தமிழக வீரர் சதீஷ் குமார் உட்பட  காமன்வெல்த் போட்டிகளில் 5 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா!   

0

ஏப்ரல் நான்காம் தேதி 2018-க்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாகத் துவங்கியது. அதில் இதுவரை கலந்துகொண்ட இந்திய வீரர்களில் ஐந்து பேர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

சதீஷ், மீராபாய் சானு, குருராஜா, தீபக் மற்றும் சஞ்சிதா சானு
சதீஷ், மீராபாய் சானு, குருராஜா, தீபக் மற்றும் சஞ்சிதா சானு

விளையாட்டின் முதல் நாளில் நடந்த பளுதூக்கும் போட்டியில் வீரர்கள் மீராபாய் சானு மற்றும் பி.குருராஜா வெற்றிபெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதகத்தை கைப்பற்றியுள்ளனர்.

மீராபாய் 86 மற்றும் 110 கிலோ எடையை தூக்கி 48 கிலோ பெண்கள் பளு தூக்கும் போட்டியில் வெற்றிப்பெற்று தங்கம் வென்றுள்ளார். மணிப்பூரை சேர்ந்த இவர் 2014-ல் இருந்து பல சர்வேதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் கலந்துக்கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மீராபாய் சானு
மீராபாய் சானு

இவரை தொடர்ந்து அன்றே களம் இறங்கிய மற்றொரு பளு தூக்கும் வீரர் குருராஜா வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி வென்றுள்ளார். 149 கிலோ தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றார். இதை தொடர்ந்து ஊடகத்துடன் பேசிய குருராஜா,

“முதல் இரண்டு முறை நான் சற்று சறுக்கிய போது என் பயிற்சியாளர் இதில் தான் என் வாழ்க்கை என்பதை நினைவூட்டினார். மேலும் என் குடும்பத்தையும் என் நாட்டையும் நினைத்துக்கொண்டு விளையாடி வெற்றிபெற்றேன்,” என்றார்

அதோடு மூன்றாவது நாளில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் சஞ்சிதா சானு மற்றும் தீபக் லாதர் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ளனர். சஞ்சிதா 53 கிலோ எடைக்கான பெண்கள் பளுதூக்கும் போட்டியில் 192 கிலோ தூக்கி இந்தியாவிற்கான இரண்டாவது பதகத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். அதே நாளில் 69 கிலோ ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் தீபக் வெண்கலம் வென்றுள்ளார்.

இவர்களை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் இன்று பளு தூக்கும் போட்டியில் மூன்றாம் தங்கத்தை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார். 25 வயதான இவர் 317கிலோ (114 + 173) எடையை தூக்கி அபார வெற்றி அடைந்துள்ளார். போட்டியில் வென்று பதகத்தை பெற்று ஊடகத்திடம் பேசிய சதீஷ்,

சதீஷ் குமார் சிவலிங்கம்
சதீஷ் குமார் சிவலிங்கம்
“194 கிலோ தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் என்னால் இதை செய்ய முடியுமா என சந்தேகம் இருந்தது. என் உடல் முழுமையாக ஒத்துழைக்காமலே தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் சதீஷ் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் அதிகம் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பாக விளையாட இருப்பதாக தெரிவித்தார் இந்த தமிழ்நாட்டு வீரர்.

இவரது தந்தை ஓர் இந்திய ராணுவ வீரர் மற்றும் பளு தூக்கும் வீரர் ஆவார். சதீஷ் குமாரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு படிக்கலாம்.

இதுவரை இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவுபெறுகிறது. இன்னும் நம் வீரர்கள் நம் தேசத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம். தற்பொழுது இந்தியா பதக்கப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.

கட்டுரையாளர்: மஹ்மூதா நெளஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL