ஸ்நேப்டீல் கதையும், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும் ஸ்டார்ட் அப்களுக்கு சொல்வது என்ன?

0

என்டிடிவியில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரான சேகர் குப்தா தொகுத்து வழங்கும் ‘வாக் த டாக்’ நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் ஆர்வத்துடன் பார்ப்பவன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் கல்லூரி போகும் இளைஞர்கள் போன்ற இரண்டு பேர் அவருடன் பேசிக்கொண்டிருந்தை பார்த்த போது ஆர்வம் உண்டானது. 75000 க்கு மேற்பட்ட விற்பனையாளர்கள், 30 மில்லியனுக்கு மேற்பட்ட பொருட்கள் கொண்ட, நாட்டில் 6000 நகரங்களில் வீச்சை பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய இணைய சந்தையான ஸ்நேப்டீல் நிறுவனர்கள் குணால் பால் மற்றும் ரோகித் பன்சல் தான் அந்த இருவர் என்பதை தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை. ஆனால் இந்த இளம் வர்த்தக புள்ளிகள் 30 களின் ஆரம்பத்தில் தான் இருக்கின்றனர் என்றாலும் ஸ்டார்ட் அப் துறையில் ஏற்கனவே சாதித்திருக்கின்றனர்.

சேகர் குப்தாவுடன் பேசும் போது இருவருமே நிறுவனத்தை தொடங்க தீர்மானித்ததுமே தாங்கள் எதிர்கொண்ட வாழ்வா சாவா அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். 

2007 ல் அடுத்த நாள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 5 லட்சம் தேவைப்பட்ட போது வங்கியில் ரூ.50,000 தான் இருந்தது என்பதை இருவரும் தெரிவித்தனர். அவர்கள் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு, வேறு வேலையை தேடிக்கொண்டு வெற்றிகரமாக விளங்கியிருக்கக் கூடிய தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது. அனால் குணால் மற்றும் ரோகித் மனம் தளராமல் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி நிறுவனத்தை தொடர்ந்து நடத்தினர். இதே போல சமீபத்தில் 2013 ல் அவர்கள் 5 லட்சம் டாலர் தர வேண்டிய நிலையில் ஒரு லட்சம் டாலர் தான் கையில் இருந்தது. மிகவும் நெருக்கடியான நிலை இது. எனினும் அவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து தற்போதைய நிலைக்கு வந்துள்ளனர். இந்த கடினமான தருணங்களில் அவர்களை இயக்கியது எது என கேட்கப்பட்டது. தங்கள் மீது மற்றும் தங்கள் வர்த்தகம் மீதான நம்பிக்கை தான் என்று இருவருமே உற்சாகமாக பதில் அளித்தனர்.

இந்த கட்டத்தில் நானும் நினைவலைகளில் மூழ்கினேன். எங்கள் சொந்த அனுபவம் நினைவில் வந்தது. ஸ்டார்ட் அப்களில் யுகமான இந்த காலத்தில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மாறுபட்ட வகையை சேர்ந்த அரசியல் ஸ்டார்ட் அப்பாக விளங்குகிறது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி தேசத்தின் கவனத்தை ஈர்த்து சில வாரங்களில் தேசிய உரையாடலை மாற்றி அமைத்த அன்னா ஹசாரேவின் போராட்த்தில் அதற்கான விதை இருந்தது. ஆனால் அன்னா ஹசாரே பிரிந்து சென்ற ஒரு கட்டம் வந்தது. அரசியல் கட்சி துவங்க விரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழு, தனது பெயரை பயன்படுத்தக்கூடாது எனக்கூறினார். அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு இருந்தது. காந்தி மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் ஒப்பிடப்பட்டார். ஒவ்வொரு உரையாடலும் அவரிடம் இருந்து துவங்கி அவரிடமே முடிந்தது. அவர் இயக்கத்தை முன்னெடுத்துச்செல்ல அவர் இல்லாமல் எந்த ஒரு உத்தியையும் வகுப்பது இயலாததாக இருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். யார் சொல்வதையும் அவர் கேட்கத் தயாராக இல்லை. இது வாழ்வா சாவா கணமாக அமைந்தது. இந்த இயக்கம் தனது பொருத்தத்தை இழந்திருந்ததால் அமைப்பை தூய்மையாக்க அரசியல் மட்டுமே வழி என்று கெஜ்ரிவால் மற்றும் அவரது குழுவினர் நினைத்தனர். ஆனால் அன்னா ஹசாரே இல்லாமல் இது சாத்தியமா எனும் கேள்வி எழுந்தது. அன்னா ஹசாரே இல்லாமல் அரசியல் கட்சிக்கு எதிர்காலம் இல்லை, இது மரணத்திற்கு சமம் என்று ஒரு பிரிவினர் நினைத்தனர். இது முக்கிய தருணமாக அமைந்தது. இறுதியில் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழு ஹாசாரே இல்லாமல் தனியாகவே முன்னேற தீர்மானித்தது.

தில்லி முதல் களமாக தேர்வு செய்யப்பட்டது. ஒராண்டில் தேர்தல் நடைபெற இருந்தது. அமைப்பை உருவாக்கி, ஒட்டுமொத்த தொண்டர்களையும் அரவணைத்துச்சென்று, பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கட்சி தான் மாற்று என மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டியிருந்தது. தில்லி தான் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மையமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதன் தலைவர்கள் குறிப்பாக அரவிந்த கெஜ்ரிவால் பற்றி மக்களிடம் நல்ல விழிப்புணர்வு இருந்தது. ஆனால் ஒவ்வொரு பூத்திலும் இருப்பு கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதும், மூளை முடுக்கில் எல்லாம் இருப்பை கொண்ட பல தேர்தல்களை பார்த்த அனுபவம் கொண்ட இந்திய அரசியலின் ஜாம்பவான்களான காங்கிரஸ் மற்றும் பாஜ.கவை ஆம் ஆத்மி கட்சியால் வீழ்த்த முடியும் என மக்களை நம்ப வைப்பது சவாலாக இருந்தது. இதை எங்களால் செய்ய முடியுமா? எனும் கேள்வி எழுந்தது.

முடியும் என்ற நம்பிக்கை குழுவிடம் இருந்தது. இது சாத்தியம் ஆனது. தேர்தல் முடிவு வெளியான போது அரசியல் வல்லுனர்கள் திகைத்து நின்றனர். பாரம்பரிய சிந்தனை தலைகீழாக மாறியிருந்த்து. ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களுக்கு மேல் அளிக்கத் தயாராக இல்லாத கருத்து கணிப்பு வல்லுனர்கள் இதை புரட்சி என வர்ணித்தனர். நடக்க முடியாதது நடந்தது. அதுவும் ஹசாரே இல்லாமல் சாத்தியமானது. இது எப்படி சாத்தியமானது? தன்னம்பிக்கை மற்றும் நோக்கத்தில் அர்ப்பணிப்பு தான் இதற்கு காரணம். நானும் குணால் பால் மற்றும் ரோகித் பன்சல் போலவே பேசுகிறேனா?

அதன் பிறகு தில்லியில் பதவியேற்றுக்கொண்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி அரசு 49 நாட்களில் ராஜினாமா செய்ய தீர்மானித்தது. அனைத்து தரப்பினரும் நம்ப முடியாமல் பார்த்தனர். அரசியல் விமர்சர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கினர்; கட்சியால் மீண்டும் வர முடியாது. எங்கும் மோடி வியாபித்திருக்கிறார். அவர் மக்களால் விரும்பப்படுகிறார். அவரது தொலைநோக்கை அறிவுஜீவிகள் பாராட்டுகின்றனர். அவரது வடிவில் இந்தியா கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட ஒரு எதிர்காலத்தை பார்க்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கட்சிக்கு பாதகமாக அமைந்தன. அதன் வலுவான பகுதியான தில்லியில் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. முடிவுரை எழுதப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சாமானிய மக்களின் கேலிக்கு இலக்கானார்கள். மோடியின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருந்தது. நான்கு மாநில சட்ட மன்ற தேர்தல்களில் அவர் தனி ஒருவராக வெற்றி பெற்றிருந்தார். தில்லியில் ஐந்தாவதாக தேர்தல் நடைபெற இருந்தது. இது எங்களுக்கு வாழ்வா சாவா தருணமானது. நாங்கள் சரிந்திருந்தோம், ஆனால் முடிந்துவிடவில்லை. தொண்டர்களின் மனநிலை உற்சாகமாக இருக்கவில்லை. மக்கள் கெஜ்ரிவாலின் ராஜினாமாவால் கொதித்துப்போயிருந்தனர். நாங்கள் ஒன்று திரண்டும் மீண்டும் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை கொள்ள வேண்டியிருந்தது.

எங்களிடம் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர் என அறிந்திருந்தோம். நாங்கள் அவசரப்பட்டுவிட்டதாக நினைத்தனரே தவிர நேர்மையை சந்தேகிக்கவில்லை. எங்களிடம் ஊழல் இருக்கவில்லை. மக்களை சென்று சந்திக்க தீர்மானித்தோம். ராஜினாமா செய்ததற்காக மன்னிப்பு கேட்டு, தில்லிக்காக ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து எங்களுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் எனத்தெரியும் என கூறினோம். ஆனால் 30 ஆண்டுகளில் சக்திவாய்ந்த பிரதமரான நரேந்திர மோடியுடன் மோதுகிறோம் என்பதை அறிந்திருந்தோம். டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான மோதலாக இது அமைந்தது. அவரிடம் பணம் மற்றும் ஆற்றல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் வீழ்த்த முடியாதவர் என்ற தன்மை இருந்தது. எங்களிடம் என்ன இருந்தன? பணம் மற்றும் ஆற்றலில் ஈடாக எதுவுமில்லை. எங்களிடம் ஒரு எண்ணம் இருந்தது. அது புரட்சிகரமானதாகவும், அந்த எண்ணத்தை நம்பிய தொண்டர் படையும் இருந்தன.

அது என்ன எண்ணம்? வழக்கமான அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் இந்த நாட்டை கொள்ளை அடித்துவிட்டனர், இது மாற வேண்டும் என்பது தான் அந்த எண்ணம். இந்த ஆளும் வர்கத்தை விட சிறந்தவற்றுக்கு இந்தியா ஒரு தேசமாக தகுதியுடையது என்பது எண்ணமாக இருந்தது. சாமானிய மக்களிடம் இருந்தே அதிகாரம் பாய்வதால் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகாரம் அளிக்கப்படலாம் என்பதே எண்ணமாக இருந்தது. தூய்மையான அரசியல், நேர்மையான அரசியல் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் என்பதே எண்ணமாக இருந்தது. இந்த எண்ணம் தான் உந்துதலாக, இயக்கும் சக்தியாக மாற்றத்திற்கான கிரியாஊக்கியாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சி இதை சாத்தியமாக்கும் வாகனமாக முன்வைக்கப்பட்டது. இந்த எண்ணத்தின் ஆற்றலையும் மக்கள் இதை நம்புகின்றனர் என்பதையும் அறிந்திருந்தோம். பொறுமை மற்றும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பதே முக்கியம். அதை செய்தோம். அதனால் தான் இங்கே இருக்கிறோம். 70 இடங்களில் 60 இடங்களை வென்றோம். வரலாறு காணாத வெற்றி.

இப்போது தில்லியில் உள்ள அரசு, தேசத்தின் முன் நிர்வாகம் பற்று புதிய உரையாடலை உருவாக்கி வருகிறது. தில்லியில் வெற்றியை தேடிதந்த அதே எண்ணம் பஞ்சாப்பிலும், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் சரியாக அமைந்தால் பஞ்சாப்பில் வெற்றி பெறுவோம். 2017 ல் மேலும் பல மாநிலங்களில் வெற்றி பெறுவோம். குணால் மற்றும் ரோகித் தோல்வியை ஏற்றுக்கொண்டிருந்தால் சேகர் குப்தா அவர்களை தொழில் சாதனையாளர்களாக பேட்டி கண்டிருக்க வாய்ப்பில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழு தங்கள் எண்ணத்தில் நம்பிக்கை கொள்ளாவிட்டால் இப்போது எழுதிக்கொண்டிருப்பதை நான் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். ஸ்டார்ட் அப்களுக்கு எண்ணம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை மிகவும் முக்கியம். இவற்றை பெற்றவர்கள் வெற்றி பெறுகின்றனர். ரோகித் மற்றும் குணால் வெற்றியாளர்களாக திகழ்வதால் அவர்களை வாழ்த்துவோம்.

கட்டுரையாளர்: அசுடோஷ் | தமிழில்: சைபர் சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)