குழந்தைகளுக்கு தேவையான செய்திகளை, பொது அறிவை சுவாரசியமாக அளிக்கும் செயலி! 

0

தேர்வு முடிந்து குழந்தைகள் வீட்டில் விடுமுறையைக் கொண்டாட ஆரம்பிக்கும் நேரம் இது. காலை எழுந்தது முதல் சதா சர்வகாலமும் டிவி அல்லது போனில் கார்ட்டூன், கேம்ஸ் என்று விளையாட ஆரம்பித்துவிடுவது எல்லா அம்மாக்களுக்கும் தலைவலி தான். இதனால் குழந்தைகளின் கண் கெட்டுவிடும், தேவையற்ற நிகழ்ச்சிகளால் மனம் கெட்டுவிடும் என்ற கவலை பெற்றோர்கள் எல்லாருக்கும் இருப்பதும் சகஜம். 

இதற்கெல்லாம் மாற்றாக குழந்தைகளை பயனுள்ள வழியில் கொண்டு செல்ல நினைத்து ஒரு ஆப்பை உருவாக்கியுள்ளனர், ரித்திகா சிங் மற்றும் தேவிகா பாண்டே. The Young Chronicle என்ற பெயரிலான அந்த செயலி குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு நியூஸ்பேப்பர். பிரத்யேகமாக குழந்தைகளுக்கு மட்டுமான செய்திகளை அளிக்கக்கூடிய இந்த ஆப்பை இரண்டு அம்மாக்கள் இணைந்து தொடங்கியுள்ளனர். 

2009-ல் ரித்திகா சிங் 21 வயதான கல்லூரி பெண்ணாக இருந்தபோதே, AchaBacha.co.in, என்ற பெற்றோர்களுக்கான சமூக வலைதளத்தை தொடங்கினார். இதில் பெற்றோர்கள் தங்களுக்குள் சேட் செய்து கொண்டு, குழந்தை வளர்ப்பிற்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு பயனுற்றனர். குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகள், அதன் செய்முறைகள், நீதிக்கதைகள், மருத்துவ ஆலோசனைகள், குழந்தைகளுக்கு ஏற்ற செய்திகள் என்று அனைத்தும் இத்தளத்தில் இடம் பெற்றது. 

இந்த தளம் நன்றாக சென்று கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக் அம்மாக்கள் க்ரூப்கள் தொடங்கப்பட்டதில் இருந்து தளத்தின் வருவாயில் இடர்பாடு ஏற்பட்டது. அதனால் ரித்திகா க்ரூப்ஆன் நிறுவனத்தில் பிஆர் மற்றும் டிஜிட்டல் மீடியா பிரிவில் பணிக்கு சேர்ந்துவிட்டார். தன் புதிய வேலையில் பிசியாக ஆனாலும், பெற்றோர்களுக்கான ஆப் உருவாக்குவது குறித்து மனதில் நினைத்துக் கொண்டே இருந்தார். அப்படி, அக்டோபர் மாதம் 2016-ல் தொடங்கியதே The Young Chronicle ஆப்.

இந்த ஆப் ஆண்ட்ராடில் பயன்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான செய்தி செயலி. ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு குழந்தைகள், ஏழு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு என நான்கு பிரிவுகளாக இதில் உள்ளது. செய்தி, கதைகள், ஆக்டிவிட்டீஸ் மற்றும் தொடர்பு கொள்ளுதல் என்ற பகுதிகள் அந்தந்த பிரிவு மாணவர்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பில் உள்ளது. இதற்கான உள்ளடக்கம், சில அம்மாக்களால் எழுதப்படுகிறது. இவர்கள் அனைவரும், குழந்தைகளுக்காக தங்களது பணியை விட்டுவிட்டு வீட்டில் இருப்பவர்கள். இது பற்றி ரித்திகா கூறுகையில்,

“இந்த ஆப் மூலம் அம்மாக்களுக்கு போதிய வருவாய் வாய்ப்பு இருக்கவேண்டும் என்று எண்ணினோம். குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் தரும் அதே வேளையில், அம்மாக்களுக்கும் உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்றால் கொள்ளை பிரியம். அதனால் தான் பொது அறிவை ஆப் வழியே சுவாரசியமாக கொடுத்தால் குழந்தைகள் அதை விரும்புவார்கள்.”

