மக்களா ஜக்ரிதி: ஒடுக்கப்பட்ட சமுதாய குழந்தைகளுக்கு கல்வி உதவி புரியும் ஒரு பெண்மணியின் கனவு!

0
கல்லூரி படிப்பிற்காக எனக்கு ரூ.200 தேவைப்பட்டது. நானும் என்னுடைய அம்மாவும் இந்த பணத்தை உதவியாகப் பெற சித்தூரில் (ஆந்திரப் பிரதேச மாநிலம்) இருக்கும் எங்களின் உறவினரை நாடினோம், ஏனெனில் என் தந்தையின் வியாபாரம் சிறப்பாக இருந்த சமயத்தில் அவர்கள் பல்வேறு வகைகளில் பயன்அடைந்துள்ளனர். 80களில் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பயணிப்பது சுலபமான விஷயமல்ல. துரதிஷ்டவசமாக அவர்களிடம் இருந்து எங்களுக்கு 50 ரூபாய் மட்டுமே கிடைத்தது. வெளியே வந்த நான் எங்களின் நிலையை எண்ணி கூக்குரலிட்டேன், அப்போது தான் எனக்கு நானே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன் இனி யாரிடமும் எந்த உதவியும் கேட்கக் கூடாது என்று உறுதிபூண்டேன். எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்வது என முடிவு செய்தேன்.

தன்னுடைய தந்தையின் வியாபாரம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த சமயம் ஜாய் ஸ்ரீனிவாசனுக்கு வயது 10. செழிப்பாக வாழ்ந்த காலத்தில் அவர்களின் வீட்டிற்கு வந்து சென்ற மக்கள் இப்போது அவர்களை புறந்தள்ளினர். தன்னுடைய குழந்தைகள் விரும்பிய அனைத்தையும் உடனுக்குடன் அளித்த தந்தை அதன் பிறகு பள்ளிக் கட்டணத்தைக் கூட கட்ட முடியாத இக்கட்டான நிலைக்குச் சென்றார். ஜாய் அப்பாவிடம் தன்னுடைய படிப்பை தொடர விரும்புவதாக மன்றாடினார். “70களில் ஆண் பிள்ளைகளைப் போல சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு சம அந்தஸ்து கிடையாது. ஆனால் நான் கூறியதற்கு தலைவணங்கி என்னுடைய அப்பா என்னை படிக்க வைத்தார். நான் பள்ளிக்குச் சென்றேன் ஆனால் என்னுடைய நண்பர்களைப் போல கான்வென்ட் சென்று படிக்கவில்லை,” என்று நினைவுகூர்கிறார் ஜாய்.

தந்தையின் சூழ்நிலையால், ஜாய் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று கூறியே வளர்க்கப்பட்டார், கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய உறவினர் வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஜாயிற்குள் ஒரு உறுதித்தன்மையை ஏற்படுத்தியது.

ஜாய் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை இளநிலை வர்த்தக பட்டம் பெற்ற பின்னர் 1988ல் தொடங்கினார். பொருளாதார சுதந்திரம் பெற ஒரு வேலை கிடைத்த நிம்மதியில் ஜாய் தன்னுடைய தகுதிகளை மேலும் வளர்த்துக் கொள்ள ஆயத்தமானார். ஜாய் இந்திய சமூகத்திற்கு ஏற்ற நடத்தை அறிவியல் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர், அதே போன்று மையமின் (இந்திய) & வயர் மெர்ரில் அசோசியேட்ஸ், அமெரிக்காவில் தலைமைப் பண்பிற்காக பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் துறையில் பட்டத்தையும் பெற்றார்.

ஜாய் இதுபற்றிக் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் என்னைப் போன்று ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தங்களுடைய கனவை அடைவது சாத்தியமில்லாத ஒன்றல்ல என்பதை நிதர்சனத்தில் உணர்ந்தேன். இந்த அவலங்களுக்கு வெறும் சாட்சியாக இல்லாமல் அதற்காக ஏதேனும் பயன்படும் வகையில் செய்ய வேண்டும் மற்றவர்களுக்கு எழுச்சி கொடுக்க நாம் முன்வரவேண்டும். சரியான அறிவும் விழிப்புணர்வும் இருந்தால் இந்த மாற்றம் சாத்தியமே.

