'ட்ராக் அன்ட் டெல்' - கார் விபத்திலிருந்து உங்களை காப்பாற்றக்கூடிய ஸ்டார்ட் அப்

1

1995-ல் ஜென்ரல் மோட்டார்ஸ் 'ஆன்ஸ்டார்' எனும் சேவையை தொடங்கியது. இது 360 டிகிரி கார் தொடர்பு சேவையாகும். இது US - ல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. டெலிமாடிக்ஸ் யூனிட் காரின் தொடர்பு சாதனமாகும். இந்த யூனிட் ஒரு சக்திவாய்ந்த தகவல் சேகரிப்பு சாதனமாக விளங்குகிறது. இன்று இந்த மென்பொருள் மூலமாக கார் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் சேகரிக்கவும் முடியும். கார் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் மொபைல் ஃபோனுடன் இணைத்து காரின் ஸ்க்ரீனில் பல தகவல்களை அறியலாம். உள்ளூர் சேவை மையம், மருத்துவமனை மற்றும் அவசர நேரத்தில் காவல் நிலையம் போன்றவைகளை ஆன்ஸ்டார் மூலம் இணைக்கலாம். இந்தியாவில் இதற்கான தேவையைப் பார்ப்போம். 80 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களும் 12 மில்லியனுக்கும் மேற்பட்ட கார்களும் கடந்த ஆறு ஆண்டுகளில் விற்பனையாகியுள்ளது. இருப்பினும் ஆன்ஸ்டார் போன்ற சேவைகள் நம்மிடத்தில் இல்லை. 2014-ல் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள். இதில் 75 சதவீதம் கார் மற்றும் டிரக்குகளின் மோதல்களால் ஏற்பட்ட விபத்துகளாகும்.

இதைக்கூட வணிகமாக்குவதா என்று நாம் யோசித்தாலும் இது நிச்சயம் ஒரு வணிக வாய்ப்புதான். அரசு மற்றும் பெரிய கார்ப்பரேட்களின் தலையீடு இல்லாமல் சிலர் இகோசிஸ்டத்தை உருவாக்க விரும்பினர். ஆன்ஸ்டார் போன்ற சிலர் இந்த வணிகத்தின் சாத்தியக்கூறுகளை அறிந்து இதில் நுழைவதற்கான தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர். 'ட்ராக் அன்ட் டெல்' Track N Tell' டெல்லியைச் சார்ந்த ஒரு நிறுவனம். ஆறு ஆண்டுகளாக இந்தத் துறையில் உள்ளது. இதன் நிறுவனர் ப்ரான்ஷு குப்தா ஒரு சிஸ்டம்ஸ் இன்ஜினியர். இவர் US - ல் Exxon, Yahoo போன்ற குளோபல் கார்ப்பரேஷனில் பணி புரிந்துள்ளார். வாகனங்கள் ஓட்டுவதில் புத்திசாலித்தனத்தை புகுத்துவதே இவரது நிறுவனத்தின் நோக்கமாகும். அவரது சொந்த அனுபவம்தான் இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு காரணம். ப்ரான்ஷு ஒரு முறை வெளியில் வேலையாக சென்றிருந்தபோது அவரது தந்தையின் கார் டெல்லிக்கு அருகில் ஒரு இடத்தில் நின்றிருந்ததை கவனித்தார். கார் ஓட்டுநரிடம் விசாரித்ததில் அவரது தந்தைக்காகத்தான் காத்திருப்பதாக பொய் சொன்னார். அந்த ஓட்டுநர் தன் சொந்த உபயோகத்திற்கு அந்த காரை தவறான முறையில் பயன்படுத்தியது தெரியவந்தது.

“அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இந்தியாவில் நமது காரை எப்படி உபயோகிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. அதில் எங்கெங்கே சுற்றுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிவதில்லை.” என்கிறார் ட்ராக் அன்ட் டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ப்ரான்ஷு. இவருக்கு ஆட்டோமொபைலில் அதிக ஆர்வம். இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்தார்.  US - ன் கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு டெலிமாடிக்ஸில் நுழைந்தார்.

