சென்னையில் தொடங்கிய ‘Stayzilla' இயக்கத்தை நிறுத்தியது: தோல்விக் காரணங்களை பகிரும் நிறுவனர்!

0

யோகேந்திரா வசுபால், ரூபால் யோகேந்திரா மற்றும் சச்சித் சிங்கி ஆகியோரால் 2005-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது ’ஸ்டேசில்லா’ Stayzilla. இந்நிறுவனம் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இயங்கி வந்தது. ’இந்தியாவின் மிகப்பெரிய ஹோம்ஸ்டே நெட்வொர்க்’ என பிரபலமானது. இதில் பயனாளிகள் இந்தியா முழுவதுமுள்ள ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டே குறித்து ஆராய்ந்து முன்பதிவு செய்துகொள்ள முடியும். பிப்ரவரி 23-ம் தேதி ஒரு அறிக்கையில் ஸ்டேசில்லா நிறுவனத்தின் சிஇஓ யோகேந்திரா குறிப்பிடுகையில்,

”தற்போது இயங்கும் விதத்திலிருந்து ஸ்டேசில்லா அதன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன். ஒரு மாறுபட்ட பிசினஸ் மாடலில் மீண்டும் துவக்க இருக்கிறோம். ஸ்டேசில்லாவின் அனைத்து தளங்களிலும் (வலைதளம் மற்றும் செயலி) புதிய புக்கிங் வசதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது." 

28 பிப்ரவரி 2017 வரை செக் இன் தேதி கொண்ட முன்பதிவுகள் செயல்படுத்தப்படும். 28 பிப்ரவரிக்கு பிறகு செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு விருந்தினருக்கு 100 சதவீத தொகையும் திருப்பியளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகளிலேயே இது மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவு என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் தொழில்நுட்பம், மார்கெட்டிங், செயல்பாடு, சேல்ஸ் மற்றும் சப்போர்ட் ஆகிய வெவ்வேறு குழுக்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புவது அவருக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது என்றார்.

ஸ்டேசில்லா நான்கு சுற்று நிதியுடன் 34 மில்லியன் டாலரை ஈட்டியுள்ளது. மே மாதம் 2016-ல் 13.5 மில்லியன் டாலர்கள் கொண்ட சீரிஸ் C சுற்றுதான் இறுதியானது. ஸ்டேசில்லாவிற்கு பக்கபலமாக இருந்து வெவ்வேறு நிலைகளில் நிறுவனத்திற்கு முதலீடு செய்த இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் மற்றும் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் யோகேந்திரா. மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் தருண் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், 

”ஒரு கனவு நிறைவேறாமல் அதை விட்டுவிடுவது எளிதல்ல. இதிலிருந்து மீண்டெழுந்து அதிக வலுவுடன் திரும்புவீர்கள்.”

ஸ்டேசில்லாவின் அடுத்த வடிவம் - சிக்கலில்லாத விநியோக சேனல் ?

தற்போதைய நடடிக்கைகளை நிறுத்திக்கொண்ட போதிலும் வருங்காலத்தில் ஸ்டேசில்லா ஒரு சிக்கலில்லாத விநியோக சேனலாக உருவெடுத்து சரியான வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை சென்றடையும் என்று யோகேந்திரா குறிப்பிட்டார். 

”நாங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ட்ராவல் பார்ட்னர்களுடன் இணைந்து அவர்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இந்தியன் ஹோம்ஸ்டே அளிக்க இருக்கிறோம். எங்கள் ஹோஸ்ட்களுக்கு பல பூர்த்திசெய்யப்படாத தேவைகளும் தீர்த்துவைக்கப்படாத பிரச்சனைகள் உள்ளன. இதுதான் எனக்கு அதிக தூண்டுதலை தருகிறது.”

ஸ்டேசில்லாவின் முன்னேறத்திற்கு ஒத்துழைப்பும், தனித்திறன் உருவாக்கலும் தான் முக்கிய அம்சம் என்கிறார் யோகேந்திரா. கடந்த 18 மாதங்களாக உருவாக்கிய முக்கிய பலத்தை அடைய விநியோகத்தில் தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கவனம் செலுத்துவதுதன் மூலமாகவே நிறைவேறும் என்று யோகெந்திரா நம்பிக்கை தெரிவிக்கிறார். குறிப்பாக ’ஸ்டேசில்லா வெரிஃபைட் ஹோம்ஸ்டேஸ்’ எனும் தனித்திறன் வாய்ந்த தீர்வு அவருக்கு உற்சாகமளிப்பதாக கூறுகிறார். 

நம்பிக்கையை அதிகரிக்க உருவாக இருக்கும் இந்த வெரிஃபைட் ஹோம்ஸ்டே முழுவதுமாக தொடக்க நிலையிலுள்ள மற்றும் கட்டமைப்பற்ற துறைக்கு திறன்மதிப்பீடாக அமையும். சந்தையிலுள்ளவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைத்து செல்வதுதான் பங்குதாரர்களிடம் சிறந்த மதிப்பை ஏற்படுத்த சரியான வழியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

தோல்விக்கான காரணங்கள்

ஸ்டேசில்லா வெற்றிகளை அடைந்தும் தோல்வியை தழுவியது. தெளிவான முன்னணியாக இருந்து, தொடக்கத்திலிருந்து ஒரு வெற்றிகரமான இகோசிஸ்டத்தை இந்தியாவில் அடிப்படையில் இருந்து உருவாக்கியது என்றார் யோகேந்திரா. மிகப்பெரிய தடங்கல்களாக சிலவற்றை அவர் குறிப்பிட்டார்.