மக்களா ஜக்ரிதி

தன்னுடைய வாழ்க்கைப் பயணம் ஒரு பக்கம் விருட்சமிட்டுக் கொண்டிருந்த நிலையில், ஜாய் ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த பிள்ளைகள் கல்வி பயில்வதற்காக தன்னுடைய நேரத்தையும், பணத்தையும் செலவிட்டார். அவருக்கு வீட்டில் உதவியாக இருந்த சித்ரா என்பர் கணவரால் கைவிடப்பட்டவர். சித்ரா தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு மவேஷ் என்ற ஒரு பதின்பருவ மகனும் இருந்தான். மவேஷின் படிப்பிற்கு செலவு செய்ய சித்ரா கடுமையான போராட்டங்களைச் சந்தித்தார். அந்த பையனும் சமுதாய அவலங்களான புறக்கணிப்பு, வன்முறை இவற்றை எல்லாம் சந்திப்பது கசஜம் என்று ஜாய்க்கு தெரிந்தது. இதனால் சில நாட்களுக்குப் பின்னர் மவேஷ் ஜாயின் வீட்டிலேயே தங்கி படிக்கத் தொடங்கினான். மவேஷ் வர்த்தகப் பிரிவில் இளநிலைப் பட்டத்தையும் அதைத் தொடர்ந்து முதுநிலை பட்டத்தையும் பெற்றார். அதுமட்டுமின்றி தான் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாக மவேஷ் வாஷிங்டன் D.C. சென்றார். இந்த மாற்றத்தைக் கண்ட ஜாய்க்கு புது நம்பிக்கை பிறந்தது, ஒடுக்கப்பட்ட சமூதாயத்தில் இருக்கும் மாணவர்களும் தங்களது கனவை அடைய முடியும் என்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு பலரும் ஜாயை சந்தித்து உதவி கேட்கத் தொடங்கினார். 

2003ம் ஆண்டு வரை ஜாய் குழந்தைகளுக்கு உதவுவதற்காக 12 ஆண்டுகளை செலவிட்டிருக்கிறார். இந்த சேவையை முழு நேரமாகவும், அதிகாரப்பூர்வமாக செய்யலாம் என்ற எண்ணம் உதித்த போது அவர் எடுத்த ஒரு முடிவின் காரணமாக அதே ஆண்டு பிறந்தது தான் ‘மக்களா ஜக்ரிதி’ என்ற அமைப்பு சாரா தொண்டு நிறுவனம்.

மக்களா ஜக்ரிதி கல்வி உரிமை, கல்வி வளர்ச்சி, வாழ்க்கைத் திறன் பயிற்சி, தலைமை பண்பை வளர்க்கும் அம்சங்கள், குழந்தைகள் சமஉரிமைக்கான சமூக முன்னேற்றம் என இளைஞர்கள் மற்றும் பெற்றோரை மையப்படுத்தி பல பணிகளை செய்தது. இதே போன்று அரசுப் பள்ளிகள் (நகரம், கிராமப் புறம்) மற்றும் சீர்திருத்தப் பள்ளிகளுடனும் கைகோர்த்து மக்களா ஜக்ரிதி செயல்படத் தொடங்கியது.

குழந்தைகளின் கனவை தட்டி எழுப்புவது

‘குழந்தைகளிடம் எழுச்சியை ஏற்படுத்துவது’ என்பதே மக்களா ஜக்ரிதியின் மொழியாக்கம்.

ஜாய் குழந்தைகளோடு அன்றாடம் பேசிப் பழகினார், ஆனால் அவர்களின் கல்வியில் மாற்றம் செய்ய இது மட்டும் போதாது என்பதை அவர் உணர்ந்தார். ஒரு சேரியில் எடுத்த ஆய்வின்படி அங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பள்ளிப் படிப்பை விட்டு இடைநிற்றலாகி இருக்கின்றனர் என்பதை அறிந்தார். “நிறைய குழந்தைகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடம் குறித்த அச்சம் இருந்தது, ஏனெனில் இந்தப் பாடங்களில் அவர்களுக்கு சரியான அடிப்படைத் தளம் அமைக்கப்படவில்லை. அதனால் அவர்களின் ஆர்வம் சிதைந்து பள்ளி செல்லும் ஆவல் குறைந்து, இடைநிற்றலுக்கு ஆளாகிவிட்டனர். இவர்களிடம் இருக்கும் மற்றொரு பிரச்சனை அவர்கள் சமூகத்தில் அவர்களுக்கு முன் உதாரணமாக கல்வி பயின்ற யாரும் இல்லை. பெரும்பாலானவர்கள் வீட்டுவேலைக்கு உதவி செய்பவர்கள், அல்லது பணத்திற்கு ஊழியம் செய்பவர்களாகவே இருந்தனர். இது ஒரு துயரமான வாழ்க்கைச் சுழற்சி முறை,” என்கிறார் ஜாய்.