தொழில்

பொறியாளரான இவர் ஒரு தளத்தை உருவாக்கி இந்தியாவில் தயாரித்த ஹார்ட்வேருடன் தன்னுடைய காரில் முதலில் பொருத்தி சோதனை செய்தார். GPS சார்ந்த யூனிட் காரின் கட்டமைப்பு அடிப்படைகளை புரிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. கார் எங்காவது மோதினாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ உடனடியாக ஓட்டுநரின் உறவினருக்கு விபத்து குறித்தும் இடம் குறித்தும் தெரியப்படுத்தும். மேலும் ஓட்டுநர் உறவினரிடம் பேச முடியும். மூன்று வருட சோதனை நடைபெற்றது. சான்றிதழும் கிடைத்தது. ப்ரான்ஷு இந்த தயாரிப்பை பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களிடம் எடுத்துச் சென்றார். அவரது முதல் வாடிக்கையாளர் ஒரு கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியாளர். 2013-ல் ட்ராக் அன்ட் டெல் தளம் அவரது வாகனங்களில் உபயோகிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆரம்ப செலவுகளை மேற்கொண்டார். இவர் பணிபுரிந்த இந்திய குழு மூலம் இரண்டு ஆண்டுகளில் கட்டுமான உபகரணங்களில் 1200 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 2014-15 நிதி ஆண்டின் வருவாய் 4,133 கோடி ரூபாய்.

கார்ப்பரேட் பிஸினஸ் நிலையாக இருந்தாலும் தொழிலில் பெரிதாக முன்னேற்றம் காணப்படவில்லை.

“இதில் பிரச்சனை என்னவென்றால் இந்தியாவில் பல ஆட்டோமொபைல் கம்பெனிகள் தங்களுக்கு சொந்தமான டெலிமாடிக்ஸ் வைத்திருப்பதும் பெரிய விற்பனையாளர்களுடன் பணிபுரிவதும்தான். ஆனால் அவர்கள் எங்களைப்போன்ற விரிவான சேவைகளை அளிப்பதில்லை.” என்கிறார்.

சிலர் இந்த துறையில் சற்றே முயன்று பார்த்தனர். ஹோன்டா கார்ஸ் இந்தியாதான் முதலில் இதேபோன்ற வாடிக்கையாளர் சேவையை விற்பனைக்கு பிறகான சேவையாக 2016-ல் ஆரம்பித்தனர். டாடா மோட்டார்ஸ் ஹர்மன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனும் மாருதி சுசுகி, போஷ் இந்தியாவுடனும் பணிபுரிந்து இதுபோன்ற சேவைகளை முக்கிய அம்சமாக்கியது. எனினும் இந்த யூனிட்கள் 9 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள கார்களில் மட்டுமே இருந்தது. SIAM வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் 70 சதவீதம் கார்கள் 9 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ளதாகும். இதனால் ட்ராக் அன்ட் டெல் போன்ற சாதனத்தை பொருத்துவதன் மூலம் வாகனங்களை கண்டறியவும் அவசர நேரத்தின் சேவைக்கும் உதவும்.

