தொழில்முனைவோர் ஆக உங்களுக்குத் தேவையான தகுதிகள் என்ன?

3

சென்னையைச் சேர்ந்த பிரபல முதலீட்டு நிறுவனமான 'தி சென்னை ஏஞ்சல்ஸ்' தங்களது குழுமத்தில் பல முதலீட்டாளர்களையும், வழிக்காட்டிகளையும் (Mentors) கொண்டு தொழில்முனைவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், முதலீடுகளையும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்முனைவர்களுக்கும், தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளோருக்கும் அவ்வப்போது தேவையான நிகழ்ச்சிகளையும் செய்துவருகின்றனர் சென்னை ஏஞ்சல்ஸ் குழுவினர். 

இதன் ஒரு பகுதியாக சென்னை ஏஞ்சல்ஸ் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் 'மென்டர் முத்து' என்ற பெயரில் தொழில்முனைவோருக்கு வழிக்காட்டும் அறிவுரைகளை வழங்கும் வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதில், தொழில்முனைவோர் ஆக ஒருவருக்குத் தேவையான தகுதிகள் என்ன? என்பதை 'மென்டர் முத்து' விளக்குகிறார். அவை என்பதைப் பார்ப்போம்...

1. தொடர்புகொள்ளும் திறன் (Communication) : தொழில் தொடங்குவோருக்கு தொடர்புகொள்ளும் திறன் மிக அவசியம். இந்த முக்கிய திறன் இருந்தாலே போதும் தொழில் தொடங்க நினைப்போர் தங்களது தொழில் ஐடியா மற்றும் தேவையான தகவல்களை தெளிவாக பிறரிடம் வெளிப்படுத்த முடியும். 

2.  தைரியமாக எதிர்கொள்ளுதல் (Risk Taking) : தொழில் என்றாலே அதில் ரிஸ்க் அதாவது சவால்களும், இடையூறுகளும் வருவது சகஜம். அதை சமாளிக்கும் திறன், சில சமயம் ரிஸ்க் எடுக்கும் தைரியம் இருந்தால் மட்டுமே ஒருவர் தொழில் தொடங்கும் எண்ணத்தை தொடரவேண்டும்.

3. முடிவெடுத்தல் திறன் (Decision-making) : தொழில்முனைவோர் என்பவர் தனது நிறுவனத்தை சுயமாக நிறுவியவராக இருப்பார். இவர் ஒருவர் மட்டுமே நிறுவனர் எனும்போது தொழில் சம்பத்தப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் அவரே எடுக்கவேண்டியதாக இருக்கும். என்வே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய, 'முடிவெடுத்தல் திறன்' ஒரு தொழில்முனைவருக்கு மிகவும் அவசியம். 

4. தலைமைப்பண்பு (Leadership) : பொதுவாக பணிபுரிபர்களுக்கே இன்று இந்த பண்பு மிக அவசியமாக உள்ளபோது, தொழில்முனைவோர் என்று வரும்போது தலைப்பண்பு இன்றியமையாததாகிவிடுகிறது. நிறுவனத்தை தொடக்கி, நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தனது ஊழியர்களை நடத்திச்செல்ல தொழில்முனைவர் தலைமைப் பண்பை வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். 

5. பன்முகத்திறமை (Multi-tasking) : தொழில்முனைவோருக்கு இந்த திறமை மிகவும் அவசியம். ஏனெனில் நிறுவனத்தை சுயமுதலீட்டில் தொடங்கும் போது அதிக அளவில் ஊழியர்களை பணியமர்த்துவது சாமர்த்தியமான ஒன்றல்ல. எனவே நிறுவனரே நிறுவனத்தின் செயல்பாடுகள், தேவையான மார்க்கெட்டிங், கணக்கு வழக்கு இவைகளை கையாளும் பன்முகத்திறமைகளை கொண்டிருப்பது நிறுவனத்தை லாப வழியில் கொண்டு செல்ல உதவும். 

6. மீண்டெழும் ஆற்றல் (Resilience) : பணிபுரியும் நிறுவனம் நஷ்டத்தில் போனால் வேலை போகும், வேறு பணிக்கு சென்றுவிடலாம். ஆனால் சுயமாக தொடங்கிய நிறுவனம் சந்திக்கும் திடீர் நஷ்டம், ஆபத்து, பின்னடைவு சமயங்களில் முழு பொறுப்பையும் தொழில்முனைவர் தான் ஏற்கவேண்டும். அதோடு சோர்ந்துவிடாமல் மீண்டெழுவதற்கான வழிகளை உடனடியாக ஆராய்ந்து நிறுவனத்தை மீட்டெடுக்க செயல்படுவது முக்கியம்.

7. புதுமை (Innovation) : ஸ்டார்ட் அப் என்றாலே புதிய எண்ணங்களுடன் தொடக்கப்படும் நிறுவனம் என்பது பலரும் அறிந்தது. எனவே நீங்கள் தொடங்க நினைக்கும் நிறுவனத்தில் என்ன புதுமை இருக்கிறது? அந்த புதுமையான ஐடியா மக்களுக்கு எவ்வித பலனை அளிக்கும், அது சந்தைப்படுத்தக்கூடியதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலாக இருத்தல் வேண்டும். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

 

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan