பெண் தொழில்முனைவோர்களை கொண்டாடும் யுவர்ஸ்டோரி 'SheSparks' விருதுகள்! 

யுவர்ஸ்டோரி நடத்தும் SheSparks 2018 விருதுகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

1
”கனவுகளுடன் இருக்கும் சிறுமிகளே உயர் நோக்கங்களைக் கொண்ட பெண்களாக உருவாகின்றனர்.”

இந்த அற்புதமான வரிகளை எழுதியது யாரென்று தெரியாதபோதும் இந்த வரிகள் நமக்கு அளிக்கும் உணர்வு நாம் ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றுதான். இது உலகெங்கும் உள்ள அனைத்து வயதினருக்கும் பொருந்தும் விதத்தில் உள்ளது.

இன்று பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனங்களின் தலைவர்களாக, புதுமையான தீர்வுகளை வழங்கும் தொழில்முனைவோராக, வரலாற்றை மாற்றி எழுதும் எழுத்தாளர்களாக, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை உருவாக்குபவர்களாக, புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பெரியளவில் சிந்திக்கவும் அதே சமயம் கருணையுடன் நடந்து கொள்ளவும் முன்மாதிரியாக இருக்கும் பெண்கள் உலகை மாற்றி வருகின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

சிலருக்கு தங்களது லட்சியத்தையும் தலைமைப்பண்பையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பலர் அமைதியாக தங்களுக்கே உரிய எளிய முறையில் தொடர்ந்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

யுவர்ஸ்டோரியைச் சேர்ந்த நாங்கள் இப்படிப்பட்ட பெண்கள் அனைவரையும் புதுமையான பாதைகளை வகுப்பவர்கள், ஊக்கமளிப்பவர்கள், மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என விவரிக்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால் நாம் அனைவரும் அற்புதமான பெண்கள்.

சுமார் பத்தாண்டுகளாக அப்படிப்பட்ட உந்துதளிக்கும் பெண்களின் வெற்றிக்கதைகளை மிகுந்த கவனத்துடன் பகிர்ந்துவருகிறோம். இனியும் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

நம்மைப் போன்ற ஆற்றல் மிகுந்த பெண்களைப் போற்ற விரும்புகிறோம். நம்மிடம் வலிமை, மீண்டெழும்திறன், கருணை ஆகியவை நிரம்பியுள்ளது. நாம் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வகையில் ’ஷீஸ்பார்க்ஸ் விருதுகள் 2018’ (SheSparks Awards 2018) வாயிலாக நமது பெண்களைக் கொண்டாடுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறோம்.

நாட்டில் வணிகத்திலும் சமூக மேம்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வளர்ந்து வரும் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் மரியாதையே ஷீஸ்பார்க்ஸ் விருதுகள் 2018. இதில் தங்களைச் சுற்றி நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான தீர்வுகளை உருவாக்கும் இந்தியப் பெண்கள் கொண்டாடப்படுவார்கள்.

ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல், நிதி தொழில்நுட்பம் மற்றும் குறைவான வருவாய் ஈட்டுவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை, திறன் மற்றும் பயிற்சி, உணவு மற்றும் பானங்கள், கல்வி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம், நாட்டுப்புற கலை மற்றும் கைவினை, இதர சேவைகள், நுகர்வோர் இணையதளம், அழகு மற்றும் ஆரோக்கியம், பயணம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பகுதிகளில் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தால் முதல் முறையாக அறிமுகமாகும் ஷீஸ்பார்க்ஸ் விருதினை நீங்கள் வெல்லலாம்.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்பது எளிதாகும். உங்கள் வணிகத்தை 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பதிவு செய்திருக்கும் பெண்ணாக நீங்கள் இருந்தால் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தொழில்முனைவோரோ அல்லது விண்ணப்பதாரரோ அந்த நிறுவனத்துடன் இணைந்திருக்கவேண்டும். இதில் ஒரு பிரிவிற்கும் மேலாகவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

”ஒரு நிறுவனத்தின் சிஇஓ-வாக, வீட்டில் இருப்போரை அரவணைத்துச் செல்லும் குடும்பத் தலைவியாக எங்கும் பெண்கள் தலைமை வகிப்பதைப் பார்க்கலாம்,” என்கிறார் டெனீஸ் க்ளார்க்.

இந்த வரிகள் முற்றிலும் உண்மை. இருப்பினும் பெண்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு தலைமை ஏற்பதுடன் குடும்பத்தை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பையும் சரிசமமாக ஏற்றுக்கொண்டு சமன்படுத்தி வருவதையும் பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்டவர்கள் சூப்பர்ஹீரோக்களுக்கு நிகரானவர்கள். இப்படிப்பட்ட மாம்ப்ரூனர்களுக்காக ப்ரெகாநியூஸ் சிறப்பு விருதுகளை வழங்குகிறது.

நீங்கள் மாம்ப்ரூனராக இருந்தால் இதற்கான பிரத்யேக பிரிவை தேர்ந்தெடுத்து ஷீஸ்பார்க்ஸ் விருதுகள் 2018-க்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த முயற்சி, இந்த வாய்ப்பு, இந்தத் தளம் மேலும் அதிக பெண்களின் கனவுகளுக்கு சிறகளித்து அவர்கள் முழு முயற்சியுடன் தடையின்றி தங்களது லட்சியங்களை நோக்கி விரைந்திட ஊக்கமளிக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், சிஎக்ஸ்ஓக்கள், முதலீட்டாளர்கள்/விசிக்கள், வணிக உரிமையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள், முக்கியமாக பெண்கள், அத்துடன் பெண்களால் சாதிக்க முடியும் என திடமாக நம்புபவர்களின் கூட்டமைப்பாக இந்த நிகழ்வு அமையவுள்ளது.

ஷீஸ்பார்க்ஸ் 2018-ல் சில தன்னிகரற்ற பெண்கள் குறித்தும் அவர்களது பணிகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மேலும் இந்தியாவிலுள்ள பெண் தொழில்முனைவோர்கள் குறித்த நுண்ணறிவை வழங்கும் உரையாடல்களிலும் பங்கேற்கலாம்.

பெண் தலைவர்கள் மற்றும் அவர்களது சிறப்பான பணிகளைக் கொண்டாடும் இந்த நிகழ்வில் பங்கேற்க எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

இடம் : புதுடெல்லி

நாள் : மார்ச் 9, 2018 – 6.30 மணி முதல்

விண்ணப்பிக்க: SheSparks 2018

”பெண்களான நாம் நமக்காக போராடவேண்டும். ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்ள வேண்டும்.”

மிச்சல் ஒபாமாவின் உந்துதலளிக்கும் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவோம். ஷீஸ்பார்க்ஸ் 2018-ன் மூலம் நாம் நம்மையும் நம்மைப் போன்றோரையும் கொண்டாடுவதற்கான நேரம் வந்துவிட்டது.

கட்டுரை : யுவர் ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா