சிறு, குறு வர்த்தக பொருட்கள் டெலிவரியில் முத்திரை பதிக்கும் ஷிப்ளர்!

0

இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வர வர, அதன் கிளையான லாஜிஸ்டிக்ஸ் துறையும் செழிப்பாய் வளர்ந்து வருகிறது. டெல்லிவரி(Delhivery), கோஜாவாஸ்(GoJavas), இகாம் எக்ஸ்பிரஸ்(Ecom Express) போன்ற நிறுவனங்கள் இந்திய அளவிலான இணைய வர்த்தகர்களின் தலைவலியை தீர்க்கும் மருந்துகளாக விளங்கிவருகின்றன. அதேசமயம் உள்ளூர் சிறு, குறு வர்த்தகர்களின் கவலையைப் போக்கவும் சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, ட்ரக் மற்றும் லைட் கமர்ஷியல் வெகிக்கிள் எனப்படும் எல்சிவி வண்டிகள் ஆகியவற்றின் துணையோடு.

மும்பையைச் சேர்ந்த நிறுவனமான 'ஷிப்ளரும்' (Shipler) மேற்கூறிய வகையைச் சேர்ந்ததுதான். டெம்போ, ட்ரக் போன்ற வாகனங்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஷிப்ளரின் உதவியோடு நாம் புக் செய்யலாம்.
“உள்ளூர் வர்த்தகத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் எல்சிவி வண்டி உரிமையாளர்களுக்கு எங்கள் நிறுவனம் மூலம் வருமானம் ஈட்டித் தருகிறோம். எங்களது தளம் அவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை தருகிறது” என்கிறார் ஷிப்ளரின் முதன்மை செயலதிகாரியான கொவ்ஸ்துப் பாண்டே.

மும்பை ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களான கொவ்ஸ்துப், வினய் ஜுல்மே, கார்த்திக் கச்சோலியா, பிரதீபா பதானியா, சுதீர் ஜாஜாரீயா ஆகிய ஐவரின் கூட்டுமுயற்சிதான் இந்த ஷிப்ளர். கொவ்ஸ்துப், இதற்கு முன்னால் பிசி ரேடியாவிலும்(BC Radio), ஹவுசி ங்.காமிலும்(Housing.com) பணியாற்றியிருக்கிறார். வினய் தன் பங்குங்கு வெப் டெவலப்பராக மோபர்ஸ்ட்(Mofirst), லெர்ன்க்யூ( LearnQ) ஆகிய நிறுவனங்களில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

 நிதி ஆதாரங்கள்

தொடங்கி இரண்டரை மாதங்களே ஆனாலும் தற்போது ஒரு நாளைக்கு நூறு ஆர்டர்களை ஈர்க்கும் வண்ணம் அதிவேகமாய் வளர்ந்து நிற்கிறது ஷிப்ளர். 600க்கும் மேற்பட்ட சிறு குறு வணிகர்களின் உதவியோடும், 75க்கும் மேற்பட்ட எல்சிவி வண்டிகளின் துணையோடும் வெற்றிநடை போடுகிறது.

“எங்களிடம் இருக்கும் வண்டிகளுக்கு தினமும் குறைந்தது இரண்டு ஆர்டர்களாவது கிடைக்கும்படி செய்கிறோம். இந்த எண்ணிக்கையை நான்காக உயர்த்தும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்” என்கிறார் கொவ்ஸ்துப்.

இந்த தளத்தின் வழியே நடக்கும் ஒவ்வொரு ஆர்டரின் வழியாகவும் குறிப்பிட்டளவு வருமானம் ஈட்டுகிறது ஷிப்ளர். இந்த தளத்தில் வணிகம் செய்வதில் பெரும்பான்மையானவர்கள் சிறு, குறு வியாபாரிகளே. சமீபத்தில் தன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷிப்ளர்.

ஸ்னாப்டீல் நிறுவனத்தை தோற்றுவித்த குணால் பாஹலும், ரோஹித் பன்சாலும் சமீபத்தில் ஷிப்ளரில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நிதியைக் கொண்டு ஷிப்ளரை தொழில்நுட்பரீதியில் மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் இதன் நிறுவனர்கள்.

