இந்தியாவின் ’ப்ளாஸ்டிக் மேன்’- தன் கண்டுபிடிப்பை அரசுக்கு இலவசமாக வழங்கிய தன்னலமற்ற தமிழரை அறிவீர்களா? 

72 வயதான மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இந்த பேராசிரியர், ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை உருவாக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளார்!

0

அன்று சனிக்கிழமை. இரவு 9.30 மணியளவில் ஒரு எண்ணை டயல் செய்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன். நான் டயல் செய்த எண் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவருடையது. வேதியியல் துறையின் துறைத்தலைவரான இவருக்கு 72 வயது. ப்ளாஸ்டிக் கழிவுகளை தார் என்கிற பயனுள்ள பொருளாக மாற்றுவதுதான் இவரது தனித்துவமான ப்ராஜெக்ட். 

மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை வாங்க ஆர்வம் காட்டும் அளவிற்கு இந்த ப்ராஜெக்ட் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இவர் இந்திய அரசாங்கத்துடன் இந்த தொழில்நுட்பத்தை இலவசமாக பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தார். புன்சிரிப்புடன் அழைப்பை ஏற்றார். அடுத்த சில நிமிடங்கள் அவரது கதையை பகிர்ந்துகொண்டார். இது கடின உழைப்பு, விடாமுயற்சி, புதுமை, தாய்நாடு மீதான தேசபக்தி ஆகியவை நிறைந்திருந்தது. இவர்தான் ’ப்ளாஸ்டிக் மேன் ஆஃப் இந்தியா’ என்றழைக்கப்படும் டாக்டர் ராஜகோபாலன் வாசுதேவன்.

பேராசிரியர் ஆர்.வாசுதேவன்
பேராசிரியர் ஆர்.வாசுதேவன்

பணிவான பின்புலம்  

தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், பணிவான குடும்பத்தில் வளர்ந்தவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் நகரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்பைத் தொடர்ந்தார்.

நகரிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். இதனால் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிகம் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகரித்தது.

”பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகவும் கடினம் என்று என்னுடைய அப்பா எப்போதும் சொல்வார். இந்த வார்த்தைகள்தான் எனக்கு ஊக்கமளித்தது...”

இன்று இவர் மதுரையிலுள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவர். 65 வயதான அவர், மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் உளவியல் பிரிவில் பிஎச்டி முடித்துள்ளார். 40 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் பெற்றவர். அவரது மகன் பெங்களூருவில் பொறியாளராக உள்ளார்.

”என்னுடைய குடும்பத்திலுள்ள பலரும் வழக்கறிஞர்கள். நானும் சட்டம் படிக்கவேண்டும் என்று என்னுடைய பெற்றோர் விரும்பினர். நான் வேதியியல் படிக்க விரும்புவதாக தெரிவித்தபோது அவர்கள் வருத்தப்பட்டனர். அவர்களது விருப்பத்திற்கு இணங்க நான் மறுத்துவிட்டேன். இறுதியில் என்னுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர்.”

ஒருவரது குப்பை மற்றொருவரின் புதையல்

ப்ளாஸ்டிக்குகள் அதன் பண்புகள் காரணமாக நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. பாலிதீன் பைகள், கப்கள் ஆகியவை பயன்பாட்டிற்கு எளிதானதாக இருப்பதால் மெல்ல மெல்ல ப்ளாஸ்டிக் சௌகரியமான தேர்வாகவே மாறி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக நாட்டில் உருவாகும் கழிவுகளில் ப்ளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரச்சனைதான் பேராசிரியர் வாசுதேவன் பல ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

”எந்தக் கழிவும் பயனற்றதல்ல. அதைப் பயன்படுத்தும் வழிகளில் ஏதாவது ஒன்றை கண்டறிய முடியும். அதற்குத் தேவையானது ரீதிங்கிங் எனப்படும் மறுசிந்தனை மட்டுமே. 4R’s-ல் மற்ற மூன்றைவிட இதுதான் மிகவும் முக்கியமானதாகும்.”  

நகராட்சி திட கழிவுகளில் ஐந்து சதவீதம் ப்ளாஸ்டிக் என்றும் அதை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான மாற்று வழியைக் கண்டறிவதுதான் இப்போதைய முக்கிய தேவை என்கிறார் பேராசிரியர். ப்ளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் சேதம் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும். அதை முறையாக அப்புறப்படுத்தவில்லையெனில் அது மண்ணுக்குள் ஊடுருவிச் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மழை நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி கொசு போன்ற உயிரினங்களின் வாழ்விடமாக மாறிவிடும். ப்ளாஸ்டிக்கை தவிர்ப்பதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு என்றபோதும் பேராசிரியர் வாசுதேவன் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார். அவர் கூறுகையில்,

”நாம் பல பொருட்களை உருவாக்குகிறோம். பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றை அப்புறப்படுத்துவது குறித்து சிந்திப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் ப்ளாஸ்டிக். தற்போது நாடு முழுவதும் ப்ளாஸ்டிக் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுதான் மாற்று சிந்தனைக்குக் தூண்டுகோலாக அமைந்தது.” 