1. உள்ளூர் ஒருங்கிணைப்பின் விளைவுகள் பயண சந்தையில் இல்லை

”விநியோகம் மற்றும் தேவையை சரியாக பொருத்த ஒவ்வொரு நகரமாக கவனம்செலுத்தும் அணுகுமுறையை மேற்கொள்ள இயலாது. ஒரு சில ஹோம்ஸ்டே தவிர 18 மாதங்களுக்கு முன்பு ஹோம்ஸ்டேக்களுக்கான தேவை மற்றும் விநியோகம் இருந்ததில்லை.

அதன் விளைவாக ஹோம்ஸ்டேக்களை உருவாக்குவது மற்றும் விருந்தினர்கள் அங்கே தங்குவதற்கு சம்மதிக்க வைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்வது என இந்தச் சந்தையின் இரண்டு பகுதிகளிலும் ஸ்டேசில்லா முதலீடு செய்யவேண்டியிருந்தது. 900 நகரங்களில் 8000 ஹோம்ஸ்டேக்களை எட்டியுள்ளது. ஆனால் இதற்காக அவர்களது நிதி திறனை அதிகப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

2. நுகர்வோர் விருப்பத்தில் மாற்றம் (மேக்ரோ ட்ரெண்ட்ஸ்)

இந்தியாவில் நுகர்வோர் விருப்பத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றம் காரணமாக அவர்களது நிகர வருவாய் மேலும் மோசமாகி திறம்பட விரிவாக்கம் செய்யும் திறனும் இழந்துவிட்டது. யோகேந்திரா கூறுகையில், 

“லாஜிஸ்டிக்ஸ், தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட சப்ளையர்கள், ஆன்லைன் பயனாளிகள் தேவை போன்ற மெச்சூர் மார்கெட்டில் கிடைக்கும் சமூக பயன்பாட்டிற்கு தேவையானவை இந்தியாவில் கிடைப்பதில்லை.”

ஹோம்ஸ்டே என்கிற கான்செப்ட் குறித்தும் அவர்களது ப்ராடக்ட் பயன்பாடு குறித்தும் மக்களுக்கு புரியவைப்பதில் முதலீடு செய்வதுடன் இணையதளத்தின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முதலீடு செய்யவேண்டியிருந்தது என்றார் அவர். இவ்வாறாக அவர்களது முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே போனது.

3. தள்ளுபடிகள் மற்றும் போட்டி

மற்ற பட்ஜெட் ஹோட்டல் ரூம் போட்டியாளர்களைத் தவிர 2012-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வலுவான பொருளாதார வளம் பெற்றவர்களான Oyo மற்றும் Airbnb பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் இந்தியாவில் செயல்பட்டது.

2015-ம் ஆண்டு முதல் தள்ளுபடி சார்ந்த வளர்ச்சி, பயணத் துறையில் மிகுதியாக இருந்தது. வேறு வழியின்றி ஸ்டேசில்லா கட்டாயமாக  விலைகளை அத்துடன் பொருத்த வேண்டியிருந்தது. இதனால் நிறுவனத்தால் அதன் நிர்வாகச் செலவுகளைக் கூட ஈடுசெய்ய முடியவில்லை. 

நிறுவனராக உருவான பாதை

கடந்த 11 வருடங்கள் ஒரு சிறந்த கற்றல் அனுபவத்தை தந்ததாக குறிப்பிடுகிறார் யோகேந்திரா. முதல் ஏழு வருடங்கள் எதிர்மறை மூலதனத்துடனும் நேர்மறை பணப்புழக்கத்துடனும் தங்களது வளர்ச்சிக்கான நீடித்த நிதி திறனுடனும் இருந்தது. இதுவே ஸ்டேசில்லாவின் அளவீடாக இருந்தது. தற்போதைய நிலைக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில்,

கடந்த மூன்று நான்கு வருடங்களில் என்னுடைய பாதை மாறிவிட்டது. பணப்புழக்கம் மற்றும் மூலதனத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், GMV, ரூம்- நைட் மற்றும் இதர பெருமைப்படக்கூடிய விஷயங்களை அளவீடாகக் கொண்டு இயங்கி வந்தேன்.”  

இவ்வளவு வருடங்களாக ஒரு நிறுவனத்தை நடத்திய யோகேந்திரா ஒரு வணிகத்தின் மதிப்பு என்பது அழகைப் போல ஒரு தனிமனிதனின் உள்ளுணர்வு சார்ந்தது என்று நம்புகிறார். பல அளவுகோல்கள் இருந்தாலும் உண்மையான அழகு என்பது உள்ளார்ந்தது. ஒருவருக்கு அவரது தோல் குறித்து இருக்கும் சௌகரியத்தைப் பொருத்தே அது தொடங்கும். அதேபோல ஒரு நிறுவனத்தை மதிப்பிட பல அளவுகோல்கள் இருந்தாலும் அதன் உள்ளார்ந்த மதிப்பு உள்ளிருந்தே தொடங்குதிறது. இது நிறுவனர்கள் மதிப்பிடும் அளவீடுகளைப் பொருத்தும் அவர்களின் தேர்வில் இருக்கும் சௌகரியம் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். 

கடந்த வருடம் ஆரம்ப மற்றும் நிலையான மதிப்பு அமைப்பிற்கு திரும்புவதற்கான முயற்சியில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும் நாங்கள் ஏற்கெனவே 36 மாதங்கள் வேறுபட்ட பாதையில் பயனித்ததால், மாற்று பாதைக்கு மாற 12 மாத காலம் போதுமான அவகாசமாக இருக்கவில்லை. 

யோகேந்திரா தனக்கு சௌகர்யமான ஒரு பாதைக்கு திரும்ப ஒரு தெளிவான  துவக்கமாகவே இதைப் பார்க்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஹர்ஷித் மல்லயா