இஸ்ரோ புதிய தலைவர் கே சிவன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ராக்கெட் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவின் தற்போதைய தலைவராகவும் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.சிவன் பற்றிய தகவல்கள் மற்றும் சாதனைகள்…

0

கே சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விண்வெளித் துறை சார்ந்த விஞ்ஞானி. தற்போது இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ எஸ் கிரண் குமார் ஓய்வு பெற்றதை அடுத்து சிவன் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார். சிவன்; ஐம்பதாண்டு பழமையான இஸ்ரோ நிறுவனத்தின் ஒன்பதாவது தலைவராவார். இவரைப் பற்றிய சில தகவல்களை இதோ...

1. சிவன் கன்யாகுமரியில் உள்ள சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். இவர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றார். சுய முயற்சியுடன் கடுமையாக உழைப்பவர். குடும்பத்தினரின் வழிகாட்டுதலின்றி சுயமாக படித்தார். எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. இருந்தும் இவர்தான் குடும்பத்தில் முதல் பட்டதாரி.

2. எம்.ஐ.டி-யில் (MIT) 1980-ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றார். ஐஐஎஸ்சி பெங்களூருவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

3. இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் பங்கு வகித்தார். இதில் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைத்தல், ஆய்வு ஆகியவற்றில் பங்களித்தார்.

தனது முப்பதாண்டு பணி வாழ்க்கையில் சிவன் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 போன்ற திட்டங்களில் பணியாற்றியுள்ளார். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திட்ட இயக்குனராக இருந்தார்.

4. 2006-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் பிஎச்டி முடித்தார். 2014-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

5. 1999-ம் ஆண்டு ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் சார்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது, 2007-ம் ஆண்டு இஸ்ரோ மெரிட் விருது, 2011-ம் ஆண்டு பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை விண்வெளி ஆராய்ச்சியில் பங்களித்தற்காக இந்த விஞ்ஞானி பெற்றுள்ளார்.

சிவன் இந்திய தேசிய பொறியியல் அகாடமி, இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் அமைப்புகளுக்கான சங்கம், இந்திய ஏரோனாட்டிகல் அமைப்பு, சிஸ்டம்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றில் உறுப்பினராவார். ஏவுகலம் பிரிவில் இருந்த நிபுணத்துவத்தைக் கொண்டு 2015-ம் ஆண்டு ’இண்டெக்ரேடட் டிசைன் ஃபார் ஸ்பேஸ் ட்ரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டார்.

6. இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்தார். இஸ்ரோ தலைவர் பொறுப்புகளுடன் விண்வெளித் துறையின் செயலாளராகவும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்தியா ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. இந்த சாதனையை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார் சிவன்.

8. மூன்றாண்டுகள் சிவன் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார். இதில் முதலாண்டில் சந்திராயன் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இரண்டு முக்கிய திட்டங்களில் பங்கெடுப்பார். அது மட்டுமல்லாமல் பெரிய ஏவுகலன்களை வடிவமைக்கும் பணிகளிலும் செயற்கைக்கோள்கள் சார்ந்த செலவுகளை குறைக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்.

இதற்கு முன்பு பதவி வகித்த அலூர் சீலின் கிரண் குமார் செயற்கைக்கோள் ஏற்புசுமை மற்றும் பயன்பாடு பிரிவில் (satellite payload and applications domain) 40 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது நிபுணத்துவம் கொண்டு மின் ஒளியியல் இமேஜிங் சென்சார்கள் (வான்வழி, புவிநிலை சுற்றுப்பாதை மற்றும் புவியின் கீழ்மட்ட கோளப்பாதை செயற்கைக்கோள்கள் ஆகியவை) வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் பங்கெடுத்தார்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை செலுத்த உதவும் உத்தியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் கிரண்.

ஆங்கில கட்டுரையாளர் : கிருத்திஹா ராஜம்