ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; சட்டப்பிரிவு 377 ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

0

இந்தியாவில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட ஓரின சேர்க்கைக்கு எதிரான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த சமூகத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை உண்டு, அதனால் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய குற்றவியல் 377 சட்டப்பிரவை நிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை தலைமை ஏற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் எப் நரிமன், எ. எம் கான்வில்கர், சந்திரசௌத் மற்றும் இந்து மல்ஹோத்ரா இந்த தீர்ப்பை வழங்கினர்.

இந்திய குற்றவியலின் 377 பிரிவு ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தையும் அமைப்பையும் பாகுபாடுடன் நடத்த வழி செய்கிறது. இந்த வேறுபாட்டை நீக்கும் நோக்கிலே இந்த தீர்ப்பை வழங்கியதாக நீதிபதி குழு அறிவித்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த அறிக்கையில்,

“அரசியல் அமைப்பை நாம் உருவாக்கியதற்கான முக்கியக் காரணம் சமூகம் படிப்படியாக முன்னேற வேண்டும் என்று தான். அந்த அரசியல் அமைப்பு எந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இடையூறாக இருக்கக் கூடாது. ஒருவரின் பாலுணர்ச்சி அவர்களின் தனிப்பட்ட வெளிப்பாடு அதை தடுப்பது அவர்களின் கருத்து சுதந்திரத்தை தடுப்பதாகும். LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சாதாரண குடிமக்களுள் ஒன்று தான்; எனவே அவர்களது கருத்துக்கும் மரியாதை அளித்து மனித நேயத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக பார்ப்பது பகுத்தறிவற்றது,” என அறிவித்தது.

இதுகுறித்து பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

“நம் அரசியல் அமைப்பின் படி ஒருவரின் தனி உரிமை முக்கியமான கட்டளையாக கருதப்படுகிறது. அதனால் சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் முற்போக்கு அடைய வழிவகை செய்யுங்கள் மற்றும் தனிநபர் உரிமைகள் அறிக்கைகள் உறுதி செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்,” என்றார்.

இதற்கு முன் இருந்த 377 சட்டபிரிவின் படி இயற்கைக்கு எதிரான ஓரினச் சேர்க்கையில் ஈடுப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது குறைந்தது 10 ஆண்டு சிறைதண்டனை அல்லது பெரும் அபராத தொகை அளிக்கப்படும்.

மனுதாரர்களில் ஒருவரான அகிலேஷ் கோடி தீர்ப்புக்கு முன், “குற்றப்பிரிவில் இருந்து நீக்குவது மட்டுமல்லாமல் எங்களது உரிமைகளையும் அளிக்க வேண்டும்,” என்றார்

மற்றொரு மனுதாரர் அன்வேஷ் போகுளுரி,

“வழக்கை பொருத்தவரை இந்த தடை நீடிக்குமா என்று தெரியவில்லை. இதற்கு முன் வழக்கை நடத்திய நீதிபதிகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவில் ஒருவித பயத்துடன் தான் வாழ்கிறார்கள் என அறிவித்தனர்,” என்றார்.

இந்த தீர்ப்பு குறித்து முறையான ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசாங்கத்திற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் காவல்துறையினருக்கு அவர்களின் உரிமைகள் பற்றி அவர்களுக்கு உணர்த்த குறிப்பிட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

தமிழில்: மஹ்மூதா நௌஷின்