இதற்கான விடையாக கல்வி கற்கும் மையங்களை சேரியை ஒட்டிய பகுதியில் அமைத்தார். ஜாய் தன்னுடைய முதல் கல்வி மேம்பாட்டுக்கான மாதிரி மையத்தை பெங்களூரின் அதுகொடியில் அமைத்தார். இதன் விளைவாக 6 மற்றும் 14 வயதிற்குட்பட்டவர்கள் இந்த மையத்தில் இணைந்து மகிழ்ச்சியோடு கல்வி கற்பதை காண முடிந்தது. ஜாயும் மக்களா ஜக்ரிதியும் அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு புரிய வைத்தனர், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை பரிசளிப்பதன் மூலம் நல்ல வாழ்க்கை நிலைக்கு உயர முடியும் என்ற பகுத்தறிவை அவர்களிடம் வளர்த்தனர்.

இந்த மையங்கள் பன்முக கலந்தாலோசனைக் கூட்டங்களைக் கொண்டிருந்தன. அதோடு சுய முன்னேற்றம் (கன்னடம், ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம்(நூலகம்), ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகள், கணினி திறன் பயிற்சி உள்ளிட்டவற்றில் சிறப்பு பெறுவதற்கான திட்டம்), கற்பனைத்திறன் மேம்பாடு (கலை, கைவினை, ஓவியம், எம்பிராய்டரி, படம் வரைதல், நாடகம், இசை, பொம்மலாட்டம் மற்றும் மாயாஜாலம்), உடற்கல்வி மேம்பாடு (டீக்வாண்டோ திறன் கட்டமைப்பு, பந்து எரிதல், பேட்மின்டன், ஓட்டப்பந்தயம் மற்றும் இதர விளையாட்டுகள்) மற்றும் சமூக & உணர்ச்சி மேம்பாடு( மக்கள் பற்றிய விழிப்புணர்வு, விரிவுரை செய்தல், ஆலோசனைகள் வழங்கல் மற்றும் குழு கட்டமைப்புக்கான செயல்பாடுகள்).

அந்த கற்றல் மையத்தில் ஒரு தன்னார்வலர் ஏற்பாடு செய்திருந்த யோகா வகுப்பில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். மக்களா ஜக்ரிதி ஒரு ஸ்திரமான தன்னார்வலர் திட்டமாக உலகம் முழுதும் உள்ள மக்களிடம் ஈர்ப்பைப் பெற்றது.

பள்ளி முடிந்த பின்னர் குழந்தைகள் ஆர்வத்தோடு இந்த கற்றல் மையத்திற்கு வருவதை பார்த்து இடைநிற்றலை ஒரு சவாலாக சந்தித்த ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டுப் போனர். மக்களா ஜக்ரிதியோடு இணைந்து சில அரசுப் பள்ளிகள் கற்றல் மையங்களை ஏற்படுத்தின, இந்த மையங்களில் குழந்தைகள் படிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது, மேலும் பள்ளிக்குள்ளே செயல்படும் கற்றல் மையங்களில் குழந்தைகள் மகிழ்வோடு இருந்தனர். இது மாதிரியான மையங்கள் கிராமப்புற பள்ளிகள் (கர்நாடகாவின், கொப்பல்) மற்றும் சீர்திருத்தப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்டன. 2012ல் இது போன்று 17 மையங்கள் செயல்பட்டன. தற்போது மக்களா ஜக்ரித்தி பள்ளிகளில் செயல்படும் பழைய மையங்களோடு இணைந்து ஏழு மையங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மக்களா ஜக்ரிதி 14,000 குழந்தைகள்,1,000 இளைஞர்கள், 700 பெற்றோர் மற்றும் 500 ஆசிரியர்களை சென்றடைந்துள்ளதாக, ஜாய் பெருமைப்படுகிறார். மக்களா ஜக்ரிதி எப்படி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறது என்று விளக்கமளித்த ஜாய் நாங்கள் வெறுமனே கற்றல் மையத்தை ஏற்படுத்தி வாராவாரம் நிகழ்வுகளை கண்காணிப்பதோடு நின்றுவிடவில்லை, நாங்கள் தினந்தோறும் அவர்களோடு இணைந்து செயல்படுகிறோம் அன்றாடம் அவர்களிடத்தில் ஏற்படும் மாற்றத்தை உறுதி செய்கிறோம் என்கிறார்.

