பலரது உயிரைக் காக்க தன் வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு பாலம் கட்டிய கொடையாளி!

0

உத்திரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மூங்கில் பாலம் பாழடைந்திருந்ததால் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சாந்து பிரசாத் பாலம் கட்டும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு வருங்கால வைப்பு நிதித் தொகையாக இவருக்குக் கிடைத்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தியும் கிராமவாசிகளிடம் இருந்து சிறிதளவு நிதியுதவி பெற்றுக்கொண்டும் 70 அடி நீள நிரந்தர பாலத்தைக் கட்டியுள்ளார்.

உள்ளூர்வாசிகள் கால்வாயைக் கடந்து செல்ல பயன்படுத்திய பழைய தற்காலிக பாலம் ஒவ்வொரு முறை உடையும்போதும் மக்கள் தாங்களாகவே அதைப் பழுது பார்த்து சீரமைத்தனர். 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் அவர்கள் பயந்தது போன்றே ஒரு சம்பவம் நடந்தது. 

 அந்தப் பாலம் உடைந்து ஒரு சிறுமி கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்போதுதான் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற சாந்து தனது சொந்த பணத்தைக் கொண்டு பாலத்தை கட்ட பொறுப்பேற்றுக்கொண்டார். 

அவர் வருங்கால வைப்பு நிதித் தொகையாக 13 லட்ச ரூபாய் பெற்றதாகவும் அவரது ஓய்வூதியத் தொகை 15,500 ரூபாய் என்றும் 'நவ்பாரத் டைம்ஸ்' உடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தத் தொகையில் இருந்து 10 லட்ச ரூபாயை தனது மகன்களுக்கு கொடுத்துவிட்டதாகவும் மீதமிருக்கும் தொகையான மூன்று லட்சத்தை பாலம் கட்ட பயன்படுத்தவேண்டும் என அவர் தீர்மானித்ததாகவும் அதில் குறிப்பிட்டார்.

கிராமத்தின் நன்மைக்காக சாந்து ஆர்வம் காட்டி வருவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். சிலர் பணம் கொடுத்தனர். சிலர் சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட பொருள் உதவி செய்தனர். சிலர் கட்டுமானப் பணியில் உதவினர். 

பாலம் இல்லாமல் ஐந்து கிலோமீட்டர் வரை பயணம் செய்யவேண்டிய 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நிரந்தர பாலம் கட்டப்பட்டதால் ஒரு கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தினால் சுமார் 10,000 குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக 'தி பெட்டர் இண்டியா' குறிப்பிடுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA