100 ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 'சின்ன வாத்தியார்'!

0

தன்னுடைய சக வகுப்பு மாணவர்கள் கார்ட்டூன்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, தேர்வுகளுக்குத் தயாராவது என்றிருக்கும் வேளையில், 11 வயது ஆனந்த் மிஸ்ரா ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதில் மும்முரமாக இருக்கிறார். தற்போது லக்னோவில் ஏழாம் வகுப்பு பயிலும் இந்த 'சின்ன வாத்தியார்', நகரைச் சுற்றியுள்ள குடிசைவாழ் பகுதிகள் மற்றும் 125-க்கும் மேலான கிராமங்களில் தீவிரமாக இயங்கி, தன் 'பால சவுபால்' இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் சிலருடன் நேரம் செலவழித்த தருணத்தில்தான் 2012-ல் பால் சவுபால் உதயமானது. தன் பள்ளியில் பயின்ற அனைத்துப் பாடங்களையும் அந்தக் குழந்தைகளுடன் பகிர்ந்தார். இந்த முயற்சியே பிறகு பெரிய வடிவம் பெற்று, அந்தக் குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொடுத்தார். தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்தக் கல்விப் பணியை மேற்கொண்டு வந்தவர், இதை மென்மேலும் வாழ்வின் முழுமையான இயக்கமாக மாற்றுவது என்ற தீர்மானத்துடன் செயல்பட்டார். இன்று, அந்தக் குழந்தைகளுக்கு கணிதம், கணினி மற்றும் ஆங்கிலப் பாடங்களைச் சொல்லித் தருகிறார். ஆனந்தின் செயல்பாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முறைப்படி பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் கற்று தரும் செயல்பாடுகளின் மூலம் அவர்களது வாழ்க்கை நிலையை ஆனந்த் முழுமையாக அறியும் வாய்ப்பைப் பெற்றார். தன் பெற்றோரின் உதவியுடன், அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. ஆனந்தின் பெற்றோர் அனூப் மற்றும் ரீனா மிஸ்ரா ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்கள் பிரபலமாக இருந்ததும், மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட முகாம்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி, மக்கள் நேரடியாக பயன்பெற வழிவகுக்க முடிந்தது.

தொடங்கியது எப்படி?

நம்மிடம் அனூப் பேசும்போது, "ஆனந்த் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை தினங்களில் மகாராஷ்டிரா சென்றோம். அப்போது, ஒரு குழந்தை சாலையோரத்தில் உட்கார்ந்து படிப்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கோயிலில் அர்ச்சனை தொடங்கும்போது, ஓடிச் சென்று பஜனைக் குழுவில் சேர்ந்துகொள்வான். அர்ச்சனை முடிந்ததும், மீண்டும் மங்கிய விளக்கொளியில் படிக்கத் தொடங்குவான். அந்தச் சிறுவனிடம் சென்று, 'உன் சட்டை ரொம்பவும் கிழிஞ்சி இருக்கே... இந்தா இந்தப் பணத்துல புது சட்டை வாங்கிக்கோ' என்றோம். ஆனால், அவன் மறுத்துவிட்டான். தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தியபோது, தன் படிப்புக்கான உதவித் தொகையாக பணத்தை வாங்கிக் கொண்டான். தன் வயதையொத்த சிறுவனின் நிலையை நேரில் பார்த்ததும் ஆனந்தின் வாழ்க்கையே மாறியது" என்கிறார்.

அந்தப் பயணம் முடிந்து வீடு திரும்பியதும், லக்னோவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு ஆனந்தை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவர்கள் பலரும் பள்ளிக்குச் செல்லாமல் சிறார் தொழிலாளர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் வாடும் நிலையைப் பார்க்க முடிந்தது. அந்தச் சிறுவர்களைத் திரட்டி பாடம் சொல்லித் தரத் தொடங்கினார் ஆனந்த். போகப் போக அந்தச் சிறுவர்கள் தங்கள் சகாக்களையும் தானாக முன்வந்து சேர்க்கத் தொடங்கினர். அப்படித்தான் பால் சவுபால் உருவானது.

கற்பிக்கும் முறை

லக்னோவில் உள்ள சிட்டி மான்டிசோரி பள்ளியில் பயிலும் ஆனந்த், ஒவ்வொரு நாளும் பள்ளியை விட்டு வீடு வந்ததும் சிறிது ஓய்வு எடுப்பார். பின்னர், மாலை 5 மணிக்கு பால் சவுபால் புறப்படுவார். தனது கற்பிக்கும் முறை பற்றி ஆனந்த் கூறும்போது, "என் நண்பர்களுக்கு நட்புடன் பாடம் சொல்லித் தருவேன். சுவாரசியமான கதைகளைச் சொல்வேன். விளையாட்டுகள் மூலம் கற்பிப்பிப்பேன். அவர்களுக்கு சலிப்பு வராத அளவுக்கு பாடம் நடத்துவேன். சிறுவர்களில் சிலர் பள்ளியில் பாடம் சொல்லித் தருவது சலிப்பை ஏற்படுத்துவதால்தான் அங்கு செல்வது இல்லை. எனவே, அவர்கள் போரடிக்காத வகையில் இன்றவரை சுவாரசியமாக பாடம் சொல்லித் தருவேன்" என்கிறார்.

பால் சவுபாலில் வெறும் புத்தகத்தில் உள்ள பாடத்தை மற்றும் கற்றுத் தராமல், மதிப்புக் கல்வியையும் புகட்டுகிறார். அதுபற்றி அவர் கூறும்போது, " 'நாம் முன்னேறுவோம்' என்ற பாடலுடன் வகுப்பு தொடங்கி தேசிய கீதத்துடன் முடியும். இதனால், என் நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாகவும், நல்ல குடிமகன்களாகவும் வளர்வார்கள் என்று நம்புகிறேன்" என்கிறார்.

நூலகம் தொடங்க திட்டம்

ஆனந்த் தன் சேவைப் பணிகளுக்காக சத்யபத் பால ரத்தன், சேவா ரத்னா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். உள்ளூர் மக்களின் உதவியுடன் பல்வேறு பகுதிகளில் நூலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கிராமங்களில் சில நூலகங்களை அமைப்பதில் வெற்றியும் கண்டுள்ளார். பால் சவுபால் மூலம் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க, தன்னைப் போன்ற வசதியான படிக்கும் பிள்ளைகளின் உதவியை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார்.

ஆனந்த் இப்போது கிராமங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இருந்து வரும் சுமார் 100 குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார். தேர்வு நாட்களில் கொஞ்சம் சிரமத்தைச் சந்தித்தாலும், அதை தனது நண்பர்கள் உதவியுடன் சரிசெய்துவிடுவார். பால் சவுபால் மென்மேலும் வளர்வதற்கு தன் நண்பர்கள் பக்க பலமாக இருப்பதில் ஆனந்துக்கு மிகவும் மகிழ்ச்சி.

இந்த ஆசிரியர் தினத்தில், ஆனந்தும் அவரது பெற்றோரும் ஒரு புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினர். 'சலோ பாதோ அபியான்' என்ற பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தில் ஒரு குழந்தையின் கல்விக்காக ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதேபோல், 'சலோ பெகன், ஸ்கூல் சலோ' *வா தங்கையே... பள்ளிச் செல்லலாம்) என்ற திட்டத்தையும் ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக முன்னெடுத்துள்ளனர். நவராத்திரி நிகழ்ச்சியின்போது இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தான் முன்னெடுத்துவரும் இதுபோன்ற சிறு சிறு முயற்சிப் படிகள் மூலம் இந்தியா முழுமையான கல்வியையும் வளர்ச்சியையும் பெற்றுவிடும் என்று நம்பிக்கையுடன் ஆனந்தப் புன்னகைப் பூக்கிறார் சின்ன வாத்தியார் ஆனந்த்!

ஆனந்த் கிருஷ்ண மிஸ்ராவை அவரது தந்தையின் ஃபேஸ்புக் பக்கம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்