வாடிக்கையாளர்களும் நுகர்வோர்களும் தங்கள் தேவைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளமாக விளங்குகிறது ஷிப்ளர். ஜிபிஎஸ் வசதியைக் கொண்டு அறிவுறுத்துவதால் ஓட்டுநர்களுக்கும் இந்த தளம் உற்ற நண்பனாய் விளங்குகிறது.

“எங்களின் செயலி மூலம் தங்கள் பொருள் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்பரீதியாக நாங்கள் வலுவாய் இருப்பதால் ஆர்டர் செய்த 25 நிமிடத்திற்குள் அந்த பொருள் வாடிக்கையாளர் கைகளுக்கு சென்று சேர்ந்துவிடுகிறது” என உற்சாகமாய் கூறுகிறார் கொவ்ஸ்துப்.

சக போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனித்துவம்

இதே தளத்தில் தி போர்ட்டர்(The Porter), ஷிப்பர்(Shippr), ப்ளோஹார்ன்(Blowhorn), திகாரியர்(TheKarrier) ஆகிய பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் தங்களின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்கிறார் கவ்ஸ்தப்.

“எங்களின் போட்டியாளர்கள் ஆர்டர்கள் பெற இன்னும் போன்கால்களைதான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தொழில்நுட்பத்தை முடிந்தளவு பயன்படுத்துவதால் எங்களின் செயல்முறை அவர்களைவிட வேகமாய் இருக்கிறது. அனுபவத்தில் அவர்களை விட குறைவாயிருக்கும் நாங்கள் ஆர்டர்கள் விஷயத்தில் அவர்களை விட எண்ணிக்கையில் அதிகமாகத்தான் இருக்கிறோம்” என மெல்லிய புன்னகையோடு கூறுகிறார்.

தற்போது மும்பை தவிர, மேலும் பத்து நகரங்களுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தும் முனைப்பில் இருக்கிறது ஷிப்ளர்.

“இந்தியாவின் எந்த மூலையில் பண்ட பரிவர்த்தனைகள் நடந்தாலும் அதற்கான திட்டம், ஒருங்கிணைப்பு, டெலிவரி ஆகியவை ஷிப்ளரின் வழியாக நடக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்காகத்தான் உழைக்கிறோம்” என்கிறார் கொவ்ஸ்துப்.

அடுத்தகட்ட முதலீட்டிற்கான பேச்சுவார்த்தையிலும் இறங்கியிருக்கிறது ஷிப்ளர்.

குவியும் முதலீடுகள்

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் இந்தத் துறையில் போட்டிக்கு பஞ்சமே இல்லை. அதில் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன. பெங்களுருவைச் சேர்ந்த ப்ளோஹார்ன் நிறுவனம் யூனிட்டஸ் சீட் பண்ட்(Unitus Seed Fund) குழுமத்திலிருந்து ஒரு பெரிய தொகையை முதலீடாக பெற்றுள்ளது. திகாரியர் நிறுவனம் ஒன்றரை கோடி முதலீட்டை சமீபத்தில் பெற்றது. மும்பைச் சேர்ந்த போர்ட்டர் நிறுவனம் செக்கோயா(Sequoia) கே கேபிட்டல்(Kae Capital) ஆகிய நிறுவனங்களில் இருந்து 35கோடி ரூபாயை முதலீடாக பெற்றுள்ளது.

குர்கானைச் சேர்ந்த ட்ரக்பர்ஸ்ட்(Trucksfirst) நிறுவனம்தான் இந்தத் துறையில் அதிக முதலீட்டை ஈட்டியிருக்கிறது. சைப்(SAIF) குழுமம் இந்த நிறுவனத்தில் 61.8 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது.

பெரிதாக ஒழுங்குப்படுத்தப்படாத சிறு, குறு வணிக சந்தையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அமோக வெற்றி பெறலாம் என்பதை இந்நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதிகம் வெளிச்சத்திற்கு வராத எல்சிவி துறையிலும் வெற்றி வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கணிக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆக இனி வருங்காலங்களில் இந்தத் துறையில் விறுவிறு மாற்றங்கள் நிறையவே இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

செயலியை தரவிறக்க: Shipler

ஆக்கம்: Jai Vardhan

தமிழில்: SAMARAN CHERAMAAN