தி யங் க்ரானிக்கல் (The Young Chronicle)

குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அவசியமான தகவல்களை மட்டும் தரவேண்டும் என்பதே ஆப்பின் நோக்கமாகும். தினசரி பேப்பர்கள் போலல்லாமல் தேவையற்ற குற்றச்செய்திகள், அரசியல் செய்திகளை தவிர்த்து குழந்தைகளுக்கு முக்கியமானவை மட்டுமே இச்செயலி மூலம் அளிக்கின்றனர். 

”நான் AchaBacha தொடங்கியபோது, தொழில்நுட்பத்தின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அதை வைத்துக்கொண்டு பெற்றோர்களுக்கு உதவ நினைத்தேன். இப்போது நானும் ஒரு தாய் என்பதால், நல்ல புரிதலுடன் இதை செய்கிறேன். நான் முதுகலையில், இளம் பருவத்தினரின் விளையாட்டு விருப்பங்கள் பற்றி செய்த ஆய்வு, குழந்தைகளின் மனநிலை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள உதவியது,” என்றார் ரித்திகா. 

மாஸ் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்ற ரித்திகா, MICA-வில் முதுகலை டிப்ளோமா முடித்துள்ளார். அங்கு கிடைத்த கல்லூரி தோழி தேவிகா பாண்டே உடன் இணைந்து தான் The Young Chronicle செயலியை தொடங்கியுள்ளார். 

தேவிகா, iDiscoveri, எடுகாம்ப் போன்ற கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ளவர். பாடத்திட்டம் வகுத்தல், உள்ளடக்கம் தயாரித்தலில் தேர்ச்சி பெற்றவர். அதன் படி, குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றவாறு உள்ளடக்கம் தயாரிக்கிறார்.  

செயல்பாடு

இதுவரை 1100 பதிவிறக்கங்களை இவர்களின் ஆப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் தானாக, மார்க்கெடிங் இல்லாமல் கிடைத்தவை. சுய நிதியில் தொடங்கிய நிறுவனம் என்பதால் மார்க்கெடிங்கிற்கு பட்ஜெட் இவர்களிடம் இல்லை. ஒரு நாளைக்கு சுமார் 100 பேர் இவர்களது ஆப்பை பயன்படுத்துகின்றனர். 

ரித்திகா மற்றும் தேவிகா, தங்கள் ஆப்’இல் விளம்பரங்கள் போடுவதில்லை. பள்ளிகளுடன் இணைந்து உள்ளடக்கம் உருவாக்கி, அவர்களுக்கான பிரத்யேக செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இலவசமாக இயங்கும் இச்செயலி, விரைவில் கட்டணத்துக்கு உட்படுத்தப்படும். இதற்கான முதலீடை நோக்கி காத்திருக்கின்றனர். 

ஆப் தயாரிக்க இவர்கள் வேறு ஒரு தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களுக்கான டெவலப்பர்கள் யாரும் இல்லை. தங்களுக்கு தேவையான வடிவில் டெவலப்பர்களுடன் ஆலோசித்து வடிவமைத்துள்ளனர். குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில், வீடியோ, படங்கள், கேம்கள் என்று அனைத்து விஷயங்களையும் இதில் புகுத்தி செய்திகளாக அளிக்கின்றனர். வாராவாரம் ஆப்பில் மாற்றங்கள் கொண்டுவருகின்றனர். 

உங்கள் குழந்தைக்கு பொது அறிவை அவர்களுக்கு பிடித்த வகையில் அளிக்க விரும்பும் பெற்றோர் என்றால் இந்த ஆப்’பை நிச்சயம் பதிவிறக்கம் செய்து அவர்களை மகிழ்வியுங்கள். இது அறிவை வளர்ப்பதுடன் நேரத்தையும் பயனுள்ளதாக கடத்த பயன்படும்.