“இதனால்தான் நான் தற்பொழுது நுகர்வோரிடம் கவனம் செலுத்துகிறேன்.” என்கிறார் அவர். வாடிக்கையாளர் சார்ந்த பிஸினஸ் மூலம் ஒரு வருடத்தில் 100,000 வாடிக்கையாளர்களைப் பெற வாய்ப்புள்ளது. தயாரிப்பை சரியானபடி சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் செய்தால் இது சாத்தியம். தற்போது இவர்களின் தயாரிப்பு வலைதளத்தில் உள்ளது. மேலும் ப்ரான்ஷு டெல்லி மற்றும் பெங்களூருவில் விநியோகப்படுத்தும் இகோசிஸ்டத்தில் கவனம் செலுத்திவருகிறார். 18 பொறியாளர்கள் அடங்கிய அவரது குழு ஆப்ஸை வலுவாக்குகிறது. மேலும் இந்த தயாரிப்புமூலம் காரிலிருந்து வெளியிடப்படும் தகவல்களை கணக்கிடுவதற்கு ஒரு வலுவான தளத்தை இவர்கள் அமைக்கிறார்கள். அவ்வாறு ட்ராக் அன்ட் டெல் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு பணம் ஈட்டுவதற்கு விநியோகஸ்தர்களுடனும் ஆட்டோமொபல் நிறுவனங்களுடனும் கைகோர்க்கிறது. ப்ரான்ஷு இதுவரை 2 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். நுகர்வோர் சார்ந்து தொழிலை விரிவுபடுத்தவே இந்த தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. “நான் இதற்காக அனைத்தையும் முதலீடு செய்திருக்கிறேன்” என்கிறார் ப்ரான்ஷு.

போட்டி

ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அவர்களின் R & D லேபும்தான் ட்ராக் அன்ட் டெல்லின் முக்கிய போட்டியாகும். மொபைல் சார்ந்த கார் டயக்னாஸ்டிக் டூல் தயாரிப்பில் இருக்கிறது சென்னையிலிருக்கும் ரினால்ட் நிஸானின் தொழில்நுட்ப மையம். அதேபோல் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் தனக்கான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. ரேவா அவர்களின் மின்சார கார். வாகனத்தின் குறிப்பிட்ட அம்சங்களை கட்டுப்படுத்தும் 3/4 G மொபைல் இன்டர்ஃபேஸ் கொண்ட முதல் கார் இது. கார்IQ, ரக்ஷா ஸேஃப்டிரைவ் போன்ற ஸ்டார்ட் அப்களும் ட்ராக் அன்ட் டெல்லின் நேரடி போட்டியாளர்களாகும். “இன்று இதுபோன்ற பல தளங்கள் உள்ளன. தொழிலில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் தனித்துவமானது. காப்பீட்டு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அவசர சேவை போன்ற இகோசிஸ்டம் அத்தியாவசியமானது. இது வெற்றிக்கு வழிவகுக்கும்,” என்கிறார் ரேவாவின் நிறுவனர் மற்றும் மஹிந்திரா ரேவாவின் குழு உறுப்பினர் சேத்தன் மாய்னி.

ரக்ஷா சேஃப்டிரைவின் இணை நிறுவனர் ஜயந்த் ஜகதீஷ் கூறுகையில் அவர்களின் தயாரிப்பு ஒட்டுநரை ஒரு ப்ரொஃபஷனல் நெட்வொர்க்குடன் இணைக்கும் என்கிறார். இது காரை பராமரிப்பதுடன் 24/7 இயங்கும் அவசர இகோசிஸ்டத்துடன் ஓட்டுநரை இணைக்கும் என்கிறார். “இந்திய சந்தையில் ஆட்டோமொபைலுக்கான அவசர சேவை இகோசிஸ்டத்திற்கு எங்களைப் போன்றோரின் சேவை நிச்சயம் தேவைப்படுகிறது. சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்ஸ் வந்துவிட்டன.” என்கிறார் ரக்ஷா சேஃப்டிரைவின் இணை நிறுவனர் ஜயந்த் ஜகதீஷ்.

ப்ரான்ஷு வாடிக்கையாளர்களிடம் நல்லுறவை ஏற்படுத்துவார் என்பது உறுதி. ஆனால் இதுபோன்ற தயாரிப்பு மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுதான் மிகப்பெரிய சவால். தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உபயோகிப்பதற்கு அவர்கள் மனதை மாற்றுவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.

ஆக்கம் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்