யுவா ஜக்ரிதி

சிறு வயதில் கற்றல் மையத்தில் இணைந்தவர்கள் தற்போது பதின் பருவத்தை அடைந்து விட்டனர், எனினும் தங்களுடைய வாழ்க்கை நிலை மாற்றத்திற்கு கற்றல் மையம் தேவை என்று கூறினர். இதன் விளைவாக 15-25 வயதுடைய நகர்ப்புற சேரிகளில் வசிப்பவர்களுக்காக யுவா ஜக்ரிதி உருவாக்கப்பட்டது. இந்த மையங்கள் மென் திறன்கள், வாழ்க்கைத் திறன்கள், நடத்தை மேம்பாடு, வாழ்க்கை பாதையை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அம்சங்களை உள்ளடக்கி இருந்தது. இவை இளைஞர்கள் சந்திக்கும் மனஅழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க உதவியாக அமைந்தது.

ஜாய் கூறுகையில்,

“எங்களிடம் தற்போதுள்ள இளைஞர்கள் பணிக்குச் சேர்ந்து விட்டனர், அவர்களின் கனவையும் அடைந்துவிட்டனர். இதன் மூலம் நாங்கள் ஒரு கோடி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம், ஏனெனில் அந்த சமூகம் ஒரு முன்மாதிரியை பெற்றுவிட்டது. இறுதியில் அந்த சமூக குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே ஒருவரை உதாரணமாக பார்த்து வளரும் நல்ல சூழ்நிலை உருவாகிவிட்டது. ஒரு மோசமான வாழ்க்கைச் சக்கரம் இங்கே உடைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அவர்.

மக்களா ஜக்ரிதி அந்த சமூகத்தை சார்ந்த வளர் பருவத்தினரிடம் பல ஆசைகளை ஏற்படுத்தியுள்ளது, சாதாரண கல்வி முறை கிடைக்காவிட்டாலும் கற்றல் மையத்தில் பயிற்சி பெற அவர்கள் விரும்புகின்றனர். ”நாங்கள் அவர்களுக்கு எங்கள் மையத்தை அணுகி எப்படி உதவி பெறலாம் என்பதையும், குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்பதையும் கற்றுக் கொடுக்கிறோம். இதில் சிலர் வீட்டு வேலை செய்தோ அல்லது வேறு ஊழியம் மூலமோ ரூ.2,500 மாத சம்களமாக பெற்றவர்கள் அமைப்புகள் மூலம் ரூ.17,000 ஊதியம் பெறுகின்றனர்.

தன்னுடைய மகிழ்ச்சியை தேடிக்கண்டுபிடித்தவர்

தன்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையை மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர் ஜாய். அவர் பல சவால்களை சந்தித்தார், அதிலும் குறிப்பாக இந்தத் துறையில் அவருக்கான அங்கீகாரம் தாமதமாகவே கிடைத்தது. “இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, நான் எப்போதும் அங்கீகாரத்தை விரும்பியதில்லை. உங்கள் விருப்பத்திற்காக நீங்கள் பணியாற்றும் போது, உங்களுக்கு பாராட்டு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில் அந்தந்த சமூகம் சார்ந்த மக்களுக்கு அவர்களின் குழந்தைகளே முன்மாதிரியாக இருப்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

கடைசியாக ஜாய் தன் சொந்த அனுபவத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிட்ம் கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

என் குடும்பத்தில் படித்த சில பெண்கள் மத்தியில் நானும் ஒருத்தி. காலச்சக்கரத்தைத் திரும்பி பார்த்தால் நான் படிப்பை முடிக்கப் போராடிய அதே பெண் தான். ஒவ்வொரு வெற்றிக் கதையும் எப்படி நான் ஒரு குழந்தையாக இருந்த போது என்னுடைய கனவை அடைய நினைத்தேனோ அதே போன்று அவர்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறது. சாத்தியம் என்பது இந்த குழந்தைகளுக்கு முடிவில்லாதது, அவர்களின் கனவை அடைந்து நிதர்சனத்தில் செயல்படுத்துவதற்கு ஏற்ப அவர்களை வடிவமைப்பதில் என்னுடைய பணியும் எப்போதும் முடிவு பெறாது என்கிறார்.

இணையதள முகவரி: Makkala Jagriti

கட்டுரை: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

நெல்லை கிராமத்தில் புளியங்காய் விளையாடிய அஷ்விதா கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியாளரான கதை!