பாராலிம்பிக் பாட்மின்டனில் தமிழக வீரர் அப்பாஸ் சுகில் பதக்கம் வெல்ல உதவிக்கரம் நீட்டுங்கள்!

2

இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் இருந்து ஜொலிக்கும் விளையாட்டு வீரர்கள் மிகவும் குறைவு. அதிலும் பாரா (மாற்றுத் திறனாளிகள்) விளையாட்டில் ஒருவர் முன்னேறி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க நினைப்பது மிகவும் அரிது. இங்கு நாம் 2020ல் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தயாராகி வரும் பாரா பாடமின்டன் வீரர் அப்பாஸ் சுகில் பற்றி பார்க்கப்போகிறோம்.

பிறவியில் இருந்தே இடது கை இல்லாமல் இருப்பவர் அப்பாஸ்; ஆனால் பாட்மின்டனில் தனது திறனை வளர்த்து ஜெயிப்பதற்கு அது தடையாய் இல்லை. திறமை இருந்தும், சர்வதேச அளவில் பல பதக்கங்கள் வென்றாலும், 2020ல் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள நிதி இல்லாமல் தவிக்கிறார் இந்த வீரர்.

“நான் சிறு வயதில் ஒரு பொழுது போக்கிற்காக பாட்மின்டன் விளையாட துவங்கினேன். ஆனால் இன்று இந்த விளையாட்டே என் முழு மூச்சாகிவிட்டது” என்கிறார்.

பள்ளி பருவத்தில் கோடைக்காலத்தில் விளையாட துவங்கிய அப்பாஸ், தனது 19வது வயதில் பாடமின்டனை தனது இலக்காக எடுத்துக்கொண்டு முறையாக பயிற்சி பெற துவங்கினார். ஈரோட்டைச் சேர்ந்த இவர் முதலில் தனது மாவட்டத்திற்கு ஆட துவங்கி தற்போது சர்வதேச அளவிற்கு விளையாட முன்னேறிவிட்டார். 2011ல் தனது முதல் தேசிய அளவு போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றார். அதிலிருந்து இதுவரை 17க்கும் மேலான தேசிய போட்டிகளை வென்றுள்ளார், சர்வதேச போட்டிகளை சேர்த்து இதுவரை 35 பதக்கங்கள் வென்றுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் அப்பாஸ், டிப்ளமோ முடித்துள்ளார். அதன்பின் படிப்பை தொடர இஷ்டம் இல்லாமல் எல்லாமே இனி பாட்மின்டன் தான் என்று தன்னம்பிக்கையுடன் இறங்கிவிட்டார்.

“விளையாட்டு என்று சொன்னவுடன் படிப்பு தான் முக்கியம் என்று என் குடும்பத்தினர் கூறினர். அதன் பின் நான் விளையாட ஒப்புக்கொண்டாலும் நிதி ரீதியாக எந்த உதவியும் அவர்களால் எனக்கு அளிக்க முடியவில்லை.”

அப்பாஸ் ஒவ்வொரு முறையும் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொள்ள வெளி ஊருகளுக்கு செல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்று சென்றுள்ளார். ஸ்பான்சர்கள், கோச் என்று அப்பாஸ்க்கு உதவ எவரும் இல்லை.

“வட இந்தியாவிற்கு கிடைப்பது போல் நமக்கு பெரும்பாலும் ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை அதிலும் பாரா விளையாட்டு என்றால் அது இன்னும் கடினம். தமிழகம் என்றால் கூட சென்னை, கோயம்பத்தூர் என்று அத்துடன் முடிந்துவிடும்,”

என தற்போதிய விளையாட்டின் சூழலை வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அப்பாஸ். 2016ல் சர்வதேச அளவில் பங்கேற்க தொடங்கியப்பின், ஹைதராபாத்தில் இருக்கும் கோபிசந்த் ஸ்போர்ட்ஸ் அகடமியில் இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் ஜப்பானில் நடக்கவிறுக்கும் பாராலிம்பிக்கில் கலந்துகொள்ள அப்பாஸ் இன்னும் குறைந்தது 14 சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற பொருளாதார வசதி அப்பாஸ்க்கு இல்லை என்பதால் Edudharma கூட்டு நிதி திரட்டல் மூலம் நிதி திரட்டி வருகிறார். 

இந்தியாவிற்காக அப்பாஸ் சுகில் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள https://www.edudharma.com/campaigns/supportsugil இங்கு உதவி செய்யலாம்.

திறமை இருந்தும் பொருளாதாரத்தால் கனவை நிறைவேற்ற முடியாமல் போன பல வீரர்களின் நிலைமை அப்பாஸ்க்கு ஏற்படாமல் இருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin