அப்துல் கலீம் - ஜனாதிபதி விருது பெற்ற கண்டுபிடிப்பாளர்

0

அப்துல் கலீம் ஒரு கண்டுபிடிப்பாளர். சின்னச் சின்னதாக நிறைய கண்டுபிடித்திருக்கிறார். தன் கண்டுபிடிப்புகளுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலின் கையால் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவரது கீழ்மட்ட கண்டுபிடிப்புகளுக்காக தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைச் சார்பில் விருதும் பெற்றிருக்கிறார்.

இவரது கண்டுபிடிப்புகள் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது துவங்கியது. அப்போது இவரது வீட்டில் கைச்செலவுக்காக கொடுக்கும் 2 ரூபாய் பணத்தை தினமும் சேர்த்து க்ரிஸ்டலால் ஆன பறவை ஒன்றை வாங்கி இருக்கிறார். அதைக்கொண்டு ஒரு வரவேற்புக் கருவி ஒன்றை உருவாக்கினார். யாராவது இவரது அறைக்குள் நுழைந்தால் அந்த கருவி தானாகவே திறந்து “ஈத் முபாரக்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை காட்டிவிட்டு மூடிக்கொள்ளும்.

பக்கத்துவீட்டில் ஒரு முறை திருடு போயிருக்கிறது. இனி திருடன் வந்து கதவை தொட்டால், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். அது போன்ற ஒரு கருவியை உருவாக்கி அவருக்கு கொடுத்திருக்கிறார் இவர். இத்தனை புத்திசாலித்தனம் கொண்ட அப்துல், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா என்ற சின்ன கிராமத்தை சேர்ந்தவர். அப்பா உருது சொல்லிக்கொடுப்பவர். அம்மா படிக்காதவர்.

அவர்களைப் பொறுத்தவரை பையன் நன்கு படித்து ஒரு அரசாங்க வேலைக்கு சென்றுவிட வேண்டும் என்பதே. கண்டுபிடிப்புகள் என்பதாக சொல்லி தன் நேரத்தை வீணடிக்கிறார் அப்துல் கலீம் என அவர்கள் கவலைப்படுகிறார்கள். கலீம் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

பள்ளிப்படிப்பை முடித்ததும் மேற்படிப்பாக உளவியலை தேர்ந்தெடுத்திருக்கிறார். கண்டுபிடிப்புகளின் மீது மாறாத காதலை வைத்துக்கொண்டு பொறியியலை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று கேட்டால் சிரிக்கிறார்.

பொறியியல் உருவானதே உளவியல் அடிப்படையில் தான். மக்களின் உளவியலை புரிந்துகொண்டால் தான் அவர்கள் தேவைக்கு ஏற்ப கண்டுபிடிக்க முடியும், என்கிறார்.

ஒருமுறை எதேச்சையாக இவரது உளவியல் பேராசிரியரை வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். இவர் வீடு முழுக்க ஒரு ஆய்வுக்கூடம் போல இருப்பதை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். இவருக்கு சரியான வழியை காட்டியிருக்கிறர். தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். இதன் விளைவாக நவம்பர் 21, 2009 அன்று ஜனாதிபதி விருதை பெற்றிருக்கிறார்.

நான் ஒரு நல்ல கண்டுபிடிப்பாளர், பொறியாளர். ஆனால் நல்ல தொழில்முனைவர் இல்லை. எனக்கு தொழில் கணக்குகள் புரியவில்லை.

2011ம் ஆண்டு ஜாக்ரிதி யாத்திரை என்ற பெயரில் 350 பேரோடு ஒரு பயணம் புறப்பட்டார். அது தான் இவரது வாழ்க்கையை மாற்றியது. இந்தப் பயணம் கொடுத்த அனுபவம் ஒரு புதுநிறுவனம் துவங்கும் திசையை நோக்கி இவரை தள்ளியது. குறைந்த விலையில் சோலார் மேஜை விளக்கு கண்டுபிடித்தார். ஆனால் இதைத் தயாரித்து விற்பனை செய்ய 5 லட்ச ரூபாய் முதலீடாக தேவை. எனவே இதை கிடப்பில் போட்டார்.

சித்தார்த் சின்ஹா என்ற ஒருவருக்காக, அவரது வீட்டில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விளக்குகளை கட்டுப்படுத்தும் கருவியை உருவாக்கித் தந்தார். அது ஜி.கே சின்ஹா என்ற முதலீட்டாளரை கவர்ந்தது. அவர் பல தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர். அவர் கவுதம் குமார் என்பவரை அறிமுகப்படுத்தினார்.

கவுதம் குமார் ஹார்வர்டில் படித்தவர். அவருக்கு கலீமின் கண்டுபிடிப்புகள் பிடித்துபோனது. இருவரும் இணைந்து மண் பரிசோதனை மற்றும் பருவநிலை மாற்றத்தை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை உருவாக்கினார்கள். இந்த கருவி, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பகுதியாக உள்ள சிஐபிடி (Centers for International Projects Trust (CIPT)) அமைப்புக்காக உருவாக்கப்பட்டது.

குறைந்தவிலையில் பருவநிலை மாற்றத்தை கண்டுபிடிக்கும் கருவியானது சூரிய மின்சக்தியில், கிளவுட் கம்ப்யூட்டிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கக்கூடியது. இதற்காக கட்டிடத்தின் மேல்பகுதியில் சென்சார்களை பொருத்தினாலே போதும்.

நிறுவனங்களுக்கு இதை தயாரித்துக்கொடுக்க 15,000ரூபாய் ஆகும். உள்ளூர் பயன்பாட்டுக்கு 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை ஆகும். ஜார்க்கண்டை சேர்ந்த பிர்சா விவசாய பல்கலைக்கழகத்திற்கு இந்த கண்டுபிடிப்பு பிடித்து போனது. அங்காரா பகுதியில் இதை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இது 700 விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

அப்துல் கலீம் தற்பொழுது சூரிய மின்சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய இரட்டை லெட் விளக்கை உருவாக்கி கொண்டிருக்கிறார். 5 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும், 24 மணிநேரமும் இயங்கும் என்கிறார். எல்லாவற்றையும் குறைவான விலைக்கு கொடுப்பதே தன் நோக்கம் என்கிறார். அதற்கு ஏற்றார் போன்ற முதலீட்டாளர் கிடைப்பதே முக்கியம் எனக் கருதுகிறார்.

ஆங்கிலத்தில் : Tarush Bhalla | தமிழில் : Swara Vaithee