கோவையின் தெருக்கள் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன. பழைய நோட்டுகளை மாற்றுவதற்கல்ல... தங்களின் அபிமான மருத்துவர் வி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஞாயிறு அன்று கூடிய கூட்டம் அது. ‘20 ரூபாய் டாக்டர்’ என்ற அடைமொழியால் அழைக்கப்பட்ட 68 வயதாகும் Dr.பாலசுப்ரமணியம், ஏழை மக்களின் விடிவெள்ளி. பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் துயரை துடைத்தவரும் கூட. தன்னிடம் வரும் ஏழை நோயாளிகளுக்கு 20 ரூபாய்க்கு அதிகமாக அவர் கட்டணம் வாங்கிக்கொண்டதே இல்லை.
Dr.பாலசுப்ரமணியம், கோவையில் உள்ள சித்தாபுதூரில் தனது கிளினிக்கை நடத்தி வந்தார். ESIC’யில் இருந்து ரிடையரான அவர், ஏழை நோயாளிகளுக்கு தன்னாலான மருத்துவ உதவியை குறைந்த கட்டணத்தில் அளித்து வந்து அவர்களின் உள்ளங்களில் தன்னிகரில்லா இடத்தை பிடித்தார். ஆரம்ப காலத்தில், 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தார் இவர். பின்னர் காலத்துக்கேற்ப கட்டணத்தை சற்று உயர்த்தி, தற்போது 10ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை வாங்கிவந்தார். இந்த கட்டணத்துக்குள் தனது நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி தேவைப்பட்டாலும் போட்டுவிடுவார். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. இப்படி ஒருவை பார்க்கத்தான் முடியுமா??
ஒரு நாளைக்கு 150 முதல் 200 நோயாளிகள் வரை இவரை தேடி வருவது வழக்கம். Dr.பாலசுப்ரமணியம் பொதுவான நோய்களை சிகிச்சை அளித்து குணப்படுத்துவார். மேல் சிகிச்சை தேவைப்படுவோரை தனக்கு தெரிந்த குறைந்த கட்டணம் பெறும் பிற வல்லுனர்களிடம் அனுப்பிவைத்து உதவுவார். கடந்த ஆண்டு கோவை போஸ்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில்,
“நான் வசூலிக்கும் கட்டணத்தை எனது இட வாடகைக்கும், என் செலவுக்கும் மட்டும் பயன்படுத்துவேன். எனக்கென்று உதவிக்கு நர்ஸ் அல்லது உதவியாளர் என்று யாரும் இல்லை. அதனால் கூடுதல் கட்டணம் வாங்குவதில்லை, என்று தெரிவித்துள்ளார்.
அவர் மரணம் அடைந்த செய்தியை கேட்டு, நேற்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்கள், அவரது உடலுக்கு தங்களது மரியாதையும், கண்ணீரையும் செலுத்தி வழி அனுப்பி வைத்தனர்.
“அவர் எங்களுக்கெல்லாம் தங்கமான மனிதர். அவரது இறப்பு எங்களை போன்றோருக்கு பெரும் இழப்பு,”
என்று அவரது நோயாளி அருண் தி நியூஸ் மினிட் பேட்டியில் கூறியுள்ளார்.
“இவரை போல வேறு ஒரு டாக்டர் இருக்கவே முடியாது. இவர் எங்களது கடவுள். பல மருத்துவர்கள் பணத்தை ஈட்ட மட்டுமே பணி செய்கின்ற நேரத்தில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத உன்னத மனிதர் இவர்,” என்றார் மற்றொரு நோயாளி.
Stories by YS TEAM TAMIL