மோடியின் எதிர்காலத்தை கணிக்குமா உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள்?

0

2019-க்கு பிறகும் மோடி பிரதம மந்திரியாக தொடர்வாரா என்பதை உத்திரபிரதேசத்தின் வாக்காளர்களின் தீர்ப்பே தீர்மானிக்கும். ஒரு நாட்டின் தலைவிதியையோ அல்லது ஆதரவாளர்கள் மத்தியில் புகழின் உச்சத்தில் இருந்துவரும் பிரதம மந்திரியின் நிலையையோ ஒரே ஒரு மாநிலம் தீர்மானிக்கும் என்பது விநோதமாக உள்ளது. 

பஞ்சாப், கோவா, உத்தர்காண்ட் போன்ற மாநிலங்களின் முடிவுகளையும் அடிப்படையாக் கொண்டு தீர்மானிப்பதே உகந்ததாக இருக்கும். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிகையின் அடிப்படையில் உத்திரப்பிரதேசம் மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. பாஜக அல்லது மோடிக்கு 80 தொகுதிகளில் கற்பனைக்கும் எட்டாத அளவிலான 73 தொகுதிகளை உத்திரபிரதேசம் தான் அளித்தது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இதனால் மோடியால் எளிதாக பாராளுமன்றதை நோக்கி பயணிக்க முடிந்தது. அவர் தற்போது பிரதம மந்திரி பதிவியில் இருப்பதற்கான காரணம் பாஜகாவின் ஒட்டுமொத்த 282 தொகுதியில் உத்திரபிரதேசத்தின் பங்கு மிகப்பெரியதாகும்.

2014 தேர்தலின் போது பாஜகவிற்கு 272க்கும் குறைவான எம்பி’க்கள் கிடைத்திருந்தால் ஒரு சில ஆதரவாளர்களின் கூட்டணியுடன் ஆட்சியை அமைத்திருப்பார். மோடி ஒருமித்த கருத்துடன் செயல்படுபவரும் கூட்டணி அரசு நடத்தக் கூடியவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றவர் அல்ல  என்று கருதப்பட்டது. வாஜ்பாய் ஒரு மரியாதைக்குரிய நபர். அவர் தனது நண்பர்கள் மற்றும் எதிரிகள் மத்தியில் தீவிர உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டார். தவறான கட்சியிலும் தவறான சேர்க்கையிலும் இருக்கும் சரியான நபராகவே கருதப்பட்டார். முதல் பிரதம மந்திரியான நேருவால் விரும்பப்பட்டு பாராட்டப்பட்டார் என்பதில் அவருக்கு பெருமை அதிகம்.

ஆனால் மோடி வேறுபட்டவர், அவர் இரண்டரை ஆண்டு காலம் பிரதம மந்திரியாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும்போது ஒருமித்த கருத்துக்களை உருவாக்குபவர் எனலாம். தனக்கு எல்லாம் தெரியும் என்றும் அடுத்தவரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது சிறந்த ஆட்சிமுறைக்கு புறம்பானது என்று நம்புபவர் மோடி.

அவரது மாயஜாலம் முழுமை குறையாமல் உள்ளதா?

இன்றைய நிலைக்கு வழிவகுத்த அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வெல்வாரா? அவரது புகழை தக்கவைத்துக்கொள்வாரா? இவற்றை தீர்மானிக்கும் வகையில் உத்திரபிரதேசத்தின் முடிவுகள் இருக்குமானால் 2019-லும் அவர் வெற்றி பெறுவது உறுதி. நிதி வறுமை உள்ளபோதும் உத்திரபிரதேசம் அரசியலில் சுறுசுறுப்பாகவே இயங்கி வருகிறது. இது நாட்டிற்கான அரசியல் தொனியை அமைக்கிறது. அரசியல் ரீதியான எண்ணிக்கையின் வலிமை நாட்டின் அரசியலில் தீர்க்கமான திருப்பத்தை அளிக்கிறது. இது மோடிக்குத் தெரியும். இந்த காரணத்தினால் மக்களவை தொகுதியில் போட்டியிட மோடி வாரணாசிக்குச் சென்றார். உத்திரபிரதேசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மோடி அலையை உருவாக்கவே இப்படிப்பட்ட தேர்ச்சிதிறமிக்க செயலை மேற்கொண்டார் என்றும் நம்பப்பட்டது. 

பரோடாவில் தேர்வு செய்யப்பட்டபோதும் வாரணாசியை தக்கவைத்துக்கொண்டார். ஆகையால் அவர் உத்திரபிரதேசத்தின் சக்தியை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார். இந்த காரணத்தினால் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். ஆனால் அவரால் முடியுமா? இதுதான் மிகப்பெரிய கேள்வி.

பாஜக சிறப்பாகவே தொடங்கியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நாட்டை அதிகம் கொதிப்படையச் செய்தபோது பாஜக அதைச் சாதகமாக பயன்படுத்தி உணர்வுப்பூர்வமான எழுச்சியை அத்துடன் சேர்க்க முற்பட்டது. ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கை சீர் செய்ய முடியாத அளவிலான சிக்கல்களை ஏற்படுத்தியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவே இந்த நடவடிக்கையும் கருப்புப் பணத்தை அகற்றியும் கள்ள நோட்டு புழக்கத்தை நீக்கியும் பயங்கரவாதத்தின் ஆணிவேரை தகர்த்தெறியும் என்றும் விவாதிக்கப்பட்டது. ஆனால் தவறான நடைமுறைப்படுத்தலாலும் மோசமான மேலாண்மையாலும் பெருவாரியான மக்களிடையே பாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று சிந்திக்கப்படவில்லை.

