத்த முடியும். இதை மீஸோ ஸ்கேல் எனப்படும் ஒரு கருவியில் ஏற்கனவே பயன்படுத்திக் காட்டி இருக்கிறார்கள்.

இவர் இதற்கு முன்பு பேப்பர் மைக்ரோஸ்கோப் ஒன்றை கண்டுபிடித்து எல்லோரையும் அசத்தினார். இந்தமுறை அறிவியல் ஆய்வு ஒன்றை கல்லூரி மாணவர் ஒருவரோடு இணைந்து சமர்பித்திருக்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இதுவரை எலெக்ட்ரானிக்ஸில் பயன்படுத்திய எல்லா லாஜிகல் கேட்டையும் உருவாக்க முடியும். சிப்பில் இருக்கும் பார்களை மாற்றினாலே போதுமாம். “எங்களிடம் ஒரு பூலியன் லாஜிகல் சர்க்யூட்டை கொடுங்கள். அதை நீர்த்துளியில் இயங்குவது போல மாற்றிக்காட்டுகிறேன்” என்று சவால் விடுத்தார்.

ஆக்கம் : திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில் : ஸ்வரா வைத்தீ