தொழில்நுட்பம் மூலம் வறுமையை அகற்ற முயலும் கார்ல் மேத்தாவின் 'கோட் ஃபார் இந்தியா' திட்டம்

0

மனம் இருந்தால் மார்கம் உண்டு என்று சொல்லப்படுவது ஸ்டார்ட் அப் துறைக்கு கச்சிதமாக பொருந்தும். இதற்கு உதாரணமாக திகழும் ஒருவரை அன்மையில் சந்தித்தேன்; சிலிக்கான் வேலி கல்வி தொழில்நுட்ப நிறுவனமான எட்காஸ்ட் (EdCast Inc) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கார்ல் மேத்தா (Karl Mehta). இந்நிறுவனம் கற்றலை வாழ்நாள் நிகழ்வாக மாற்ற முயல்கிறது.

கீழ் மத்தியதர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கார்ல் தன்னைச்சுற்றி வறுமையை பார்த்திருக்கிறார். இதுவே அவரை ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே வழிகாட்டுவதற்கான எண்ணத்தை உண்டாக்கியது.

அமைதியான ஆளுமையை கொண்ட கார்ல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்- விருது வென்ற தொழில்முனைவர், பொறியாளர், நூலாசிரியர், முதலீட்டாளர், வெள்ளை மாளிகையின் முதல் இன்னவேஷன் ஃபெலோ ஆகிய சிறப்புகளை பெற்றிருக்கிறார். எனினும் அவருடைய சமீபத்திய முயற்சிகள் தான் என்னை மிகவும் கவர்கிறது; கோட் ஃபார் இந்தியா மற்றும் ஸ்கில் அப் இந்தியா (‘Code for India’ & ‘SkillUp India) ஆகிய இரண்டு திட்டங்கள் பற்றி அவர் விவரிகிறார்;

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்துடன் இணைந்த கோட் ஃபார் இந்தியா, இந்தியாவில் பிறந்து வளர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர்களை சமூக நோக்கத்துடன் செயல்பட வைக்க ஊக்கமளிக்கும் நோக்கம் கொண்டது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

கோட் ஃபார் இந்தியாவில் இந்தியாவை சேர்ந்த 5,000 சாப்ட்வேர் வல்லுனர்கள் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிலிக்கான் வேலியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பெங்களூரு பிரிவும் ஒன்றும் செயல்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் நேரம் மற்றும் திறனை தன்னார்வ முறையில் வழங்க கோட் ஃபார் இந்தியா வழி செய்கிறது.” நாம் எல்லோருமே கோடீஸ்வரராக ஓய்வு பெறும் வரை நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்க முடியாது: என்கிறார் கார்ல். இது சமூகத்திற்கு இளம் வயது முதல் நேரம் மற்றும் திறன் மூலம் திருப்பி கொடுப்பதாகும்.

வெள்ளை மாளிகையில் இன்னவேஷன் ஃபெலோவாக பணியாற்றிய அனுபவம் அவருக்கு அனைவரையும் உள்ளடக்கிய தன்மை பற்றி பலவற்றை கற்றுக்கொடுத்தது. இதன் பயனாக அவர் 'பைனான்சியல் இன்க்லுஷன் அட் தி பாட்டம் ஆப் தி பிரமிட்’ (‘Financial Inclusion at the bottom of the Pyramid’) எனும் புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் சமீபத்தில் வெளியானது.

கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் நிகழ்வாக இருக்க வேண்டும் என்று அவர் தனது எட்காஸ்ட் நிறுவனம் பற்றி கூறுகிறார். தற்போதைய கல்வி முறை தொழில் யுகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் நாம் அறிவு பொருளாதார யுகத்தில் இருக்கிறோம். அதன் வழியாகவே கல்வி மற்றும் கற்றலை நாம் நோக்க வேண்டும்.

இன்று, மக்கள் சமூக வலைப்பின்னல் கலாச்சாரத்தில் வாழ்கின்றனர். இந்த சமூக வலைப்பின்னல் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுக்கு வாழ்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும் கற்றல் மற்றும் அறிவையும் வழங்கி சமூக கற்றலை ஊக்குவிப்பதை எட்காஸ்ட் நோக்கமாக கொண்டுள்ளது.

கார்ல் மேத்தாவின் தொலைநோக்கு பற்றி புரிந்து கொள்ள அவரது முழு நேர்காணலை காணவும்: 

https://youtu.be/-dMWmxfOgQM

ஆக்கம் : Dola Samanta |தமிழில்: சைபர்சிம்மன்