ஏடிஎம் மற்றும் வங்கியின் வாசலில் நீண்ட வரிசையில் நின்று நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். விவசாயிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பெருவணிகங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். வேலையில்லா நிலை, இந்தியாவின் வளர்ச்சியில் பாதிப்பு என தற்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கம் ஏற்படுவதாக அஞ்சப்படுகிறது. மக்களிடன் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக மோடி பாராளுமன்றத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தற்காத்துக்கொண்டு தன்னைத் தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை அவரது கழுத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய பாரம் என்பது நிரூபனமாகும். அவரது புகழை இந்நடவடிக்கை ஏற்கெனவே குலைத்துள்ளது.

இதற்கு உத்திரபிரதேசமும் விதிவிலக்கல்ல. மக்கள் அவர் மீது அதிகப்படியான கோபத்தில் உள்ளனர். ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் சமீபத்தில் இணைந்தது உத்திரபிரதேச அரசியலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பெரும் குழப்பத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சி தற்போது முன்னேறியுள்ளது. யாதவ் குடும்பத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவியதால் கட்சியின் நிலைமை மோசமாகி முடிவு நிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மொத்த கட்சியையும் தன் வசம் கொண்டு காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொண்டு அகிலேஷ் வெற்றி முத்திரையை பதித்தார். ஓரளவு சுத்தமானவராக கருதப்பட்டஅகிலேஷ் சமாஜ்வாதி கட்சிக்கு புத்துயிர் அளித்தார். 

முலாயம் மற்றும் ஷிவ்பாலுடன் அல்லாமல் தனித்து இயங்குவதால் சமாஜ்வாதி கட்சியின் முந்தைய சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் செயல்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அகிலேஷ் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவரது தந்தையைப் போன்ற தலைவர் அல்ல. வளர்ச்சியை விரும்புபவர். சாதியத் தலைவர் அல்ல. இவ்வாறெல்லாம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். மேலும் கட்சித் தலைவர்களைப் போலல்லாமல் நகர்புற மனிதராகவும், இனிமையானவராகவும், கற்றறிந்தவராகவும்  வெளிப்படுத்திக் கொண்டார். உத்திரபிரதேச மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த தலைவராக தன்னை உருவாக்க முயற்சிக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.  

உத்திரபிரதேசத்தின் மீது மோடி வைத்திருந்த நம்பிக்கைகளை இந்த கூட்டணி பாதிக்கக்கூடும். பாஜகவில் மற்றொரு பிரச்சனையும் காணப்படுகிறது. மோடி மாநிலத்தில் எந்த ஒரு தலைவரையும் வளர விடுவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை பிரபலமாக இல்லாத ஒருவரே தற்போது மாநிலத்தில் தலைமை வகிக்கிறார். பாஜகவின் மூத்த தலைவர்கள் இதை விரும்பவில்லை. பாஜக இன்றுவரை யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. அமித்ஷா, ராஜ்நாத் சிங் அவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து காட்டுகிறார். சமாஜ்வாதி கட்சி அல்லது BSP தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது யார் என்று மக்களுக்குத் தெரியும்.

ஆனால் பாஜக குறித்து தெரியாது. அசாமில் முதலமைச்சர் வேட்பாளர் இருந்ததால் வெற்றிபெற்றனர். ஆனால் பீஹார் மற்றும் டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாததால் மோசமாக தோல்வியடைந்தனர். இருந்தும் இந்த அனுபவத்திலிருந்து எந்தவித படிப்பினையையும் பாஜக கற்றதாகத் தெரியவில்லை. இது நிச்சயம் பாஜகவை பாதிக்கும்.

தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவினாலேயே 2014-ல் மோடி வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. BSP எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஹைதராபாத்தின் ரோஹித் வெமுலா சம்பவத்திற்குப் பின்னும் குஜராத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்டதற்கு பின்னும் தலித்கள் பாஜக அல்லது மோடிக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் பாதித்துள்ளது. ஒதுக்கீடு பிரச்சனைகளாலும் ஹரியானா மாநிலத்தில் மோடி அரசின் புறக்கணிப்பாலும் ஜாட்ஸ் மிகுந்த கோபத்தில் உள்ளனர். குறைந்தது மேற்கு உத்திரபிரதேசத்தில் பாஜகவின் சீரழிவிற்கு இது வழிவகுக்கும். யோகி ஆதித்யநாத் கூட புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார். அவர் ஏற்கெனவே கிழக்கு உத்திரப்பிரதேசத்திற்கு சிலரை பரிந்துரைத்துள்ளார்.

இறுதியாக உத்திரபிரதேசத்தை வெல்வது மோடிக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. அவரது ஈர்ப்பு தேய்ந்துவருகிறது. அவர் பலவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். வளர்ச்சிக்கான பல வாக்குறுதிகளால் 2014 தேர்தலை வென்றாலும் எந்தவித திடமான வளர்ச்சியையும் காட்டவில்லை. இந்தியா மிகப்பெரிய நிதிக் குழப்பத்தை நோக்கி பயணிக்கிறது என்று உலகெங்கிலுமுள்ள பல நிபுணர்கள் கருதுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் உத்திரபிரதேச மாநிலத்தின் தேர்வு முடிவுகள் நாட்டின் எதிர்கால அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)