2002-ம் ஆண்டு ’ப்ளாஸ்டிக் கழிவுகளை சாலை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துதல்’ என்கிற தனது ப்ராஜெக்டில் பணிபுரியத் துவங்கினார் வாசுதேவன். இது பரவலாக வரவேற்பைப் பெற்று ஆராய்ச்சி ஜர்னலின் பாராட்டைப் பெற்றது. அதற்கடுத்து 2004-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ப்ராஜெக்டாக ‘ப்ளாஸ்டிக் கழிவுகளை நெகிழ்வான நடைபாதைக்கான கட்டுமானத்திற்காக பயன்படுத்துதல்’ என்கிற ப்ராஜெக்டை 2004-ம் ஆண்டு சமர்ப்பித்தார்.

அப்போதிருந்து வாசுதேவன் தனது பயணம் குறித்தும் புதுமை குறித்தும் 17க்கும் மேற்பட்ட மாநாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆய்வு ஆலோசகராக உள்ளார்.

திட்டம் மற்றும் அதை செயல்படுத்துதல்

என்னுடைய பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்த பேராசிரியர் வாசுதேவன் அவரது ப்ராஜெக்ட் குறித்து சுருக்கமாகவும் எளிமையாகவும் விவரித்தார். அப்புறப்படுத்தப்பட்ட பெரும்பாலான ப்ளாஸ்டிக்குகள் சேகரிக்கபட்டு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட் செய்யப்படும். அக்ரிகேட் மிக்ஸ் மற்றும் பிடுமென் (bitumen) ஆகியவை 165 டிகிரிக்கு மேல் சூடாக்கப்படும். இந்தக் கலவை கட் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக்கில் சேர்க்கப்படும். சூடான பிடுமென்னுடன் இந்தக் கலவையைச் சேர்த்து கலந்தால் சாலை கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையின் தரத்தை அதிகரிக்க fly ash போன்ற பிற பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முறை சாலையில் தார் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் மற்ற முறைகளைப் போல நச்சுகளை உண்டாக்குவதில்லை.

இந்தச் சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் இதன் வலிமையை நிரூபித்தது. இந்தச் சாலைகள் தண்ணீர் உட்புகாமல் இருப்பதுடன் அதிக சுமையையும் தாங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேல் இந்தச் சாலைகளுக்கு மிகக்குறைவான பராமரிப்பே தேவைப்படும்.

முதலில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திட்டத்தை செயல்படுத்தினார். கோவில்பட்டி, கோத்தமங்கலம், மதுரை, சேலம், வெல்லிங்டன், சென்னை, புதுச்சேரி, ஹிந்த்பூர் (ஆந்திரபிரதேசம்), கொல்கத்தா, கோவா, சிம்லா, திருவனந்தபுரம், வடகரா, காலிகட், ஜாம்ஷெட்பூர், கொச்சி போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கீழுள்ள 29 மாவட்டங்களில் 1,200 கிலோ மீட்டர் ப்ளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இவரது திட்டத்தை பன்னிரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நகரத்தில் ப்ளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலை கட்டுமானப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று சாலை உருவாக்குபவர்களுக்கு 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தன்னடக்கம்

அவரது சாதனைக்கு அவர் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார். அவர் கூறுகையில்,

”பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல. நினைவில் வைத்துக்கொள்வதற்கு தகுதியான விஷயங்களை விட்டுச்செல்லவேண்டும். என்னுடைய குடும்பத்தினரும் கடவுளும் என்னிடம் அன்பு கொண்டனர். அவர்களின் ஆதரவின்றி எந்த ஒரு வெற்றியும் சாத்தியமில்லை.”

இந்த உணர்ச்சிகள் வெறும் வார்த்தைகள் அல்ல. ஜப்பான் மற்றும் சீன அரசாங்கங்கள் மிகப்பெரிய தொகையை அளித்து இந்த தொழில்நுட்பத்தை வாங்க முன்வந்தபோதும் அவர் மறுத்துவிட்டார். அதே சமயம் அந்தத் தொழில்நுட்பத்தை மத்திய அரசாங்கத்திடம் இலவசமாக ஒப்படைத்தார். அவரது சாதனையைப் பாராட்டி அப்போது ஜனாதிபதியாக இருந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவரது ப்ராஜெக்டின் ஆரம்ப கட்டத்தில் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பேராசிரியரை பாராட்டினார்.

சமீபத்தில் மும்பையின் TEDx Dharavi யில் தலைவராக GenX-ல் உரையாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில் உற்சாகத்துடன் விவரித்தார்.

”நான் பலவற்றில் ஈடுபட்டபோதும் பேராசிரியராக பணிபுரிவதையே விரும்புகிறேன். மாணவர்களின் யோசனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படுகிறது. பலருக்கு ஊக்கமும் சரியான வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இதில் நான் பங்களிப்பது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன்,” என்கிறார் தன்னடக்கத்துடன்.

எங்களது உரையாடல் நிறைவு பெறுகையில் வாசுதேவனின் கதை; புதுமை, கடின உழைப்பு, வெற்றி ஆகியவற்றை மட்டும் குறிப்பதல்ல. அடக்கம், பணிவு, பெருந்தன்மை, புதியவற்றை கற்றுக்கொள்ள இருக்கும் தொடர் வேட்கை ஆகியவற்றால் நிறைந்தது எனலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன்

Related Stories

Stories by YS TEAM TAMIL