உணவுப் பிரியர்களை தனது ஹோட்டல்கள் மூலம் போல்ட் செய்துள்ள ஜாஹிர்கான்!

0

ஜாஹிர்கான் இந்திய அணியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற பந்துவீச்சாளர். கிரிக்கெட்டுக்குப் பிறகு அவருக்கு பிடித்தமான ஒன்று உண்டென்றால் அது உணவு. எனவே 2005ம் ஆண்டு தன் பெயரிலேயே உணவகம் ஒன்றைத் துவங்கினார்.

ஜாஹிரின் சகோதரர் அனிஸ்கான் இந்த உணவகத்தின் இயக்குனராக இருப்பவர். இவர் 2006ம் ஆண்டு தான் இதில் இணைந்தார். உணவோடு நல்ல உபசரிப்பையும் கொடுக்க வேண்டும் என்பதே இந்த உணவகத்தின் ஆரம்பகால நோக்கமாக இருந்தது. சரியான உணவு மற்றும் தனித்துவமான அனுபவம், இதுவே இலக்கு. முதல் உணவகத்தை புனேவில் உள்ள லுல்லா நகரில் துவங்கினார்கள். ஆரம்பத்தில் உணவு மட்டுமே நோக்கமாக இருந்த நிலையில், பின்னர் ஸ்போர்ட்ஸ் பார் என்ற ஒன்றையும் சேர்த்துக்கொண்டார்கள்.

“ஸ்போர்ட்ஸ் பார் என்பது ஒரு புதிய விதமான துணைப்பண்பாட்டு நிகழ்வு. இதன்மூலம் வாடிக்கையாளர் செலவு செய்யும் பணத்திற்கு மதிப்பு சேர்க்கிறோம். அதே வேளையில் விளையாட்டு மீது ஆர்வம் உள்ளவருக்கு அதற்கான தளத்தை அளிக்கிறோம். நான் உறுதியாக சொல்கிறேன், எங்கள் ஸ்போர்ட்ஸ் பார் மிகப்பெரிய பார்வையாளர்களை உள்ளிழுக்கப்போகிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின் போது இது நடக்கலாம்” என்றார் ஜாஹிர் கான்.

இந்த உணவகத்தின் இன்னொரு டைரக்டராக ஆலிஃப்யா சையத் இருக்கிறார். இவர் ஜாஹிர்கானின் மைத்துனி. இந்தத் துறை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதால், வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி பலரும் தெரிவித்தனர், ஆனால் எங்களுக்கு இதன் மீது தான் தீவிரமான ஆர்வம் இருந்தது என்கிறார். “உணவு மீதான எங்கள் காதல் தான் எல்லாவற்றையும் செய்துகாட்டியது” என்கிறார் 32 வயதாகும் ஆலிஃப்யா.

சோதனை ஓட்டம்

ஆரம்பத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் பாருக்கான உரிமம் பெறுதல், வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் சில சவால்கள் இருந்திருக்கிறது. முதல்தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் எல்லாவற்றையும் போகிற போக்கில் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த அனுபவங்களெல்லாம் சேர்த்து 2010ம் ஆண்டில், லுல்லா நகரில் இருந்த உணவகத்தை பீனிக்ஸ் மாலுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது.

இடையில் அனிஸ் இங்கிலாந்து சென்று ஹோட்டல் மேனேஜ்மண்ட் படித்தார். அங்கு அவர் படித்ததற்கும் நேரடியாக பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைப் புரிந்துகொண்டார்.

உணவின் தரமும் அது அளிக்கப்படும் விதமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதற்காக சமைக்குமிடத்திற்கு அவ்வப்போது சென்று பலமுறை சோதனை நடத்தினர். பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, சமைப்பதற்குத் தேவையான பொருட்களை சரியான நபரிடம் இருந்து வாங்குவது, வாடிக்கையாளர்களோடு அவ்வப்போது பேசுவது, உணவின் சுவை போன்றவற்றை மிக நெருக்கமாக இருந்து உறுதிப்படுத்தினர். இது பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தனர்.

வளர்ச்சி

தற்போது ஆண்டுக்கு 35லிருந்து 40 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியிருக்கிறது. முதல் உணவகம் வெற்றியடைய ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரை ஆனதாம். கடந்த பத்து ஆண்டுகளில் ஆறு கிளைத் துவங்கியிருக்கிறார்கள். இடையில் உணவு விநியோகம் மற்றும் உணவுத் தொழில்நுட்ப நிறுவனங்களெல்லாம் போட்டிக்கு இருந்தாலும், விருந்தோம்பலுடன் கூடிய உணவு அனுபவத்திற்கான சந்தை மிகப்பெரியது என்று தெரிவிக்கின்றனர். குறிப்பாக உணவு மற்றும் விளையாட்டு அடங்கிய ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்கு வலுவான சந்தை இருப்பதாக நம்புகிறார்கள்.

அனிருதா படேல் இந்த உணவகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே இங்கு வருபவர். இந்த செலிப்ரிடி உணவகத்தின் முக்கியமான அம்சமே, உணவே எல்லாவற்றையும் பேசிவிடுகிறது என்பது தான். இத்தனை ஆண்டுகளில் அந்த அனுபவம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

“இசை, விளையாட்டு மற்றும் நல்லசுவையான உணவு எல்லாமே சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்கான தேவை மும்பை, பெங்களூர் மற்றும் புனேவில் இருக்கிறது. தற்போது புனேவை சுற்றிலும் எங்கள் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மற்ற சிறு நகரங்களில் இப்போது தான் இதற்கான தேவை மெல்ல வளர்ந்துவருகிறது. மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களிலும் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் ஹாகிர்கான்.

சந்தை

உணவக அனுபவத்திற்கான சந்தை 2018ம் ஆண்டைப் பொருத்தவரை 195 மில்லியன் டாலராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் சராசரியாக பதினைந்து சதவீதம் வளர்ந்து வரும் சந்தையாகும். உணவு அனுபவத்தைத் தாண்டி, செலிப்ரிடி உணவகங்கள் சம்பாதிப்பதற்கான முக்கியக்காரணம் அது ஒரு கௌரவச்சின்னமாகவும், கவர்ந்திழுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. குறிப்பாக ஜாஹிர்கான் நடத்தும் உணவகம் என்ற ஒரு பெயரே நிறைய வாடிக்கையாளர்களை இழுக்கக்கூடிய தன்மை பெற்றது.

மும்பையில் டெண்டுல்கர் ஒரு உணவகம் நடத்துகிறார், ராயல்டி என்ற பெயரில் ஷில்பா செட்டி பாந்த்ராவில் ஒரு நைட்கிளப் நடத்துகிறார். தினோ மோரியோவின் க்ரீப் சென்சேசன், அர்ஜுன் ராம்பால் மற்றும் சுனில் ஷெட்டியின் உணவகங்களெல்லாம் செலிப்ரிட்டி உணவகத்திற்கு நல்ல உதாரணங்களாகும்.

இணையதளம் : zaheerkhans

ஆங்கிலத்தில் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்வரா வைத்தீ 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

விளையாட்டில் இருந்து தொழில்முனைவுக்கு… தொழிலில் தலைநிமிர்ந்து நிற்கும் வீரர்கள்!